19/03/2018

உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு...


பக்தி இயக்கம்....

சமணமும் பௌத்தமும் ஒருக் காலத்தில் கோலோச்சிக் கொண்டு இருந்த மண்ணில் இன்று அவற்றின் சுவடே இல்லா வண்ணம் இருக்கும் நிலைக்கு வழிவகுத்த ஓர் இயக்கம்...

உண்மையினைச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய இந்தியாவின் இன்றைய நிலைக்கு -இந்து மதம் என்று நாம் இன்று கொண்டாடும் மதத்திற்கு அடிப்படைக் காரணியாக ஒரு இயக்கம் அமைந்து இருக்கும் என்றால் அது இந்த இயக்கம் தான்.

இவ்வியக்கம் இல்லை என்றால் சைவமும் இல்லை... வைணவமும் இல்லை... இந்தியா இன்னும் ஒரு சமணத் தேசமாகவோ அல்லது புத்த தேசமாகவோ இருந்திருக்கக் கூடும். ஆனால் ஏனோ தெரியவில்லை, இன்று இந்து சமயத்தின் பெருமைகளைப் பற்றிப் பறைசாற்றுவோர்,

அச்சமயத்தினை போற்றிப் பாதுகாத்து வளர்த்த இந்த இயக்கத்தினைப் பற்றிப் பெரிதும் கண்டுக் கொள்வதில்லை. அதைக் கண்டுக் கொள்ள அவர்களுக்குத் தேவையும் இல்லை.

ஆனால் இந்தியாவினுள் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைகள் எவ்வாறு புகுந்தன என்பதனை நாம் அறிந்துக் கொள்ள, கவனிப்பாரின்றி இந்திய வரலாற்றின் முக்கியப் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டு இருக்கும் இந்த இயக்கத்தினைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. ஏனெனில் மறைக்கப்பட்ட அந்தப் பக்கங்களில் தான் மறுக்கப்பட்ட நீதிகளும் உண்மைகளும் புதைந்துக் கிடக்கின்றன.

"கடவுள் என்றொருவர் இல்லவே இல்லை..." என்றுக் கூறிக் கொண்டு சமணத் துறவிகளும், கடவுளைப் பற்றி எதுவுமே சொல்லாது அன்பினை மட்டும் போதித்துக் கொண்டு புத்த துறவிகளும் சுற்றிக் கொண்டு இருந்த தமிழகத்தில் தான் "இறைவன் இல்லையா... என்னய்யா சொல்கின்றீர்... இதோ என் இறைவன் இங்கேயே இருக்கின்றானே... காணும் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற நிற்கின்றானே... அவ்வாறு இருக்கும் அவனை எவ்வாறையா இல்லை என்கின்றீர்" என்றவாறே கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் புத்த சமணக் கருத்துக்களுக்கு மாற்றாக உருவான எழுச்சி தான் இந்த பக்தி இயக்கம் என்று நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

இறைவன் இல்லை என்று அதுவரை சொல்லி வந்த மண்ணில் திடீர் என்று "இறைவன் இருக்கின்றான்...அவன் யாதுமாகி நிற்கின்றான்" போன்றக் கருத்துக்கள் பரவ ஆரம்பிக்கின்றன. ஆங்காங்கே ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்ற ஆரம்பிக்கின்றனர். அவர்களின் கைப் பற்றி மெதுவாய் வைணவமும் சைவமும் வளர ஆரம்பிக்கின்றன.

தமிழ் மண்ணில் பக்தி மணம் கமிழ ஆரம்பிக்கின்றது. தெருவெங்கிலும் பக்திப் பாடல்கள் இசைக்கப் படுகின்றன. மன்னர்கள் மாறுகின்றனர். மக்களும் மாறுகின்றனர். 'அன்பே சிவம்' என்று அன்பின் வழியில் மக்கள் இறைவனைக் காண முயல்கின்றனர். தமிழகம் சமணக் கோலத்தினைத் துறந்து சைவ வைணவக் கோலத்திற்கு மாற ஆரம்பிக்கின்றது.

நல்ல மாற்றம் தான்...

ஆனால் அன்பினை அடிப்படையாகக் கொண்டு மக்கள் இறைவனை உணர வேண்டும்.... வாழ்வினை நல்வழியில் வாழ வேண்டும் என்பதற்காக ஆரம்பித்த இந்த எழுச்சியினை, சமணத்தினையும் புத்ததினையும் இந்த மண்ணை விட்டு நீக்குவதற்காகவும் மேலும் அச்சமயங்களால் தளர்ச்சி உற்றிருந்த தங்களது வேத நெறிக் கொள்கைகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் சில ஆரியர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்க, மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட அந்த மாற்றம் தடுமாற ஆரம்பிக்கின்றது.

அந்தத் தடுமாற்றம் ஆரம்பிக்கும் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு. ஆரம்பித்து வைப்பவர் திருஞானசம்பந்தர்..

"என்ன திருஞானசம்பந்தரா?... தேவாரம் இசைத்த சம்பந்தரையா சொல்லுகின்றீர்... சைவம் வளர்த்த அவரைப் பற்றி எப்படி ஐயா இவ்வாறு உங்களால் கூற முடிகின்றது..." என்றுக் கேட்கின்றீர்களா... ஒரு கணம் பொறுங்கள்... இதோ அவர் எழுதிய தேவாரத்தின் சில வரிகளைப் படியுங்கள்.

"பெண்ணகத்து எழில்சாக்கியயப் பேய் அமன் தென்ணாற் கற்பழிக்கத் திருவுள்ளமே"

மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின் மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் சம்பந்தர்.

