08/06/2017

மஹாராஷ்டிரா மற்றும் மத்தியபிரதேச விவசாயிகளின் மாபெரும் உரிமை போராட்டம்...


கடந்த ஜுன் 1 முதல் அனைத்து விவசாயிகள் சங்கங்களும் ஒன்றிணைந்து காலவரையற்ற முழு வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுபோன்ற ஒரு விவசாயிகள் வேலைநிறுத்தத்தை சமீபத்தில் நம்நாடு கண்டதில்லை.

தங்களது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைகூட இல்லையே என தெரியபடுத்தும் நோக்கில் காய்கறிகள், பழங்கள், பால், பருப்புகள் என சாலையில் கொட்டி தங்கள் ஆதங்கத்தை தெரியபடுத்தி வருகிறார்கள்.

அம்மாநில விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளுக்கும் பொருந்தகூடியது.

எல்லோருக்கும் M.R.P. என்றால் Maximum Retail Price அதிகபட்ச விற்பனை விலை என தெரிந்திருக்கலாம்.

ஆனால் M.S.P என்றால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை Minimum Secured Price குறைந்த பட்ச ஆதாரவிலை.

எனது உற்பத்திப் பொருளுக்கு குறைந்தபட்ச விலையாவது கொடு என்பதே இதன் எளிய வடிவம்.

அரிசி, கரும்பு, கோதுமை போன்ற ஒரு சிலவற்றிற்கு மட்டுமே அரசு M.S.P யை நிர்ணயித்து உள்ளது மற்ற பயிர்களுக்கு அவ்வாறு ஏதுமில்லை.

இந்த M.S.P அதிகரிக்க வேண்டும், அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கை.

அதனோடு பயிர்க்காப்பீடு, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற சில முக்கிய கோரிக்கைகளும் அடங்கும்.

ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான கோரிக்கையை முன் வைத்து நடக்கிற போராட்டமாக இதை நாம் கருத வேண்டும்.

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1982 விவசாயிகள் மத்திய பிரதேசத்தில் மட்டும் தற்கொலை செய்து மாண்டுள்ளனர்.

வாழவழியின்றி அரசாங்கத்திடம் உதவி கேட்டு போராடிய விவசாயிகளுக்கு துப்பாக்கி குண்டுகளை தான் பதிலாக கொடுத்துள்ளது மத்திய பிரதேச அரசு.

இதுவரை போராட்டத்தில் போலீஸின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து மாண்டவர்கள் எண்ணிக்கை ஐந்து பேருக்கு மேல். காயம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையோ மிகவும் அதிகம்.

உலக மக்கள் உண்ண உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் மரியாதை இதுதானா?

உடனடியாக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அரசாணை வெளியிட வேண்டும்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும் மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு கடுமையான கண்டனத்தையும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

இவண்
NSP.வெற்றி
செயல்தலைவர்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்
&
ஏர்முனை இளைஞர் அணி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.