14/04/2017

ஐடி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக சிடிஎஸ் அறிவிப்பு – ஐடி தொழிலாளர்கள் அமைப்புகளின் ஒருங்கிணைந்த பிரச்சார இயக்கம்...


சர்வதேச ஐடி நிறுவனம் காக்னிஸன்ட் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ்(சிடிஎஸ்) அறிவித்துள்ள பணிநீக்கத்திற்கு (Layoff) எதிராக KPF (Knowledge Professionals Forum), FITE (Forum for IT Employees) மற்றும் NDLF IT Employees Wing ஆகிய மூன்று அமைப்புகள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் பல்வேறு ஐடி பார்க் வளாகங்கள் முன்னர் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அவர்கள் துண்டுப் பிரச்சார இயக்கம் நடத்தினர்.

ஓஎம்ஆர் சாலையில் உள்ள டைடல் பார்க் எதிரில் தொழிலாளர்கள் வெளியே வரும் மாலை வேளையில் இந்த மூன்று இயக்கங்களின் போராளிகள் துண்டுப் பிரச்சாரங்களை விநியோகித்தனர். சிடிஎஸ் அறிவித்துள்ள லேஆஃப் சட்டவிரோதப் பணிநீக்கம் என்றும் கட்டாயப் பணிநீக்கம் என்றும் அவர்கள் ஐடி தொழிலாளர்களுக்கு வலியுறுத்தினர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இதே போல் பலத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. அப்போது தன்னுடைய நிறுவனத்தின் செயல்திறன் குறைந்த தொழிலாளர்களை வெளியேற்றுவதாக டிசிஎஸ் அறிவித்தது. அதே பாணியில், சரியாக செயல்படாத தொழிலாளர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற உள்ளதாக சிடிஎஸ் அறிவித்துள்ளது.

இதனால் 10000 வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் பிசினஸ் ஸ்டான்டர்ட் எனும் பத்திரிக்கை எழுதிய கட்டுரையில் தொழிலாளர் பணிநீக்கத்திற்கு முதலீட்டார்களுடன் சிடிஎஸ் போட்டுள்ள ஒப்பந்தம் தான் காரணம் என்பது தெளிவாகி உள்ளது.

எலியட் மேனேஜ்மென்ட் எனும் முதலீட்டாருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் நிறுவனத்தின் Non GAAP Operating Margins 19.5 சதத்தில் இருந்து(2016) 2019க்குள் 22 சதம் வரை உயர்த்த நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. செலவுகளை கட்டுப்படுத்தல், செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல், மற்றும் இயந்திரமாக்கத்தை அதிகரித்து தொழிலாளர்களை குறைத்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் லாபத்தை அதிகரிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனால் தன்னுடைய தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 2.5 சதம் வரை குறைக்க முயற்சிக்கின்றது.

சிடிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்து ஒரு மாதமாக வேலை செய்யும் சிலப் பெண் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் நடவடிக்கைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தனர். செயல்திறன் குறைவாக உள்ள தொழிலாளர்களே பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தங்களுடைய மேலதிகாரிகள் கூறினர் என்றும், ஒவ்வொரு ப்ராஜக்டிலும் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் 1, 2, 3, 4 என வகைப்படுத்தப்படுவர் எனவும், 4வது நிலையில் உள்ள தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அவர்கள் கூறினர்.

இப்பணிக்கு வரும்போதே இத்துறையில் பணிப்பாதுகாப்பு இல்லை என்று அறிந்துள்ளதாகவும், தங்களுக்கு இக்கதி நேராது என்று நம்புவதாகவும் அவர்கள் கூறினர்.

தொழிலாளர்களின் இக்கூற்று நிர்வாகத்தின் கூற்றை பிரதிபலிப்பதாகவே உள்ளது. 2014ல் டிசிஎஸ் தொழிலாளர்களை பணிநீக்கம்(25000 தொழிலாளர்களை டிசிஎஸ் பணிநீக்கம் செய்துள்ளதாக சில செய்திகள் கூறின) செய்த போதும், இவ்வாறு திறனுடன் செயல்படாத தொழிலாளர்களை விருப்பமற்ற பணிநீக்கம்(involuntary attrition) செய்வதாக டிசிஎஸ் நிறுவனம் கூறியது. ஆனால் 5-8 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்கத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக அனுபவமில்லா புதுத் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்துவதே டிசிஎஸ் நோக்கம் என ஒரு உண்மை அறியும் குழுவின் விசாரணை முடிவு செய்தது.

டிசிஎஸ் தொழிலாளர்கள் பணிநீக்கம் ஐடி துறைகளில் உள்ள மோசமான பணி நிலைமைகளை வெளிச்சம் போட்டு காட்டியது. இவற்றை எதிர் கொள்ள தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கை தேவை என்பது தெளிவாகியது.

அதை அடுத்து ஐடி தொழிலாளர்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்து அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சில அமைப்புகள் ஈடுபட்டனர். இதில் ஒன்றான FITE இயக்கத்தின் பிரதிநிதி வினோத், நிர்வாகம் தொழிலாளர்கள் பிரச்சனையை தனியார் பிரச்சனையாக்க முயற்சிக்கின்றனர் எனக் கருதுகிறார். ‘ப்ராஜக்ட் இலக்கை பற்றிப் பேசும் போதும் மட்டும், கூட்டு முயற்சி என அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தொழிலாளர் பிரச்சனை என்றால் அது தனிப் பிரச்சனை என்ற ரீதியில் அணுகுகின்றனர். இதை பயிற்சி காலம் முதல் அவர்கள் உளவியல் ரீதியாக தொழிலாளர்களுக்கு கற்பிக்கின்றனர்’ என அவர் கூறினார். தாங்கள் பணிக்கு சேரும் போது தங்கள் ஊதியத்தை மற்றத் தொழிலாளரகளுடனோ மற்றவர்களுடனோ பகிர மாட்டோம் என ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளதாக சிடிஎஸ் இளம் தொழிலாளர்களும் உறுதி செய்தனர்.

சிடிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வெளியேறிய 5 வருடம் அனுபவம் மிக்க ஒரு தொழிலாளர், சிடிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் தனது தோழர்கள் பலர் மிகவும் பதட்டமாக உள்ளதாகவும் ஒரு தோழர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பணிநீக்கம் செய்யப்பட்டவரை அவரது மேலதிகாரி அழைத்து உங்களது செயல்திறன் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை அதனால் நீங்கள் ஒரு மாதத்தில் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் பேச்சு வார்த்தைக்கு இடமேயில்லை என அவர் கருதினார். சிடிஎஸ் நிறுவனத்தில் கொடுக்கப்படும் ஊதியம் செயல்திறன் அடிப்படையில் கொடுக்கப்படுவதால் பலருக்கு ஊதியம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐடி துறையின் பணிநீக்கத்திற்கான அடிப்படை அணுகுமுறை பற்றி KPF தலைவர் வெல்கின் இவ்வாறு கூறுகிறார்: தொழில்நுட்பத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் வெகுவேகமாக மாறி வருகின்றன. அதனால் பழைய தொழில்நுட்பத்தை அறிந்த தொழிலாளர்கள் தேவையில்லை என நிர்வாகம் அவர்களை வெளியே தள்ளுவது எளிதாகிறது. ‘தங்களுக்கு வேண்டும் போது அவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்திருந்தாலும் சரி, எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் படித்திருந்தலும் சரி அவரைப் பணியில் வைத்து போதுமான பயிற்சி கொடுத்து நிர்வாகம் அவர்களை வேலைக்கு வாங்கிக் கொண்டது. தொழில்நுட்பம் மாறும் போது இதே தொழிலாளர்களை மீண்டும் பயிற்சி கொடுக்காமல் அவர்கள் திறன் சரியில்லை என்பது சரியல்ல. மீண்டும் தொழிலாளர்களை பயிற்சி கொடுப்பது நிர்வாகங்களால் முடியும், அது அவர்களின் கடமையும் கூட என வெல்கின் கூறுகிறார். ஐடி தொழிலாளர்கள் புது தொழில்நுட்பங்கள் குறைந்த செலவில் கற்று கொள்ள KPF டெக் காரிடார்(Tech Corridor) எனும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சங்கம் தான் தீர்வு..

தொழிலாளர் கூடத்துடன் பேசிய பல தொழிலாளர்கள் தங்களுடைய பிரச்சனைகளை தீர்க்க தங்களுக்கென்று தொழிற்சங்கம் தேவை என்றும் ஆனால் அதற்காக என்ன செய்வது என்று தெரியவில்லை எனக் கூறினர். தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இணைவதை ஐடி துறை தடுத்து வருகிறது.

தொழிற்சங்கத்தில் இணைந்தால் தங்கள் வேலை வாய்ப்புகளை நாஸ்காம் ரெஜிஸ்ட்ரி(NASSCOM Registry) மூலம் ஐடி துறை தடுக்கும் எனத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். தொழிற்சங்கம் அமைப்பது ஒரு அடிப்படை உரிமை என்றாலும் தொழிற்சங்கம் அமைத்தால் தொழில் வாய்ப்புகள் குறையும் என்ற ஒரு கருத்தை ஐடி துறை பரப்பி வருகிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த வருடம் NDLF ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தது. அப்போது தொழிலாளர் துறை முதன்மை ஆணையர் ஐடி தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமை, தொழிற்தாவா சட்டம் அனைத்தும் பொருந்தும் என்று கூறினார். டிசிஎஸ் தொழிலாளர் பணிநீக்கத்திற்கு பின் iஃபட் கட்டாயப் பணிநீக்கத்திற்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்துள்ளது.

சிடிஎஸ் பணிநீக்கத்திலும் வழக்குகள் தொடர FITE முயற்சித்து வருகிறது. நெடிய மக்கள் போராட்டமும் அரசையும் நிர்வாகத்தையும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகுக்கும் என iஃபட் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

இம்மூன்று அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நடக்கும் இயக்கத்தினால், ஐடி தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளும் முயற்சி வலுப்பெற்றுள்ளது. மஹீந்த்ரா சிட்டி, மறைமலை நகர், மற்றும் சென்னை நகர்புறங்களில் தங்கள் இயக்கத்தை வளர்க்க கேபிஎஃப் முயற்சித்து வருகிறது. இணையதளங்களில் இது குறித்த விழிப்புணர்வு இயக்கத்தையும் KPF நடத்தி வருகிறது. இது தான் கார்ப்பரேட் நடைமுறை என்று ஐடி தொழிலாளர்கள் கருதாமல் தங்களுடைய உரிமைகளுக்காக போராடுவார்கள் என இயக்கத்தின் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

தொழிலாளர் துறை அமைச்சருக்கு மனு அளிப்பதற்கு FITE பிரதிநிதிகள் முயற்சித்து வருகின்றனர்.

சென்னையில் தொழிற்சங்க அமைப்புகள் உள்ளதனால் கோயம்பத்தூர், பூனே, கொல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் தொழிலாளர்கள் பணிநீக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். அதனால் தேசிய அளவில் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்கு FITE இயக்கம் முயற்சித்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.