31/10/2017

ஜிஎஸ்டி யின் நவீன கொள்ளை...


வரி வரம்புக்குள் உட்படாத நிறுவனங்கள் நம்மிடம் வரி வசூலிக்கத் தகுதியுள்ளதா என்பதை, ஒரே நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம். அந்த நிறுவனம் அளிக்கும் பில்லில் GSTIN  எண், அதாவது ஜி.எஸ்.டி வரி விதிப்பதற்கான அனுமதி எண் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி அந்த பில்லில் அந்த எண் இல்லை என்றால், அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்றே அர்த்தம். ஒருவேளை அந்த பில்லில் ஜி.எஸ்.டி எண் இருந்தும் உங்களுக்குச் சந்தேகமா... கவலை வேண்டாம், www.gst.gov.in என்ற இணையதளத்தில் `Search Tax Payer' என க்ளிக் செய்தால் GSTIN எண் கேட்கும். அதில் உங்கள் பில்லில் உள்ள எண்ணைப் பதிவிடுங்கள் அப்படிப் பதிவிட்டவுடன்

நிறுவனத்தின் பதிவுப் பெயர்.
மாநிலம்
பதிவுத் தேதி
நிறுவனத்தின் வரி செலுத்தும் வகை
GST பதிவின் நிலை
போன்ற சில தகவல்கள் உங்களுக்குத் தெரியவரும்.

இந்தத் தகவலுடன் நிறுவனத்தின் பெயரோ அல்லது ஜி.எஸ்.டி எண் என அந்த பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணோ பொருந்திப்போகவில்லை என்றால், நீங்கள் வரி செலுத்தவேண்டிய அவசியமே இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ளலாம். அதன் பிறகு, அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுங்கள். அந்த பில்லை உரிய ஆதாரமாகக்கொண்டு புகார் அளித்து இதுபோன்ற ஏமாற்றுப்பேர்வழிகளைக் களையலாம். 14404 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

ஏமாற்றும் நிறுவனத்திடம் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நீங்கள் மொபைலை எடுத்து ஆன் செய்தாலே சில நிறுவனங்கள் பயந்து, உண்மையை உடனே ஒப்புக்கொண்டு, உங்களை சமாதானப்படுத்த முயற்சிக்கும். சில நிறுவனங்கள் எளிதில் ஒப்புக்கொள்ளாது.  அத்தகைய நிறுவனங்களிடம் நாமும் விடாப்பிடியாக வாதாடி, ஏமாற்றப்படுவதில் இருந்து தப்பிக்க வேண்டும்.

சாமானிய மக்கள் வரி கட்டுவது என்பதே மிகப்பெரிய விஷயம். அப்படிக் கட்டும் வரிகள் உரிய முறையில் சென்று சேராமல், அந்த நிறுவனமே எடுத்துக்கொள்வது என்பது வாடிக்கையாளர்களுக்குச் செய்யும் துரோகம் மட்டுமல்ல, சட்டரீதியிலான குற்றமும்கூட. இதுபோன்ற தவறுகளைக் களைய, மக்களுக்கும் முழு அதிகாரம் உண்டு. உரிய வரிகளைக் கட்டுங்கள் என்று வலியுறுத்தும் அரசு, மக்கள் செலுத்தும் வரி வந்து சேருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனித்தாலே நாட்டுக்கு வேண்டிய வருமானம் வரும்; நாடும்  நாட்டு மக்களும் பாதுக்காக்கப்படுவர்.

அப்பாவி மக்களிடம் சில வியாபாரிகள் கொள்ளையடிப்படுவதை நாம் அனுமதிக்கலாமா ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.