12/11/2020

தீபாவளி என்றால் என்ன?

 


புராணம் கூறுவது...

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிசுணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விசுணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விசுணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விசுணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விசுணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்..

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விசுணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசூரன் ஊர் மாகிசமகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் சோதிசா என்று சொல்லப்படுகிறது.

இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை தமிழ் அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பிராமணன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுசாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பிராமணர்கள் வந்து பார்த்து, “கங்காசு நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்.. சிந்தியுங்கள்..

மாணவர்களே. உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள்.

எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பிராமணர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

தீபாவளிப் பண்டிகை என்று இன்பமும், துன்பமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன்.

தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும்.

அதாவது விசுணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விசுணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே.. இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விசுணுக் கடவுள் பூமியைப் புணர முடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு துன்பம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு?

எதையுமே நம்பாத சில பகுதறிவாதிகளுக்காக நாம் சில சான்றுகளை பார்ப்போம்..

தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல...

தீபாவளி கதையை எடுத்து கொண்டால் நராகசூரன்னை [அசுரனை] கொன்றதாகத்தான் கூற படுகின்றது .

அசுரர்கள் ,அரக்கர்கள் ,தஸ்யுக்கள் ,ராட்சதர்கள் ,குரங்குகள் ,கரடிகள் ,என்று சொல்லபடுவர்கள் எல்லாம் யார் ?வரலாற்று பேராசிரியர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம்.

'தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியர் அல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயண கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது [ரோமேஷ் சந்திர தத் எழுதிய ''புராதன இந்தியா ''என்னும் நூல் பக்கம் 52]

ராமாயண கதை என்பது ஆரியர்கள் , தென் இந்திய தஸ்யுக்கள் or தமிழர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதை சித்தரித்து காட்டுவதாகவும் ''

[சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும் ''என்ற நூல் பக்கம் 24]

''தென் இந்தியாவில் இருந்த மக்களே (தமிழர்கள்) தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் ,அரக்கர்கள் என்றும் அழைக்க பட்டிருகின்றனர் ''

[விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் ராமாயணம் என்ற தலைப்பில் 587-589 ம் பக்கம் ]

''ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும் , தஸ்யுக்கள் , அசுரர்கள் , என்றும் கூறபட்டிருக்கின்றது.. ஆரியருக்கும் , ஆரியரல்லாதவரும் இருந்து கொண்டு இருந்த அடிபடையான பகமையை பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம் . இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்த பகைமைக்கு காரணம் ''

[டாக்டர் ராதா முகர்ஜி எழுதிய ''இந்து நாகரீகம்''என்னும் நூல் பக்கம் -69].

ராமாயணமும் , மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும் , உள் நாட்டு சண்டைகளையும் பற்றி சொல்வதாகும் ..

[ஜவஹர்லால் நேரு எழுதிய ''டிஸ்கவரி ஆப் இந்திய நூல் பக்கம்-76-77]

''இராமாயணம் என்பது தென்இந்தியாவில் ஆரியர் பரவியதை குறிக்கும் ''

[ஜவஹர்லால் நேரு -அதே நூல் பக்கம்-82]

இந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக தெரிந்து கொண்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகளில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அசுரர்கள் எல்லாம் நம் தமிழர்கள் என்ற பேருண்மை சூரிய ஒளி போல தெரிந்து விடும் ..

நம்மை அழித்தற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பது தான் கேள்வி..

இந்நிலை இப்படியே சென்றால் நாளைய தலைமுறை மே 18 யைக் கூட விழாவாக  கொண்டாடுவர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.