09/07/2017

மராட்டிய கன்னட ரஜினி என்னும் பச்சோந்தி...


தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஜெயலலிதாவை அதுவரை தீவிரமாக ஆதரித்துவந்த தமிழ்நாட்டு வலதுசாரிகளுக்கு அவர் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஊழல் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் அதைவிட முக்கியமானக் காரணங்கள் இருந்தன. சசிகலாவின் சுற்றமும் சமூகமும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தியது, ஊடகங்களுக்கு எதிரான ஜெயலலிதாவின் போக்கு, அவர் வீரமணியின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டது, இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குப் போட்டவர் அடித்து முடமாக்கப்பட்டது, சேஷன் மீது நடந்தத் தாக்குதல் முயற்சி என்று எத்தனையோ காரணங்களால் ஜெயலலிதாவுக்கு ஒரு மாற்றாக ரஜினிகாந்தை முன்வைக்கத் தொடங்கினர்.

எண்பதுகளின் தொடக்கத்திலிருந்தே ரஜினி தமிழகத்தின் முன்னணி நட்சத்திரமாக இருந்தும் ஜெயலலிதா நல்ல பிள்ளையாக இருந்த வரையில் அவர் ஒரு அரசியல் சக்தியாக எவராலும் முன்வைக்கப்படவில்லை.

அதேபோல தனக்கு அரசியலில் நுழையும் நோக்கம் உண்டு என்பதை விஜய்காந்த் தனது செயல்பாடுகள் மூலம் பல ஆண்டுகளாக உணர்த்தி வந்தும் 2004-ம் ஆண்டு தேர்தலில் ரஜினியின் அரசியல் கனவுகளுக்கு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் சங்கு ஊதப்படும் வரை அவர் ஆதரிக்கப்படவில்லை.

ரஜினி மீது இன்னும் நம்பிக்கை இழக்காத சிலர் விஜயகாந்தை ஆதரிக்கத் தொடங்கவில்லை என்பதையும் கவனிக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு குதிரை மீது தான் சவாரி.

அந்நாட்களில் ரஜினியை எல்லாம் வல்லவராக, தமிழ்நாட்டின் மிகப் பெரும்பாலான மக்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றவராக, நினைத்தால் அடுத்த தேர்தலில் முதல்வராகிவிடக்கூடிய ஆற்றல் கொண்டவராக ஊடகங்கள் சித்தரித்து வந்தன.

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் பெரும் வெற்றிக்கு ரஜினியின் ஐந்து நிமிட தொலைக்காட்சி பிரசாரம் முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது. அந்த தேர்தலில் 'ரஜினி அலை' வீசியதாக பலர் திரும்பத்திரும்ப எழுதிவந்தார்கள். நல்ல வேளையாக ரஜினியின் உண்மையான செல்வாக்கு அடுத்து வந்த தேர்தல்களில் தெளிவாக வெளிப்பட்டது.

தொண்ணூறுகளில் ரஜினிக்கு உருவாக்கப்பட்டிருந்த புனிதபிம்பம் இன்று அப்துல்கலாமுக்கு இருக்கும் புனிதபிம்பத்துக்கு சற்றும் குறைந்ததல்ல.

மகாத்மாவின் மறுபிறப்பே என்று ரஜினியை விளிக்கும் சுவரொட்டிகளை பார்த்த நினைவிருக்கிறது.

இந்திய ஊடகங்கள் ஒருவரை புனிதபிம்பமாக சித்தரிக்கின்றன என்றால் அவர் வறுமை, அடிப்படை சுகாதாரமின்மை, சாதிக் கொடுமைகள் போன்றப் பிரச்சனைகளைக் குறித்து மறந்தும் கூட அக்கறை கொள்ளாதவராகவும் அதே நேரத்தில் இந்தியாவை
வல்லரசாக்குதல், கங்கையையும் காவிரியையும் இணைத்தல், சந்திரனில் இறங்குதல் மற்றும் இன்னபிற கனவுகளை சர்வரோக நிவாரணியாக விநியோகிப்பவராகவும் இருப்பார் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஆன்மீகம், தத்துவம் போன்றவற்றில் நாட்டம் உள்ளவராகவும், மதத்துறவிகளிடம் உபதேசம் பெறுபவராகவும், அக்கம்பக்கம் பார்க்காமல் ஆகாயப் பார்வைப் பார்ப்பவராகவும் இருந்தால் இன்னும் நல்லது.

இந்த தகுதிகள் பெரும்பாலும் அமையப்பெற்ற ரஜினி புனிதபிம்பமாக மாறியது இயல்பானதே.

ரஜினிக்கு சமூகப் பார்வை என்று ஒன்று இருக்குமானால் அது பிற்போக்கானது என்பதில் ஐயமில்லை.

