04/06/2017

மீண்டும் உயிர்த்தெழும் மாமத யானைகள்...


ஒரு காலத்தில் வாழ்ந்து அழிந்தொழிந்து போன டைனசார் போன்ற விலங்குகளை மீண்டும் பூமியில் உயிர்த்தெழச் செய்து நடமாட வைப்பது சினிமாவில், நாவல்களில் வரும் கற்பனையாக மட்டுமே இருந்து வந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இப்படிப்பட்ட கற்பனைகள் நிஜமாகப் போகின்றன. அதற்கான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் ஆரம்பித்து விட்டார்கள்.

குளோனிங் செய்யும் மாயம்.. 10,000 வருடங்களுக்கு முன்பு சைபீரிய பனிப் பிரதேசங்களில் வாழ்ந்து முற்றிலுமாக அழிந்து போன ரோமங்கள் நிறைந்த மாமத யானைகளை ரஷ்யாவையும் கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் மீண்டும் உருவாக்க முயன்று வருகிறார்கள்.

சர்வதேச விஞ்ஞானிகள் இதற்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். குளோனிங் முறையில் உருவாக்கப்படும் இந்த மாமத யானைகள் மீண்டும் சைபீரியப் பகுதிகளில் நடமாடப் போகின்றன.

இந்தத் திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆதரவளித்திருக்கிறார்.

குளோனிங் தொழில்நுட்பத்தில் சிறந்த தென்கொரியப் பேராசிரியர் ஹவாங் வூ இதற்கான முதற்கட்ட வேலைகளை ரஷ்ய விஞ்ஞானிகளோடு தொடர்ந்து செய்துவருகிறார். இதன் விளைவாக மாமத ரோம யானையை மீண்டும் உருவாக்க அடிப்படை ஆராய்ச்சிகள் முடிந்துவிட்டன.


இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு அழிந்து போன விலங்குகளின் மரபணுப் பொருட்கள் தேவை. இதற்காக, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் சைபீரிய பகுதிகளில் இறந்து பனியால் மூடப்பட்டுப் பாதுகாப்பாக இருந்த மாமத யானையின் தசைப் பகுதிகள் சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்டன.

அந்த யானையின் ரத்தம்கூட உறையாமல் இருந்தது.

தோண்டி எடுக்கப்பட்ட இந்தத் தசைகளிலிருந்து செல்கள் கிடைத்தால் அதிலிருந்து பல மரபணுத் தகவல்களைப் பெறலாம்.

ஒருவேளை நல்ல தகுதியான செல்கள் கிடைப்பின் நன்றாக இருக்கும் அல்லது செயற்கை முறையில் மரபணுக்களைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த மரபணுக்களைப் பிரித்தெடுக்கும் வேலையை பென் மாகாணப் பல்கலைக்கழகம் 70 சதவீதம் முடித்துவிட்டது.

மாமத யானைகளின் மரபணுக்கள் ஆசிய யானைகளின் மரபணுக்களோடு நெருக்கமாக இருக்கின்றன. மாமத யானைகளின் மரபணுக்களை ஆசிய யானைகளின் இனப்பெருக்க செல்களோடு புகுத்தி மாமத யானைகளை உயிர்த்தெழச் செய்ய முடியும். இது சாத்தியம் என்று கோட்பாட்டு ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இப்படி உருவாக்கப்படும் புதிய மரபணுவுக்கு ஆசிய யானைகள் தாயாக இருக்கும். இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமானால் ஆசிய யானை தன்னுடைய மரபணுக்களைவிட மாமத யானைகளின் மரபணுக்களை அதிகம் கொண்ட யானைகளை உற்பத்தி செய்யும்.

இப்படி உருவான மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாமத யானைகள் உருவத்தில் ஆசிய யானைகளைப் போல் இருக்கும்.

ஆனால், இந்தக் கலப்பு யானைகள் இன்னொரு கலப்பு யானையோடு சேர்ந்து பிறக்கும் குட்டிகள் மாமத யானைகளைப் போல் இருக்கும்.

இம்மாதிரி அழிந்தொழிந்து போன விலங்குகளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று அறிவியல் ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டாலும் இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்வதற்குப் பலவிதமான கேள்விகள், தடைகள், நெறிமுறைகள் இருக்கின்றன.

இயற்கையின் போக்கில் உயிரினங்கள் அழிந்து போவதும் புதிய உயிரினங்கள் உருவாவதும் வழக்கம்.

ஆனால், ஒரு உயிரினத்தை அழிப்பதோ எப்போதோ அழிந்து போன உயிரினத்தை மறுபடியும் உயிர்கொடுத்து உலவ விடுவதோ இயற்கையின் போக்கில் குறுக்கிடுவதாகும்.

இயற்கையின் போக்கில் குறுக்கிடுவது பெரும் ஆபத்து..

ஆகவே, பனி நிறைந்த சைபீரியப் பகுதிகளில் மீண்டும் மாமத யானைகள் பவனிவரவிருப்பது குறித்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி கொண்டாலும் சூழலியலாளர்கள் கவலையுடனே இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.