07/06/2017

நேற்று அந்த கோஷ்டி... இன்று இந்த கோஷ்டி.. டெல்லியின் வரலாறு காணாத பாஜக வின் கேவல அரசியல்...


இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த அரசியல் ஆளுமைகள் உலா வந்த தமிழக மண்ணில் இப்போது நாடு இதுவரை காணாத அசிங்க அரசியல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது...

ஒரு ஆளும் கட்சியை மூன்றாக உடைத்து ஒவ்வொரு நாளும் ஒரு கோஷ்டிக்கு ஆதரவு என நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது டெல்லி.

தமிழகத்தில் திராவிட இயக்கம், கட்சிகள் வலிமையாக இருப்பதை எப்போதுமே டெல்லி சகித்துக் கொண்டதில்லை.

இதனால்தான் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா பிரிந்து திமுகவை உருவாக்கிய போது டெல்லியின் சதி இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.

அண்ணாவிடம் இருந்து ஈவிகே சம்பத் பிரிந்த போதும், திமுகவில் இருந்து எம்.ஜிஆர் விலகி அண்ணா திமுகவை உருவாக்கிய போதும் டெல்லியின் பின்னணி குறித்து பேசப்பட்டது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக சிதறியபோதும் டெல்லியின் கைங்கர்யம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இப்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக துண்டு துண்டாக சிதறிக் கொண்டிருப்பதற்கு பின்னால் டெல்லி இருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஓபிஎஸ் முதல்வராக இருந்த போதும் சரி இபிஎஸ் முதல்வராக இருக்கிற போதும் சரி டெல்லியின் காலடிகளில் நெடுஞ்சாண்கிடையாகவே தமிழக அரசு வீழ்ந்து கிடக்கிறது.

அதிமுகவை உடைத்து ஓபிஎஸ் கோஷ்டியை உருவாக்கியது டெல்லி. இன்று சசிகலா கோஷ்டியை உடைத்து எடப்பாடி அணியை உருவாக்கியிருப்பதும் டெல்லி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தமிழகத்தில் நிலையற்ற அரசியல் தன்மையை உருவாக்குவதில் எப்போதுமே டெல்லி முனைப்பு காட்டிதான் வருகிறது.

சமூக நீதி கொள்கைகளுக்கும் உறுதியான மதச்சார்பற்ற தன்மைக்கும் சாவு மணி அடிக்கும் டெல்லியின் சதித்திட்டங்களுக்கு தமிழக அரசு இப்போது உடந்தையாகிப் போய்விட்டது.

நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்சனை, மாட்டிறைச்சி தடை போன்ற விவகாரங்களில் டெல்லிக்கு உக்கிரத்தைக் காட்டி வந்தது தமிழகம்.

ஆனால் இப்போது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் எங்களது சதிராட்டங்களுக்கு உடன்படுங்கள் என டெல்லி பகிரங்கமாகவே மிரட்டுகிறது. தமிழக ஆளும் கட்சியின் கோஷ்டிகளும் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு டெல்லிக்கு காவடி தூக்குவதில் போட்டி போடுகிறார்கள்.

இப்போது சசிகலா கோஷ்டியின் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் 'திராவிட' முகமூடி அணிந்து டெல்லியை எதிர்க்க துணிகிறார்கள். இந்த எதிர்ப்புகளை எல்லாம் ரெய்டுகள், கைதுகள் மூலம் எதிர்கொள்ளத்தான் செய்யும் டெல்லி. தமிழகத்தில் டெல்லியை ஆளும் தேசிய கட்சிகளால் நேரடியாக ஆட்சி அதிகாரத்தை செலுத்த முடியாது என்பது அரை நூற்றாண்டுகால வரலாறு.

இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் திராவிட அரசியல் கட்சிகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி குளிர்காய்வதில் டெல்லிக்கு அலாதிபிரியம். அதுதான் இப்போதும் நடந்தேறி கொண்டிருக்கிறது.

இந்தியாவையே அதிரவைத்த அரசியல் ஆளுமைகள் வலம் வந்த மண்ணில் இப்படியான கோஷ்டி அரசியலை உருவாக்கி அசிங்க அரசியலை டெல்லி அரங்கேற்றி வருவது காண சகிக்காத வரலாற்று கொடுமை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.