"அன்பே சிவம்" என்று சைவம் கூறிக் கொண்டு இருக்க அக்கூற்றுக்கு மாறாக ஞானசம்பந்தர் பாடி இருப்பது எவ்வாறு சைவத்தினை வளர்த்திருக்கும். இரண்டுக் கருத்துக்களும் முரண்பட்டு அல்லவா இருக்கின்றன. அப்படி என்றால் ஞானசம்பந்தர் வளர்த்தது என்ன?

"என்னங்க சொல்றீங்க... வரலாறு உங்களுக்குத் தெரியுமா... சமணர்கள் சைவர்களை என்னப்பாடு படுத்துனாங்க அப்படின்னு உங்களுக்கு தெரியுமா... திருநாவுக்கரசர் மீது மத யானையை ஏவி விட்டும், அவரை கடலில் தள்ளியும், மேலும் பல இன்னல்களும் தந்தனரே. அவர்கள் அச்செயல்களை சைவர்கள் மேல் புரிந்தப் பொழுது கோபத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பாடலைப் பாடி விட்டார். அதைப் போய் பெரிது படுத்துகின்றீர்களே" என்கின்றீர்களா. சரி அவ்வாறே வைத்துக் கொள்வோம்.

அப்படி சைவர்களை சமணர்கள் கொடுமைப்படுத்தியதால் திருஞானசம்பந்தர் இப்பாடலை பாடி விட்டார் என்றால் அவரின் பாடல்களில் அந்தச் செய்திகள் தான் வெளிப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எதற்கு ஐயா அவர் சைவத்திற்கு துளியும் தொடர்பில்லாத வேள்விகளைப் பற்றியும் வேதங்களைப் பற்றியும் பாடி இருக்கின்றார்.

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே..."

"அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே..."

"வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே..."

மேலே உள்ள வரிகள் மூலம் திருஞானசம்பந்தர் சமணர்களை வெறுக்கின்றார் என்று தெரிய வருகின்றது. ஆனால் எதற்கு அவர்களை வெறுக்கின்றார் என்பதே நாம் அறிய வேண்டியது. சமணர்கள் வேத வேள்விகளை மதிப்பதில்லையாம்... அந்தணர்கள் சொல்லையும் கேட்பதில்லையாம்... அதனாலே திருஞானசம்பந்தர் அவர்களைச் சாடுகின்றார். அதனாலையே சாடுகின்றாரே தவிர அவர்கள் சைவத்தினை
மதிப்பதில்லை என்பதற்காக சாடவில்லை.

இதன் மூலம் திருஞானசம்பந்தர் சைவத்தினை வளர்க்கவில்லை என்றும் சைவத்தின் வாயிலாக வேத நெறிகளையே வளர்த்தார் என்றும் நாம் அறிய முடிகின்றது.

திருஞானசம்பந்தரின் இந்தச் செயல்பாடுகள் மூலம் சமணம் மற்றும் புத்தத்தினால் வீழ்ந்திருந்த வேத வேள்விக் கருத்துக்கள் சைவத்தின் கைப்பற்றிக் கொண்டு சமணத்தினையும் புத்தத்தினையும் வேரறுக்க கிளம்புகின்றன.

சைவ நெறி... சைவ வெறியாகின்றது...

அன்பினைப் போதித்த மதம் 8000 சமணர்களை மதுரையில் கழுவில் ஏற்றுகின்றது. அன்பும் பக்தியும் பரவிய வீதிகளில் வெறியும் பயமும் பரவ ஆரம்பிக்கின்றது.

சைவமும் சரி... பக்தி இயக்கமும் சரி... திசை மாற ஆரம்பிக்கின்றன. இதனைக் கண்ட திருநாவுக்கரசர் போன்றோர்

"நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக்குஅரையன், நாளைப்போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி,
கண்ணப்பன், கணம்புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
கொள்கை கண்டு, நின் குரைகழல் அடைந்தேன்"

என்றுக் கூறிச் சென்றாலும் மதம் பிடித்த யானை எவ்வாறு கட்டுக்கடங்காது இருக்குமோ அதேப்போல் மக்களும் கட்டுக்கடங்காது இருக்கின்றனர். அவர்களுக்கு பிடித்து இருந்தது சைவம் மற்றும் வைணவ மதம்.

வேத நெறிகள் நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் பலம் பெற ஆரம்பித்தன...தமிழகத்தில். இது நடந்தக் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு.

கிட்டத்தட்ட இதேக் காலத்தில் தான் வடக்கில் ஆரியவர்த்தமும் அமைகின்றது. வேத நெறி மீண்டும் வளர நல்ல காலக்கட்டம். அதுவும் வளரத் தான் செய்தது சைவம் மற்றும் வைணவத்தின் நிழலில்.

நிலை இவ்வாறு இருக்கையில் தான் ஆதி சங்கரர் வருகின்றார்...சாதி ஏற்றத் தாழ்வுக் கருத்துக்களை தன்னுடன் அழைத்துக் கொண்டே வருகின்றார். அடுத்தப் பதிவில் அவரை சந்திப்போம்....

பி.கு:

வேத வேள்விக் கருத்துக்களை திருஞானசம்பந்தர் வளர்த்ததற்கு காரணம்... அவர் ஒரு ஆரிய பிரோகிதர். 63 நாயன்மார்களில் அவர் ஒருவர் மட்டுமே ஆரியர்.சமயக் குரவர்களில் தமிழரான திருநாவுக்கரசர் முதன்மையானவராக இருந்தப் போதும் முதலிடம் திருஞானசம்பந்தருக்கு கொடுக்கப் பட்டு இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.