07/02/2018

திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும் - தேவ நேயப் பாவாணர் (1959)...


தமிழ் என்னும் சொல் தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை 'அம்' ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும்.

கடல் கோளுக்குத் தப்பிய குமரிக் கண்டத் தமிழருள் ஒரு சாரர் வடக்கே செல்லச் செல்ல, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும், மொழிக் காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திராவிடமாகத் திரிந்தது. திராவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திராவிடமாய்த் திரிந்ததினாலேயே, வட நாடுகளை வேற்று மொழி நாடென்னாது "மொழி பெயர் தேயம்" என்றனர் முன்னோர்.

"மொழி பெயர் தேசத்தாயிராயினும்" என்பது குறுந்தொகை (11).  தமிழ் திராவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்க தமிழம் என்னும் பெயரும் திரமிளம்- த்ரமிடம்- த்ரவிடம் எனத் திரிந்தது.

ஒப்பு நோக்க : தோணி - த்ரோணி (வட சொல்) , பவழம்- ப்ரவாளம் (வ), பித்தளை- இத்தடி (தெலுங்கு), குமி-குலி (தமிழ்).

தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிகுந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர, சோழ, பாண்டியர் தொன்று தொட்டுத் தமிழகத்தைப் புகழ் பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது; திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திராவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேத காலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டுகட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்சீயர் தமிழிலக்கணத்தைத் "த்ராவிட சாஸ்த்ரம்" எனக் குறித்திருப்பதையும் காண்க.

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும் , தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடுகூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.

எந்நாட்டிலும் மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள் நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ் நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும். ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப்பெறுதல் வேண்டும்.

உலகின் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே.
ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும் பொருட்படுத்தாது, 'நான் தமிழன்' என ஏக்கழுத்துடன் ஏறு போற் பீடு நடை நடக்க,

தாழ்வுணர்ச்சி நீங்குத் தகைமைக் கட்டங்கிற்றே
வாழ்வுயர்ச்சி காணும் வழி
தமிழ் வாழ்க!

-தேவ நேயப் பாவாணர்.

குறிப்பு: மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் மலரில் (1959) " தமிழ் வேறு, திராவிடன் வேறு" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையாகும்.
ஏற்கெனவே, கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய " தமிழர் நாடு" (1951) இதழிலும் இதே தலைப்பில் பாவாணர் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( இக்கட்டுரை பழ.நெடுமாறன் நடத்தும் "தென் ஆசியச் செய்தி" ஏட்டில் (மார்ச் 16-31, 2016)  வெளி வந்தது)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.