19/06/2018

முற்றும் வர்த்தகப் போர்... கேள்விக் குறியாகும் வர்த்தகக் கழகம்...


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏழை நாடுகளை சுரண்டிக் கொழுத்திட உலகப் பணக்கார நாடுகளால் ஏற்படுத்தப்பட்டு மற்ற நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தான் உலக வர்த்தகக் கழகம். 

இந்த அமைப்பு 1947 முதல்  வர்த்தக, வரிக்கான பொது ஒப்பந்தம் அதாவது  (General Agreements on Tariffs and Trade (GATT) என்ற பெயரில் தொடங்கப்பட்டு 1986 லிருந்து 1994 வரை நடந்த உருகுவே பேச்சுவார்த்தைக்குப் பிறகு உலக வர்த்தகக் கழகம் எனும் பெயர் மாற்றம் அடைகிறது இந்த அமைப்பில் இந்திய அரசு 1991 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது.

அன்றிலிருந்து இந்தியா உட்பட வளரும் நாடுகளின் இயற்கை வளத்தை, போராடிப் பெற்ற உரிமைகளை, மனித உழைப்பை வேகமாக தின்று கொழிக்கிறது உலக முதலாளியம்.அந்த உலக முதலாளிய அமைப்பு முறையில் அமெரிக்க முதலாளிகள் போன்றோருக்கு நிகராக
 தங்களையும் நிலை நிறுத்திக் கொள்வதற்காகத்தான் சீனா, இந்தியா, ருஷ்யா போன்ற நாடுகளின் முதலாளிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக அமெரிக்க மூலதனத்தோடு இவர்கள் மல்லுக்கு நிற்கின்றனர். இதன் எதிரொலியாகத் தான் 'சீனா அறிவுச் சொத்துரிமை திருட்டில் ஈடுபட்டதாக' குற்றம்சாட்டி 800 வகையான சீன  பொருள்களை குறிவைத்து சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது  25 சதவீதம் வரி விதித்தது அமெரிக்கா இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு அதே மதிப்பிலான கூடுதல் வரி விதித்தது.

இந்த கதையே தான் அமெரிக்கா இந்தியாவுக்கும் இடையேயும் நடக்கிறது.சில நாட்களுக்கு முன்னால் நடந்த ஜி 7 மாநாட்டிலும் இத்தகைய வர்த்தகப் போரே பிரதிபலித்தது.

இந்தகைய வர்த்தக மோதல்கள் இன்றைக்கு உலக வர்த்தக அமைப்பை கேள்விக் குள்ளாக்கியிருக்கிறது.

நைரோபியில் 2015-ல் நடந்த உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக - பொருளாதார அமைச்சர்கள் மாநாட்டின்போதே, அந்த அமைப்பை மதிக்காத போக்கை அமெரிக்கா வெளிக்காட்டியது. அதிலிருந்தே இத்தகைய வர்த்தக மோதல்கள் பல்வேறு நாடுகளிடையே தொடர்ந்த வண்ணம் தான் உள்ளன.

உலக வர்த்தக நிறுவனத்தின் (டபிள்யு.டி.ஓ.) தலைமை இயக்குநர் ராபர்ட் அசெவெடோவின் 2017 ஆண்டின்  இந்தியப் பயணம் இத்தகையப் போக்கை தான் நமக்கு சுட்டிக் காட்டியது .உலக வர்த்தக நிறுவன அமைப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மை உறுப்பினர்களான வளரும் நாடுகளின் தேவைகளை அமெரிக்கா கவனத்தில் கொள்ளாத போக்கு உலக வர்த்தக அமைப்பையே பெரும் கேள்விக் குள்ளாக்கியிருக்கிறது.

இன்னும் சில காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த அமைப்பிலிருந்து விலகி வேறொரு அமைப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

பல்வேறு சமூகத்தினரும் வாழும் சாதிய கிராம அமைப்பு முறையில் கடவுள் வழிபாட்டிற்கான சமத்துவ உரிமையை தாழ்த்தப்பட்ட மக்கள் எழுப்புகிறார்கள் எனில் முதலில் தாழ்த்தப்பட்ட மக்களை பல்வேறு வழிகளில் சாதிய ஆதிக்கம் தண்டிக்கும். அதையும் மீறி தாழ்த்தப்பட்ட மக்கள் உறுதியோடு கடவுள் வழிபாட்டு உரிமைக்காக போராடினால் சாதிய ஆதிக்கம் இறுதியில் கடவுளையே புறக்கணிக்கும், கோயிலை இழுத்து மூடும்.

இன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து வர்த்தகப் போர் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் மேற்கூறிய உதாரணத்தை பொருத்திப் பார்த்தால் நமக்கு  விஷயங்கள் பட்டென விளங்கும்.

இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது மார்க்ஸ், காண்ட் இடையே  நடந்த வர்த்தகம் பற்றிய பொருள் விளக்க சண்டை தான் நினைவுக்கு வருகிறது.
'நாடுகளுக்கு இடையே நட்புறவு மற்றும் அமைதியான பரிவர்த்தனைக்கான கருவி தான் வர்த்தகம்' என்று காண்ட் கூறினார்.

இதற்கு நேரெதிரான முறையில் ' ஆதிக்கத்திற்குள்ளான மக்களையும் நாடுகளையும் அடிமைப் படுத்துவதற்கும் சுரண்டுவதற்குமான கருவி தான் வர்த்தகம்' என மார்க்ஸ் பதிலுரைத்தார்.

மார்க்ஸ் கூறிய பொருளிலேயே ட்ரம்ப் அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறார்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.