19/07/2017

இராமனும் தமிழனே...


2300 ஆண்டுகளுக்கு முன்பு கி.மு.295 வாக்கில்.. சந்திரகுப்த மௌரியரின் மகன் பிம்பிசாரன் ஆட்சி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவிவிட்டது.

தமிழ்மண் மட்டும்  எதிர்த்து நின்றது.

கரிகாலனின் தந்தையான இளஞ்சேட்சென்னி தலைமையில் தமிழ் மூவேந்தரும் சேர்ந்து கூட்டணி அமைத்து அந்த பெரிய படையெடுப்பை முறியடிக்கிறார்கள்.

இந்த செருப்பாழி போரின் வெற்றியைப் பாடினார் ஊன்பொதி பசுங்குடையார்.

இளஞ்சேட்சென்னி அவருக்கு அளவுக்கதிமாக விலையுயர்ந்த புதிய ஆபரணங்களை அளிக்கிறான்.

புலவரின் குடும்பத்தினர் அந்த நகைகளை எப்படி அணிவது என்று தெரியாததால் கண்டபடி அள்ளிப்போட்டுக் கொள்கின்றனர்.

இதை இராவணன் சீதையைக் கடத்திச் சென்ற போது வழிநெடுக அவள் கழற்றி எறிந்த நகைகளை குரங்குகள் கண்டபடி அணிந்து கொண்டதுடன் ஒப்பிடுகிறார் புலவர்.

கடுந்தெறல் *இராமன்* உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு

(புறநானூறு 378)

இராமன் இராவணனை வென்றபிறகு பாண்டிய நாட்டுக்கு வருகிறான்.

கோடி என்ற இடத்தில் (தனுஷ்கோடி) ஒரு ஆலமரத்தடியில் ஆமர்ந்து வேதங்களை ஓதுகிறான்.

(இராவணனைப் போல இராமனும் தமிழ்ப் பார்ப்பானோ?)

அப்போது அம்மரம் (அதில் இருந்த உயிர்கள்) ஒலி எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருந்ததாம்.

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் *இராமன்* அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே

( அகநானூறு 70)

மணிமேகலை கூறுவதைக் கேளுங்கள்..

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

(உலக அறவி புக்க காதை, 10-20)

பூமியில் பிறந்த நெடியோனின் (திருமாலின்) அவதாரம் (இராமன்),
கடலை வழிமறிக்க குரங்குகள் கொண்டு வந்து போட்ட மலைகள் எல்லாம் கடலில் அமிழ்ந்து மறைந்தது போல
என் அடங்காப் பசியினால் நான் உண்ணும் உணவு மறைந்து விடுகிறது என்று வருகிறது.

இதே மணிமேகலையில் வேறொரு இடத்தில்..

மீட்சி என்பது *இராமன்* வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்

(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)
என்று வருகிறது.

அதாவது இராமன் வென்றான் எனில் இராவணன் தோற்றான் என்றுதானே பொருள் என்று வினவுவது போல் உள்ளது.

சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதையில்..

அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்

என்று கோவலன் இல்லாத காவிரிப் பூம்பட்டிணத்தை
காட்டிற்கு சென்ற ராமன் இல்லாத அயோத்தியுடன் ஒப்பிடுகிறார் இளங்கோவடிகள்.

அன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் விளங்கியது தமிழே.

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லைத் தோன்று மொழிந்து தொழில் கேட்ப

என்று மதுரைக்காஞ்சி கூறுகிறதே..

இராவணனைப் போலவே கரிய நிற இராமனும் ஒரு தமிழனே.

இருவருக்கும் நடந்த போர்க்கதை (இராமாயணம்) அன்றே தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஏற்கனவே தெரிந்த ஒன்றைத்தானே எடுத்துக்காட்டாகக் காட்ட முடியும்.

எனவே வடமொழி புளுகுப் புராணமான இராமயணம் தமிழர் வரலாற்றை திரித்து எழுதிய கதையே ஆகும்.

https://ta.m.wikipedia.org/wiki/சங்கப்_பாடல்களில்_இராமாயணம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.