26/03/2018

மரமும் மனிதனும் - இலுப்பை மரம்...


மரச் சாமான்கள் செய்ய மற்றும் எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய மரங்களைப் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதோடு வாழ்க்கைக்குப் பயனுள்ள பொருட்களைத் தரும் மரங்களையும் கண்டிப்பாக நாம் வளர்க்க வேண்டும். அந்த வகையில் ஒரு முக்கியமான மரம் இலுப்பை. பண்டைத் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன அற்புதமான மரம் இது.

பொதுவாக ஆல், அரசு போன்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. அந்த வகையைச் சேர்ந்ததுதான் இலுப்பையும். அதனால்தான் இத்தகைய மரங்களை நம் முன்னோர்கள் அதிகளவில் வளர்த்து வந்தார்கள்.

மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு இலுப்பை எண்ணெய் மூலம்தான் விளக்கு எரித்தார்கள். உலர வைத்த இலுப்பைப் பூவை சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தினர். ஆனால், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இலுப்பை மரங்கள், தற்போது வழக்கொழிந்து கொண்டு வருவதுதான் வேதனை.

பஞ்சத்தைப் போக்கிய பூ..

இலுப்பை மரத்தையும் ஒரு பணப்பயிராகவே பார்க்கலாம். அந்தளவுக்கு வணிகரீதியாகவும் பலன் தரக்கூடியது. இந்த மரத்தினுடைய பூ, விதை, இலை அனைத்தும் மருந்துப் பொருட்களாகவும் பயன்படுகின்றன. இலுப்பைப் பூவில் இருந்து தயாரிக்கப்படும் ‘மதுகா’ என்னும் மதுபானத்தை பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் விரும்பிப் பருகுகிறார்கள். அதோடு உணவுப் பொருளாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். 1873-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் நிலவிய பஞ்சத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் இலுப்பைப் பூவை மட்டுமே உண்டு வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.

உலர்ந்தப் பூவில் 74% சர்க்கரை இருக்கிறது. இதிலிருந்து ஜாம், ஜெல்லி போன்றவற்றையும் தயாரிக்கலாம். இலுப்பை விதையில் 52% எண்ணெய் உள்ளது. முன்பு இந்த எண்ணெயைத்தான் சமையலுக்கும் பயன்படுத்தினார்கள். எண்ணெய் எடுத்த பிறகு, கிடைக்கும் பிண்ணாக்கைத் தலைக்குத் தேய்க்கும் ஷாம்பூவாகப் (அரப்பு) பயன்படுத்தினார்கள். தற்போதும் இந்தப் பிண்ணாக்கை ஷாம்பூ நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. தாய்ப்பால் சுரக்காத பெண்கள், இலுப்பை இலையை மார்பில் கட்டிக் கொண்டால் பால் சுரக்கும். இலையில் இருந்து தயாரிக்கப்படும் களிம்பு, தீப்புண், வெட்டுக்காயங்களைக் குணப்படுத்தும் தன்மையுடையது.

இனி, இலுப்பை மரங்களை நட்டு வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போம்.

நேரடி நடவே சிறந்தது..

காட்டு இலுப்பை, நாட்டு இலுப்பை என இரண்டு வகைகள் உள்ளன. காட்டு இலுப்பையில் இலை பெரிதாக இருக்கும். இவை பெரும்பாலும் வட இந்தியாவில்தான் பயிரிடப்படுகின்றன. தென்னிந்தியாவுக்கு நாட்டு இலுப்பைதான் ஏற்றது. இது, வெப்ப மண்டலப் பயிராகும். ஆண்டுக்கு 750 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் இடங்களில் வளரக்கூடியது. மணல்சாரி நிலங்கள் மிகவும் உகந்தவை. பெரிய, பெரிய கற்கள் உள்ள நிலங்கள், களிமண் மற்றும் சுண்ணாம்பு நிலங்களிலும்கூட வளரும்.

இதை நேரடியாக நடுவது, நாற்று மூலம் நடுவது, குச்சிகள் (போத்து) மூலம் நடுவது என மூன்று வழிகளில் நடலாம். நீண்ட மென்மையான ஆணிவேரைக் கொண்டு இருப்பதால் நேரடியாக நடுவதுதான் சிறந்த முறை. மரங்களில் இருந்து உதிரும் பழங்களில் சதையை நீக்கி, விதையைப் பிரித்து, உடனே விதைத்துவிட வேண்டும். தாமதித்தால், முளைப்புத் திறன் குறையும். ஒரு கிலோவுக்கு சுமார் 450 விதைகள் கிடைக்கும்.

இலுப்பையின் வேர்கள் மண்ணுக்கு மேற்புரமாக படரும் தன்மையுடையவை என்பதால், கன்றைச் சுற்றி களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடவு செய்த 8 முதல் 10 ஆண்டுகளில் மரங்கள் மூலமாக பலன் கிடைக்கத் தொடங்கும். இலுப்பைப் பூக்களை காய வைத்து, மூலிகைகளைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் விற்கலாம்.

இம்மரங்களில் காய்க்கும் பழங்களை சாப்பிடுவதற்காக ஏராளமான பறவைகள் மரங்களில் தங்க வாய்ப்புகள் உள்ளன. அதனால், விவசாய நிலங்களில் ஆங்காங்கு இவற்றை நட்டு வைத்தால், பூச்சிகளை இயற்கையாகவே கட்டுப்படுத்த முடியும்.

நிலங்கள் என்றில்லாமல், சாலையோரங்கள், வரப்புகள், வாரிப்புறம்போக்கு, மேய்ச்சல் நிலங்கள், பாறைகள் அடர்ந்த சாகுபடிக்கு லாயக்கற்ற தரிசுகள்... என அனைத்து இடங்களிலும் இவற்றை வளர்க்கலாம். அதன் மூலம் இயற்கை எண்ணெய் தொழிலையும் இலுப்பைப் பூக்களைப் பயன்படுத்தி ‘சிரப்’ தயாரிக்கும் தொழிலையும் வளர்க்க முடியும். அதோடு மழையையும் பெற்று நிலத்தடி நீரையும் உயர்த்தலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.