25/08/2017

தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை.. ஆதார் வழக்கில் 9 நீதிபதிகளும் ஒரே குரலில் தீர்ப்பு...


செல்போன், சிம்கார்ட், குடும்ப அட்டைக்கு இனி ஆதார் கார்டு அவசியம் இல்லை - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு...

ஆதார் கட்டாயம் என்ற வழக்கில் தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை என்று அரசியல் சாசன அமர்வில் உள்ள 9 நீதிபதிகளும் ஒரே மாதிரி தீர்ப்பளித்துள்ளனர்.

கேஸ் இணைப்பு, மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் பென்சன் என அனைத்திற்கும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து, ஆதார் கார்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதுதொடர்பான வழக்கு ஒன்று கடந்த ஜூலை மாதம் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நபர் ரகசியம் என்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வருமா என்பது குறித்து 9 பேர் அடங்கிய அமர்வு விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்தியா முழுவதும் எதிர்பார்த்திருந்த இந்த வழக்கின் தீர்ப்பை 9 நீதிபதி கொண்ட அமர்வு இன்று கூறியது.

அதில், தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை எனப் பரபரப்பாக தீர்ப்பை நீதிபதிகள் அளித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பில் முக்கியத்துவமும் சிறப்பும் என்னவென்றால், அமர்வில் இருந்த 9 நீதிபதிகளும் ஒருமித்தக் குரலில் ஒரே மாதிரியாக அந்தரங்கம் அடிப்படை உரிமை என்று கூறியுள்ளனர்.

பொதுவாக நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடு வரும். அப்போது எத்தனை நீதிபதிகள் ஒரே கருத்தை கூறியிருக்கிறார்கள் என்பதைப் பொருத்து பெரும்பான்மை கருத்து தீர்ப்பாக அளிக்கப்படும்.

ஆனால் இந்த வழக்கில் அனைத்து நீதிபதிகளும் ஒரே கருத்தை தீர்ப்பாக அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.