02/03/2018

டாக்டர் உடையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த மனநோயாளி...


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மனநோயாளி டாக்டர் உடையணிந்து மருத்துவம் பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது மருத்துவமனை பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள அசட்டையை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை அடுத்த செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று காலை புற நோயாளிகளுக்கு மருத்துவ அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. அப்போது கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப் மற்றும் டாக்டர் அணியும் வெள்ளைநிற கோர்ட் அணிந்தபடி ஒரு பெண் வந்தார்.
சிகிச்சைக்காக வரிசையில் நின்றிருந்த நோயாளிகளை பார்த்து வரிசையாகவும் அமைதியாகவும் வரும்படி கூறினார். மருத்துவமனை ஊழியர்களை சரியான நேரத்துக்கு வரவேண்டும். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒரு சில நோயாளிகளை அவரே அழைத்து ஸ்டெத்தஸ்கோப் வைத்து செக்கப் செய்தார். அவரது செயலைப் பார்த்த ஊழியர்கள் புதியதாக வந்த பெண் டாக்டர் போல இருக்கிறது. செங்கல்பட்டு மருத்துவமனை ரூல்ஸ் தெரியாமல் இருக்கிறார். டிரான்ஸ்பரில் செங்கல்பட்டிற்கு வந்து இருப்பார் போல தெரிகிறது என்று நினைத்து இருந்தனர்.
அதில் சிலர் புது டாக்டரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு மருத்துவமனை டீன் உஷா சதாசிவன், நிலைய துணை மருத்துவ அலுவலர் தீனதயாளன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். மருத்துவமனை டீனிடம், அந்த புது டாக்டர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கல்பட்டு டீன் அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று விசாரித்தார். அப்போதுதான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை டாக்டர்கள் செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது டாக்டர் உடையில் வந்த பெண் ஷகீலா பாபி (33) என்பதும் அவர் மதுராந்தகம் அடுத்த மேற்கு செய்யூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவரது கணவர் விஜயகுமார் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். கணவன், மனைவி இருவரும் விவாகரத்து பெற்றவர்கள் என்பது தெரியவந்தது.

இவர் எம்எஸ்சி நர்சிங் படித்துவிட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த சில வருடங்களாக அவருக்கு ஆதரவு யாரும் இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் கூறினர். செங்கல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை மன நல காப்பகத்தில் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.