20/03/2018

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அடித்தளமாக நிலைத்தவர்.. சசிகலாவின் கணவர்.. ம. நடராசன் காலமானார்...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை..

1965 மொழிப் போர் தலைவர்களில் ஒருவரும் 'புதிய பார்வை' ஆசிரியருமான திரு. ம. நடராசன் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த உலகத்தில் ஒப்புமை காட்ட முடியாத வரலாற்றுச் சிறப்புமிக்க மொழிப் போரின் மாணவத் தலைவர்களில் திரு. நடராசனும் ஒருவர்.

நான் அப்போது திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தேன். எங்கள் பள்ளியின் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயலாளராக நான் இருந்தேன்.

1965 சனவரி 25 அன்று இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நடந்த மாணவர் பேரணிகளில் ஒன்றாக, அன்று தஞ்சை நகரில் மாபெரும் மாணவர் பேரணி நடந்தது. அப்பேரணி ஏற்பாட்டாளர்களில் நடராசன் ஒருவர்! நான் அந்த பேரணியில் கலந்து கொண்டேன்.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் அ.வ.அ. ( ஏ.வி.சி. ) கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த மாணவர் சாரங்கபாணி, இந்தித் திணிப்பை எதிர்த்து கல்லூரி வாயிலில் தீக்குளித்து இறந்தார். அவருக்கு வீரவணக்கம் செலுத்தவும் அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்யவும் தஞ்சை திலகர் திடலில் மாபெரும் மாணவர் கூட்டம் நடந்தது.

சாரங்கபாணி குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்வதற்கு திருக்காட்டுப்பள்ளி மாணவர்கள் திரட்டிய ஒரு சிறு தொகையை நான் கொண்டு வந்து திரு. நடராசன் அவர்களிடம் கொடுத்தேன். அப்போது அவர் பச்சை மையில் எழுதி கையெழுத்துப் போட்டு அதற்கான ரசீதை என்னிடம் கொடுத்தார்.

திரு. நடராசன் அவர்கள் பல தமிழ்ப் பணிகள் ஆற்றினார். அவருடைய மிகப்பெரும் தமிழினப் பணியாக - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைக் குறிப்பிடலாம்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையுடன் சிங்கள பெளத்த இனவெறி அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை நடத்தியது. அதில் உயிரிழந்த ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைக் களத்தில் போராடி ஈகியரான விடுதலைப்புலிகள் ஆகியோர்க்கான மிகச்சிறந்த நினைவகம் - தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் பெரு முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் வந்து பார்க்கவும் வணங்கவுமான தமிழர் அடையாளச் சின்னமாய் விளங்குகிறது.

இந்த நினைவகத்தின் அடித்தளமாக திரு. ம. நடராசன் அவர்கள் இருக்கிறார்கள். அவர் அன்பளிப்பாக கொடுத்த நிலத்தில்தான் நினைவகம் அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி அங்குள்ள ஒவ்வொரு கட்டுமானத்திலும் ம. நடராசன் பங்களிப்பு இருக்கிறது. ஆண்டுதோறும் பொங்கல் நாளில் தஞ்சையில் 3 நாள் தொடர்ந்து தமிழர் பண்பாட்டு விழா நடத்தி வந்தார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னும் நன்கு இயங்கி வந்த நடராசன் அவர்கள், திடிரென்று நோய்வாய்ப்பட்டு காலமான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ஐயா நடராசன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.