30/04/2017

வடகொரிய கடல் பகுதிக்கு விரைந்தது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்...


வடகொரியா ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்த சில மணிநேரங்களில், அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று கொரிய தீபகற்பத்தின் கடற்பரப்பை சென்றடைந்துள்ளது.

அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்து வருவதற்கு மத்தியில், யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் இந்த பிராந்தியத்திற்கு திருப்பப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று வட கொரியா மீதான ராஜீய அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கேட்டுக் கொண்டார்.

அதற்கு ஒரு நாளுக்கு முன்னர்தான், வட கொரியாவோடு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

வட கொரியாவிடம் இருந்து இன்னும் ஆத்திரமூட்டும் செயல்பாடுகள் வெளிப்படலாம் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே லண்டனில் பேசியபோது எச்சரித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை மீண்டும் ஒரு பேலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது.

என்ன வகையான ஏவுகணை என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
தோல்வியில் முடிந்திருந்தாலும் கூட ஏவுகணை செலுத்தியதன் மூலம் சீனாவின் விருப்பத்தையும் பெரிதும் மதிக்கக் கூடிய அந்நாட்டு அதிபரையும், வட கொரியா அவமதித்துள்ளது. இது மோசம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுவரை வட கொரியா ஏவுகணை சோதனை குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

வட கொரியா மற்றும் தென் கொரியா இரண்டும் ராணுவ பயிற்சிகளை நடத்திவரும் நிலையில், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

நேற்று ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நடைபெற்ற வடகொரியா நிலவரம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லர்சன், தனது அண்டை நாடுகள் மீது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் நிஜமானது என்று தெரிவித்தார்.

அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் திறனை வடகொரியா மேம்படுத்தும் காலம் நீண்ட தொலைவில் இல்லை என்று டில்லர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில், வடகொரியாவை வழிக்குக் கொண்டுவர, அந்த நாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என மற்ற நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதே நேரத்தில், ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்கும் எண்ணத்துக்கு எதிராக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி எச்சரிக்கை விடுத்தார்.

அதே போல், ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாதது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.