31/08/2017

சீனப் பெருஞ்சுவரும் கட்டுக்கதையும்...


மனிதர்கள் இன்று வரை மாபெரும் அதிசயப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். அதில் சீனப் பெருஞ்சுவரும் கண்டிப்பாக ஒன்றானது என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால் பலரால் நம்பப் படும் ஒரு தவறான தகவல் என்ன தெரியுமா?

மனிதர்கள் உருவாக்கியதில் அந்தச் சீனப் பெருஞ்சுவரை மட்டும் தான் விண்வெளியில் இருந்தும் பார்க்க முடியும் என்கின்ற கட்டுக்கதை தான்.

உண்மை சொல்லப்போனால், மிக நுணுக்கமான காமெராவைக் கொண்டே, நாம் பார்ப்பது சீனப் பெருஞ்சுவர் தானா என்பதைத் தீர்மானிப்பதே கஷ்டம். அப்படி இருக்க, பரந்த பூமியில் ஒரு மிகவும் சிறிய பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் சீனப் பெருஞ்சுவரைக் காண முடியும் என்பது முற்றிலும் சாத்தியம் இல்லாததாகும்.

இந்தக் கட்டுக்கதை விண்வெளியைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கும் காலத்திற்கு முன்பில் இருந்தே பரப்பப்பட்டு வருகின்றது. பல கிலோ மீட்டர்களுக்கு பரவி நின்று கொண்டு இருக்கும் சீனப் பெருஞ்சுவரின் பிரம்மாண்டமும், மக்கள் இந்தக் கட்டுக்கதையை ஏற்றுக் கொண்டதற்கான காரணமாக இருக்கலாம். அது சரி, சீனப்பெருஞ்சுவரை ஏன் விண்வெளியில் இருந்து பார்க்கமுடியாது என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தச் சுவர் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கற்பாறைகள் கொண்டு கட்டப்பட்டதால், அது கட்டப்பட்ட கற்களின் வண்ணத்தில் தான் இருக்கிறது. அதாவது அந்தச் சுவரின் வண்ணமும், அதன் சூழலின் வண்ணமும் ஒரே மாதிரி இருப்பதால், அதனை விண்வெளியில் இருந்து அடையாளம் காண்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம் ஆகும். எனவே, விண்வெளியில் இருந்து சீனச் சுவரைக் காண முடியும் என்பது வெறும் கட்டுக்கதையாக மட்டுமே மக்களின் இடையே வாழ்ந்து வரும்.

சரி, சீனப்பெருஞ்சுவரை விண்வெளியிலிருந்து பார்க்க முடியாது என்பது தெரிய வந்துவிட்டது. அப்படி என்றால் மனிதர்கள் படைத்த ஒன்றையும் விண்வெளியிலிருந்து காணமுடியாது என்றா அர்த்தம்? இல்லைவே இல்லை.

விண்வெளியிலிருந்து மனிதனால் காண முடிகின்ற, மனிதனால் உருவாக்கப்பட்ட மூன்று படைப்புக்களைப் பார்க்கலாம். அவை தான் பெரிய நெடுஞ்சாலைகள், அணைகள் மற்றும் நகரங்கள் ஆகும். அதுவும் இவை அனைத்தும் வெளிச்சத்தில் மூழ்கி இருக்கும் நேரத்தில் மட்டும் தான் காண முடியும் என்பதே உண்மை.

செய்தி - Dr. Niroshan Thillainathan

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.