18/06/2017

மரபணு மாற்றம் எனப்படும் ஜி.எம் பயிர்கள் (Genetically Modified) பி.டி பயிர்களை ஏன் எதிர்க்கிறீர்கள்?


ஜி.எம் தொழில்நுட்பத்தால் மகசூல் கூடும் என்று ஆய்வறிக்கை எதுவும் இல்லை. இது, மீண்டும் மாற்றமுடியாத தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தால் சூழலியல் கேடுகள் ஏற்படுகின்றன என்பதைப் பல ஆராய்ச்சிகள் நிறுவியுள்ளன. மரபணு மாற்ற பி.டி பருத்தியைக் கொண்டு வந்தபோது, ‘இதனைப் பூச்சித் தாக்காது’ என்றார்கள். ஆனால், பூச்சி தாக்கியது; தாக்க மட்டும் செய்யவில்லை; பூச்சிகளும் வீரிய மடைந்தன. மொத்தச் சூழலியலும் கெட்டது.

நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்தானே இந்தத் தொழில்நுட்பத்துக்கு அரசு அனுமதி அளித்திருக்கும்?

இந்திய அரசாங்கம், ஜி.எம் பயிர்களைப் பிரபலமாக்கத்தான் நமது வரிப்பணத்தைப் பயன்படுத்துகிறதே தவிர, இதுவரை ஜி.எம் பயிர்களின் பாதுகாப்பு குறித்து ஓர் உருப்படியான ஆய்வும் நடத்தவில்லை.

நமது பயோடெக்னாலஜி துறை, கோடிக்கணக்கான பணத்தை ஜி.எம் பயிர் தொழில்நுட்பத்தை வளர்க்கச் செலவு செய்கிறது.

ஆனால், இதில் சிறுதொகையைக்கூட... இந்தப் பயிர்கள் என்ன மாதிரியான மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை ஆய்வுசெய்யப் பயன்படுத்தவில்லை.

பி.டி பருத்தியை இந்தியாவில் அறிமுகம் செய்தபோது, இது அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம் வளர்த்த தொழில்நுட்பம் என்பதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அறிமுகம் ஆகியுள்ள ஜி.எம் கடுகு இந்தியப் பல்கலைக்கழகங்களின் தொழில்நுட்பம் தானே?

நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடியதற்குப் பல்வேறு காரணிகள் இருந்தன. அதில் ஒரு காரணம், அது மான்சான்டோ உருவாக்கம் என்பது. ஒரு தொழில்நுட்பம் பாதுகாப்பற்றதாக இருக்கும்போது, அதை யார் கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியமில்லை. நம் அம்மா கொடுக்கிறார்கள் என்பதற்காக நாம் விஷத்தை அருந்துவோமா? யார் கொடுத்தாலும் விஷம், விஷம்தான். நம் இந்தியப் பல்கலைக்கழகம், நம் நிலத்தில் பயிரிட விஷத்தைப் பரிந்துரைக்கிறது என்பதற்காக, அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜி.எம் கடுகைக் கொண்டுவர நம் அரசு முன்வைக்கும் வாதங்கள் என்ன?

இதனால் அதிக மகசூல் கிடைக்கும்; இறக்குமதி குறையும் என்கிறார்கள். ஆனால், நம் மரபு ரக கடுகு விதைகளிலிருந்தே அதிக மகசூலைப் பெற்றுவிட முடியும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஜி.எம் கடுகை அறிமுகப்படுத்துவதால் பலர் வேலை இழப்பார்கள் என்று சொல்லி வருகிறீர்களே?

விவசாயப் பொருளாதாரம் பெண் களைச் சார்ந்து இயங்குகிறது. ஓர் ஏக்கரில் கடுகு பயிரிடப்பட்டால், களை அகற்றும் பணிக்காக சராசரியாக ஒரு பெண்ணுக்கு 10 நாள்களுக்கு வேலை கிடைக்கும்.  ஆனால், இந்த ஜி.எம் தொழில்நுட்ப கடுகு, நிலத்தில் பெரும் களைச்செடிகளை உண்டாக்கவல்லது. அதை, மருந்து தெளிப்பதால் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும்.

நம் தேசத்தில் இப்போது கடுகு உற்பத்தியாகும் 65 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் ஜி.எம் கடுகு  பயிரிடப்படும் பட்சத்தில், 12 கோடி பெண்கள் பணி இழப்பார்கள். இவர்கள் எல்லாம், சமூகத்தின் பொருளாதார அடுக்குகளில் கீழ்நிலையில் இருப்பவர்கள். இருக்கும் வேலையையும் இழந்து இவர்கள் என்ன செய்வார்கள்? இவர்களை வேலையிழக்கச் செய்துவிட்டு, இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மருந்து கம்பெனிகளுக்கு மாற்றித் தரும் வேலையைத்தான் அரசு இப்போது செய்கிறது.

ஜி.எம் கடுகினால் வேறு என்ன விளைவுகள் ஏற்படும்?

ஜி.எம் தொழில்நுட்பம் நம் விவசாயத்தை ரசாயனமயமாக்கும். இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படும். ஏற்கெனவே பி.டி பருத்தி, கேடுதரும் புதிய பூச்சிகள் உண்டாகக் காரணமாக அமைந்தது. அதுபோல, புதிய களைச்செடிகளின் வருகைக்கு இது காரணமாக அமையும். விவசாயிகளை, நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கும். தேனீக்கள், கடுகுப் பூவைத்தான் அதிகம் விரும்பும். இந்தத் தொழில்நுட்பத்தால் தேனீக்கள் பாதிக்கப்படும். தேன் உற்பத்திக் குறையும். ஆறு லட்சம் பேர் தேன் உற்பத்தித் துறையைச் சார்ந்திருக்கிறார்கள். நேரடியாக அவர்கள் வாழ்வாதாரம் சிதையும்.

ஒருபக்கம் பி.ஜே.பி அரசாங்கம், நம் பாரம்பர்யத்தைப் புனிதப்படுத்துகிறது; மரபுப் பெருமை பேசுகிறது; மாடுகளைக் காக்க வேண்டும் என்கிறது. இன்னொரு பக்கம் ஜி.எம் பயிர்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

பி.ஜே.பி ஒன்றும் மாடுகள் நலன் குறித்தெல்லாம் கவலைப்படவில்லை. மாடுகள் பெருக வேண்டும் என்று நினைக்கும் ஓர் அரசாங்கம், இப்படியொரு விவசாயிகள் விரோதச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்காது. உள்ளூர் மாட்டுச் சந்தை மெள்ள அழிந்துகொண்டிருக்கிறது.

அவர்களுக்கு நிதி அளிப்பவர்களுக்கு அவர்கள் விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள்.

பதிவு - மு.நியாஸ் அகமது

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.