26/10/2017

தமிழரின் உயிரைக் காப்பற்ற 5 மணி நேரத்தில் 11 லட்சம் ரூபாய் திரட்டிய கேரள கிராமம்...


மதுரையைச் சேர்ந்த ஜெயன், நாமக்கல்லைச் சேர்ந்த மாரியம்மாளைத் திருமணம் முடித்த கையோடு கேரளாவில் குடியேறிவிட்டார். இந்தத் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிங்காவனம் என்ற கிராமத்தில் மனைவி, மகள்களுடன் வசித்துவந்தார். ஜெயன், சலவைத் தொழில் செய்துவந்தார். கிராம மக்களின் அன்பைப் பெற்றிருந்தார். கிராம மக்களுக்கு ஜெயனின் உழைப்பும் நேர்மையும் மிகவும் பிடித்துப்போனது. ஜெயனை ‘தமிழர்’ என்ற கண்ணோட்டத்துடன் அவர்கள் பார்க்காமல் தங்களுள் ஒருவராகவே கருதினர்.

தற்போது 45 வயதான ஜெயனுக்குச் சிறுநீரகப் பிரச்னை இருந்தது. கடந்த ஆறு மாதங்களாக மிகவும் அவதிப்பட்டார். சலவைத் தொழிலில் அவரால் ஈடுபட முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனார். வாரத்துக்கு இரு முறை டயாலிஸிஸ் செய்யவேண்டி இருந்தது. வறுமையும் வலியும் அவரைச் சூழ்ந்துகொண்டன. ஜெயனின் நிலைகுறித்து அறிந்த கிராம மக்கள் வருத்தமடைந்தனர். இத்தனை ஆண்டுகாலம் தங்களுக்காக உழைத்த அவருக்கு, கைம்மாறு செய்யக் கருதினர். தொடர்ந்து இரு கிராம மக்களும் சேர்ந்து, ஜெயனின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்ட முடிவுசெய்தனர்.

‘ஜெயனின் உயிர் காக்கும் கமிட்டி' என்ற பெயரில் தனி இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. இரு கிராமங்களைச் சேர்ந்த 5 பேர், அதில் உறுப்பினர்களாக இருந்தனர். வழக்கமாக, கேரளாவில் மார்க்ஸிஸ்ட்-பாரதிய ஜனதா கட்சியினரும் எந்த விஷயத்திலும் கைகோத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், ஜெயனைக் காப்பற்றும் விஷயத்தில் பாரதிய ஜனதா, மார்க்ஸிஸ்ட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இணைந்தனர். இரு கிராமங்களிலும் உள்ள வழிபாட்டுத் தளங்களிலும் ‘ஜெயனின் மருத்துவச் செலவுக்காக மக்கள் இயன்ற பங்களிப்பை வழங்கலாம்' என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அக்டோபர் 15-ம் தேதி விடுமுறை தினத்தில் கமிட்டியினர் கையில் வாளி ஏந்தி நிதி திரட்ட வீதி வீதியாகச் சென்றனர். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேரத்தில் 11.25 லட்சம் ரூபாய் திரண்டது. தங்கள் அன்பைப் பெற்ற சலவைத் தொழிலாளியின் உயிரைக் காப்பாற்ற கிராம மக்கள் நிதியை அள்ளி வழங்கினர். திரண்ட நிதி ஜெயன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. அடுத்த மாதம் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கவுன்சிலர் டிகோ தாமஸ் என்பவர் கூறுகையில், “அக்டோபர் 14-ம் தேதி வாகனத்தில் சென்று ‘ஜெயனுக்காக நிதி திரட்ட வருகிறோம்' எனக் கடைசியாக ஒருமுறை அறிவிப்பு வெளியிட்டோம். அடுத்த நாள், 15-ம் தேதி நிதி திரட்ட நடந்தே சென்றோம். கோட்டயம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2,500 வீடுகளில் நிதி திரட்டினோம்.

கூலித்தொழிலாளர்கள்கூட தங்களது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர். குழந்தைகள் 50 ரூபாய் கொடுத்தனர். சிலர் 25 ஆயிரம் ரூபாய் வரை நிதியளித்தனர். 10 லட்சம் ரூபாய் நிதி திரட்டுவதை இலக்காக வைத்திருந்தோம். திரண்டதோ... 11.25 லட்சம்'' என்கிறார்.

கிராம மக்கள் செய்த உதவியால் உயிர் பெற்றுவிடலாம் என ஜெயனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. “கடந்த ஆறு மாதங்களாக டயாலிஸிஸ் செய்துவந்தேன். ஒருகட்டத்தில் மருத்துவர்கள், ‘சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யவில்லை என்றால், உயிர் பிழைக்க முடியாது' என்று கூறிவிட்டனர். மனம் உடைந்துபோனேன். எனக்கு இரு பெண் குழந்தைகள். நான் செத்துப்போனால் அவர்களை யார் பார்த்துக்கொள்வார்கள்? என்னிடம் சேமிப்பும் இல்லை. இந்தக் கிராமத்து மக்களின் அன்பைத் தவிர நான் எதையும் சம்பாதித்துவிடவில்லை. அந்த அன்புதான் இன்று என் உயிரை மீட்டுத்தந்துள்ளது'' என ஜெயன் நெகிழ்கிறார்.

கவுன்சிலர் தாமஸ் கூறுகையில், “எங்கள் மண்ணில் முருகன் என்ற தமிழர் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே இறந்துபோனார். அந்தச் சம்பவம் எங்களை வெகுவாகப் பாதித்திருந்தது. தற்போது, ஜெயனின் சிகிச்சைக்கு உதவியதன் மூலம் அந்தக் களங்கத்தைத் துடைத்திருக்கிறோம்” என்றார்.

அழகால் மட்டுமல்ல, குணத்தாலும் கடவுளின் தேசம் ஆகிவிட்டது கேரளம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.