04/12/2017

கொந்தளித்த பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி...


கன்னியாகுமரியில் மக்கள் கதறும் போது, முதல்வர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதா..?

ஒக்கி புயலால் தென் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் தீவு போன்று காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்தார்.

பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உதவிகளை செய்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:

கேரளா அரசு மீட்பு பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தமிழக முதல்வரோ நூற்றாண்டு விழா நடத்துவதில் குறியாக இருக்கிறார்.

இந்த பகுதிகளில் நல்ல குடிநீர் இல்லை. குழந்தைகளுக்கு பால் இல்லை. நிவாரண பணிகளுக்காக ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறியுள்ளனர். இது எதற்கும் பயன்படாது.

இந்த பகுதிகளில், 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மத்திய அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை நிவாரண உதவி செய்ய வேண்டும். இது தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை. கேரளா, லட்சத்தீவுகளிலும் ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குறைந்தபட்சமாக ரூ.10 லட்சம் நிவாரணமாகவும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.

முதற்கட்டமாக இந்த பகுதிகளில் மின்சாரம், பால், குடிநீர், உணவு வழங்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை கணக்கிட்டு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

அமைச்சர்கள் விருந்தினர் மாளிகையில் இருந்தால் என்ன நடக்கும்? பால கிருஷ்ணாபுரம் போன்ற பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்ட்டுள்ளன. அங்கு சென்று ஆய்வு செய்யட்டும். அப்போது தான் பாதிப்பு அவர்களுக்கு தெரியும்.

நிவாரணமாக ஒதுக்கியுள்ள ரூ. 25 கோடியில் என்ன செய்ய முடியும்? எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு ரூ.500 கோடி செலவு செய்கிறார்கள். இந்த விழா வேண்டாம் என்று தான் கூறி வருகிறோம். அதனை நிவாரணத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

2015 சென்னை வெள்ளத்திலேயே பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் ஆனால், இன்னும் இல்லை. தேவைப்பட்டால் பிரதமர், உள்துரை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசுவேன். முக்கியமான தேவை பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தரவேண்டியது. பிறகு தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நூற்றாண்டு விழா எல்லாம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் இருக்க நல்ல குடிநீர் வழங்க வேண்டும். இந்த பகுதிகளில், பாமக சார்பில் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஒருசில இடங்களில் மின்சார சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இது போதாது. விருதுநகர், மதுரை போன்ற மற்ற மாவட்டங்களில் இருந்து ஊழியர்களை வரவழைத்து பணிகளை சீரமைக்க வேண்டும்.

இந்த பகுதிகளில், இரண்டு நாட்களில் நல்ல குடிநீர் வழங்காவிட்டால், அதன் பிறகு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

பின்னர் தோமையாறு கிராமத்தில் உள்ள ரப்பர் தோட்டங்களையும், அப்பகுதியில் உள்ள தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:

தோமையாறு கிராமத்தில் ரப்பர் தோட்டங்களில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட லட்சக்கணக்காண மரங்கள் நாசமாகியுள்ளது. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அடுத்த 7 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

இங்கு ரப்பர், தென்னை ஒருலட்சம் ஏக்கருக்கு மேலாகவும், வாழை, நெல் போன்றவையவும் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் 5 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிப்பதற்கு நல்ல குடிநீர், குழந்தைகளுக்கு பால் இல்லை. உணவு பொருட்கள் வரவில்லை.

மீட்பு பணிகள் இந்த பகுதிகளில் நடைபெறவேயில்லை. அதிகாரிகள் இந்த பகுதிகளுக்கு வந்து நிவாரண உதவிகளை விரைந்து செய்ய வேண்டும், என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.