06/07/2018

மரமும் மனிதனும்...


திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் விளங்குகிறது.

திருவாச்சி மரம், வல்லாரை இலைகளைப் போன்ற காம்புகளைச் சுற்றி படர்ந்த பசுமையான இலைகளைக் கொண்ட, குறு மரமாகும், திருவாச்சியின் மலர்களில் உள்ள, அதிக அளவு மகரந்தத்தையும், தேனையும் சுவைக்க தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் போட்டியிடுவதைக் காண்பதே, கண்களுக்கு விருந்தாக அமையும். இலை, மலர் மற்றும் பட்டை இவற்றின் மூலம், நலம் தரும் மருத்துவ பலன்களைக் கொண்டது, திருவாச்சி.

ஆன்மீகத்தில் திருவாச்சி...

திருக்கோவில்களில் தல மரமாக விளங்கும் திருவாச்சி மரங்களின் இலைகள், வில்வ இலைகளைப் போல, சிவபெருமானுக்கு உகந்தவையாகக் கருதப்படுபவை. திருவாச்சி மலர்களும், சிவ பூஜைக்கு உகந்த மலர்களாகின்றன. திருக்கோவில்களில் அகல்களில் விளக்கேற்றும் போது, அகல்களின் கீழே, அந்தந்த நாட்களுக்கு விஷேசமாகக் கருதப்படும் இலைகளைக் கொண்டு, விளக்கேற்றுவர்.

அந்த வகையில், சிவபெருமானுக்கு உகந்த சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், திருவாச்சி இலைகளின் மேலே, அகலில் தீபம் ஏற்றி வைத்து வழிபட, நலமாகும். காற்றுவெளியை நலமாக்கும் திருவாச்சி மரத்தை வீடுகளில் வளர்த்து வர, ஆன்மீக வளத்தோடு, ஆரோக்கியமான வாழ்க்கை நலத் தீர்வுகளும் கிடைக்கும்.

சித்த மருத்துவத்தில் மந்தாரை :
உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும், கை கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது, உணவை உண்ணப் பயன்படும் வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது, திருவாச்சி இலைகள். இரத்த பேதி, இரத்த வாந்தி, மலச்சிக்கல் போக்கும் ஆற்றல் உள்ளவை.

திருவாச்சி குடிநீர்...

திருவாச்சி பூக்களின் மொட்டுக்களை நன்கு அலசி, ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீர் கால் லிட்டர் அளவில் சுண்டி வந்ததும், எடுத்து வைத்துக் கொண்டு, காலை மாலை இருவேளை, இருபது அல்லது முப்பது மிலி அளவு பருகி வர, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆறும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத இரத்தப் போக்கு குணமாகும். இரத்த மூல பாதிப்புகள் விலகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.