23/10/2017

எலும்பு தேய்மானம் தடுக்கும் சூரிய ஒளி...


எலும்பு என்பது மனிதனின் உடலில் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உள் உறுப்புகளுக்கு  பாதுகாப்பாக அமைந்து உடலை தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள். மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வதும்  எலும்புகளே. இதில் ரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், குருதிச் சிறுதட்டுகள் போன்ற முக்கிய ரத்த உறுப்புகள் உற்பத்தி  செய்யும் தொழிற்சாலைகளாகவும் அமைந்துள்ளன.

மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.பொதுவாக எலும்புகள் பலவகையான  வடிவங்களில் அமைந்துள்ளன. இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும். அது போல் மிகவும் உறுதியான  எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன. இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு  அமைந்துள்ளன. எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந்துள்ளன. இவை தேன் கூட்டு அமைப்பை  ஒத்துக்காணப்படும் முப்பரிமாண உள்ளமைப்புகளை கொண்டு எலும்புகளுக்கு விறைப்பு தன்மையை கொடுப்பது எலும்புத்  திசுக்கள்தான்.

மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண் புழை, நரம்பு,ரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும். எலும்புகள்  உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் அமைந்துள்ளது.மூளை, கண், இதயம், நுரையீரல்  போன்ற மென்மையான உறுப்புகளுக்கு  பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன. இந்த எலும்புகளில் 50  சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.

எலும்பில் கால்சியம், பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. நமது உடல்  நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இந்த கால்சியம்  சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும். எலும்பு தேய்மானம்மனிதன் முதுமை அடையும்போது உடல்  உறுப்புகளில்  ஏற்படும் செயல் மாற்றங்களினால் எலும்புகளும் சேதமடைய ஆரம்பிக்கின்றன. இதனை நாம் நமக்கு ஏற்படும்  பக்க விளைவுகளில் இருந்து உணர முடியும்.

வயது செல்லச் செல்ல தேய்வுகள் அதிகமாகி நோயின் தீவிரம் மனிதனை முடக்கும்.எலும்புகள் உறுதியானதாக அமைய  முக்கியமாக கால்சியம் என்ற தாது உப்பு அவசியமாகிறது. இந்த தாது உப்பை நாம் உண்ணும் உணவில் இருந்து எலும்புகள்  எடுத்துக் கொள்ளுகின்றன.  நாம் முதுமையை நெருங்க நெருங்க இத்தன்மை மெதுவாக குறைந்து விடுவதால் எலும்புகளில்  கால்சிய குறைபாடு காரணமாக தேய்மானம் ஏற்படுகிறது.

எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானால் எலும்பு முறிவு ஏற்படும். இதுவே  எலும்பு தேய்மானம் ஆகும். காரணங்கள்ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ்  காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது.

பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் எலும்பு தேய்மான நோய்  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும்.உடலில் கால்சியம் சத்து  குறைவதும், வைட்டமின் “D”  குறைபாடும் ஏற்படும்.

ஆண்களை பொறுத்தவரை புகைப்பழக்கம், குடிப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்க முறை  ஆகியவை எலும்பு தேய்மான நோய்க்கு முக்கிய காரணமாகும். மெனோபாஸ் பருவம்பெண்களுக்கு மாதவிடாய் காலம் முடிந்த  பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது.

முக்கியமாக பெண்களில்  “மெனோபாஸ்” எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன்  மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து விடுவதால் இந்த குறைபாடு  ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் எலும்பு தேய்மானம் ஏற்பட காரணமாகிறது.  வைட்டமின் “D”  குறைபாடுகிராமப்புறங்களில் குழந்தைப்பருவம் முதலே கால்சியம் சத்தில்லாத உணவுப்பழக்க வழக்கம்  இருந்து வருகிறது.

மேலும் குழந்தைகளுக்கு பால் சத்து குறைவதும் எலும்பு தேய்மானத்துக்கு காரணமாகும். வைட்டமின் ‘டி’  குறைவு, ஊட்டச்சத்தில்லாத உணவு, வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, வேலை இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பது  மற்றும் மரபுக் காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது.

குளிர்பானம் குடித்தல்: குழந்தைகள் குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர். பாட்டில் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட  குளிர்பானங்களில் பொஸ்பேட் சத்து அதிகமாக உள்ளது. பொஸ்பேட்டுகள் அதிகமானால் எலும்புகளுக்கு செல்லும் கால்சியம்  சத்து குறையும். எனவே சிறு வயதில் இருந்தே குளிப்பானங்களை குடிக்கக்கூடாது. சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதன்  மூலம் கால்சியம் அளவைத் தக்கவைக்க முடியும்.

பக்க விளைவுகள்...

எலும்பு முறிவு, மூட்டு வலி, மூட்டு வாதம், கழுத்து எலும்பு தேய்மானம், முதுகு எலும்பு தேய்மானம், முதுகு வலி,  உடல்  சோர்வு, அசதி, முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல், நடையில் தளர்வு... தீர்வு என்ன?

முதியவர்கள் குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.

தினமும் 15 நிமிடமாவது சூரிய ஒளியில் உடல் படுவது அவசியம். இதன் மூலம் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின்  ‘டி’ தோல் மூலம் உறிஞ்சப்படும்.

கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம்.  இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். சோயாவையும்  உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது. இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.

மீன்களை தினம்தோறும் சேர்த்து கொள்வது நல்லது.

புகை பிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

கால்சியம் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. இதை மருத்துவரின் ஆலோசனைப்பெற்று சாப்பிடலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.