16/04/2017

அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்? சென்னையில் பரபர சந்திப்புகள்...


அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரனை லோக்சபா துணைசபா நாயகர் தம்பிதுரை திடீரென சந்தித்தார்.

ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா விகாரத்தில் வசமாக சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்வது குறித்து அதிமுக (அம்மா) கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா கொடுத்த விவகாரத்தில் வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கினார் விஜயபாஸ்கர். தொடர்ந்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லியில் இருந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது. விஜயபாஸ்கரை நீக்காவிட்டால் ஒட்டு மொத்த அமைச்சரவைக்கே ஆபத்து எனவும் டெல்லி எச்சரிக்கை விடுத்துள்ளது.

விஜயபாஸ்கருக்கு தினகரன் ஆதரவு
இதையடுத்து விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். ஆனால் டிடிவி தினகரனோ, விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என வலியுறுத்தி வருகிறார்.

எடப்பாடி போர்க்கொடி?

டிடிவி தினகரனின் பிடிவாதத்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் டிடிவி தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் எப்போது வேண்டுமானாலும் போர்க்கொடி தூக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

பரபர சந்திப்புகள் - இதனிடையே மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் நேற்று திடீரென லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து இன்று சென்னை பெசன்ட் நகரில் டிடிவி தினகரனை தம்பிதுரை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போதும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்?

விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்தால் தான் டெல்லியின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும் என நிலவரங்களை இச்சந்திப்பின் போது தம்பிதுரை விளக்கியதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் பரபர விவாதங்கள் நடைபெற்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.