படிப்பறிவோ, உலக அறிவோ இல்லாத லட்சக்கணக்கானவர்கள் தன்னை ஒரு ஆதர்சமாக காண்பதை அறிந்திருந்தும் எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டுவைப்போம் போன்ற நிலபிரபுத்துவ துதிபாடல்களை தன் படங்களில் அனுமதித்தவர் அவர்.

ஜெயலலிதாவி டம் நேரடியாக மோத தைரியம் இல்லாமல் பெண்களை இழிவுப்படுத்தும் வசனங்களைத் தன் படங்களில் தொடர்ந்து பேசி வந்தவர். பொதுப் பிரச்சனைகளில் அவர் அக்கறை வெளிப்படுத்தியதெல்லாம் தானோ தனது நண்பர்களோ (மணிரத்தினம், ராஜ்குமார்..) பாதிக்கப்பட்டபோது மட்டுமே.

தெனாலி படம் பார்த்த பிறகு தான் சிலோன் பிரச்சனை யின் தீவிரம் புரிந்தது என்று சொல்லும் அளவிற்கே அரசியல் அறிவு உள்ள ஒருவரைத் தான் தமிழக மக்களை உய்விக்க வந்தவராக ஊடகங்கள் கொண்டாடின.

அரசியலில் தான் இப்படி அரிச்சுவடி தெரியாமல் இருக்கிறார் என்றில்லை, இத்தனை ஆண்டுகளாக ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டும் ஆன்மீகம் குறித்த அவரது புரிதல் ஒரு சராசரி பாமர பக்தனிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டதாகத் தெரியவில்லை. (உலகில் பாவிகள் அதிகரித்ததால் தான் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் தோன்றுகின்றன என்று அறிக்கை வெளியிட்டதை இங்கே சொல்லலாம்.)

அடுத்த எம்.ஜி.ஆராக சித்தரிக்கப்பட்ட ரஜினியிடம் எம்.ஜி.ஆரிடம் இருந்த சில திறமைகளும் குணங்களும் அறவே கிடையாது. சிறுவயதிலேயே தமிழகத்துக்கு வந்து நாடகக்குழுவுடன் ஊர்ஊராக சுற்றித்திருந்து பலதரப்பட்டத் தமிழர்களுடன் பழகிய எம்.ஜி.ஆரைப் போலல்லாது ரஜினி தமிழகத்தின் கிராமப்புற, சிறுநகர வாழ்வு குறித்து நேரடியாக அறியாதவர். மக்கள் கூட்டத்திற்கிடையே திளைப்பதும், கிழவிகளைக் கட்டிப்பிடிப்பதும், குழந்தைகளை முத்தமிடுவதும் எம்.ஜி.ஆருக்கு இயல்பாகவே வந்தது அவர் குணமும் கூட. ரஜினியோ தன்னை சந்திக்கவரும் ரசிகர்களை வருடத்திற்கு ஒருமுறை கூட சந்திக்க மறுப்பவர்.

முக்கியமாக, தன்னை நம்பி வருபவர்களுக்கு தாராளமாக உதவிகள் செய்து அவர்களது நன்றியையும் விசுவாசத்தையும் சம்பாதிக்கும் குணம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. ரஜினி தனக்கு இத்தகைய ஒரு வாழ்வை அளித்த திரைத்துறைக்குக் கூட எதுவும் செய்ததில்லை.

கமலஹாசன், நாசர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் திரைத்துறையில் ஈட்டிய பணத்தையெல்லாம் நல்ல படம் என்றுத் தாங்கள் கருதுவதை எடுக்க அந்த துறையிலேயே மறுபடியும் இடுகின்றனர்.

ஆனால் ரஜினி தமிழ் திரைத்துறையை அவ்வப்போது வந்து பணம் அள்ளிச்செல்லும் ஒரு களஞ்சியமாக பயன்படுத்துகிறாரே தவிர அதன் மேம்பாட்டுக்கு எதுவும் செய்ததில்லை.

தன்னைக் கடுமையாக விமரிசித்த சிலருக்கு பண உதவியையோ அல்லது நடிப்பதற்கான வாய்ப்பையோ வழங்கி அவர்களை ஊடகங்களில் தன்னைப் புகழ வைத்தது தான் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு அவர் செய்த ஆகப்பெரிய உதவியாகத் தெரிகிறது.

மொத்தத்தில், ஒரு மனிதரிடம் இருக்க வேண்டிய குறைந்தப்பட்ச சமூக அக்கறையைக் கூட ரஜினி வெளிப்படுத்தியதில்லை என்பதே உண்மை.

ஒரு கோடி முட்டாள் ரசிகர்களுக்கு என்று புரியுமோ.. காசுக்கு நடிக்கும் கூத்தாடி உனக்கு தலைவனா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.