27/07/2018

தாசில்தாரின் வசூல் கறிவிருந்து.. விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு...


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாலுகா அலுவலகத்தை பூட்டி கறிவிருந்து வைத்து தங்ககாசுகளையும், மோதிரங்களையும் அன்பளிப்பாக பெற்ற தாசில்தாரிடம் விரிவான விசாரணை நடத்த மாவட்ட ஆட்சிதலைவர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வாரத்தின் முதள் நாளான திங்கட்கிழமை, தாலுகா அலுவலகத்தை உள்பக்கமாக பூட்டி தாசில்தார் தலைமையில் கறிவிருந்து வைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

பணி ஓய்வு பெற்ற நிலையில் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு பெற்று தாசில்தாராக பணியாற்றி வந்த தாமஸ் பயாஸ் அருள் என்பவர், கிராம உதவியாளர் பணி நியமனத்தில் 35 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு புகாரில் சிக்கியதால் ஓட்டப்பிடாரத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராக, தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் சந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பணி மாற்றலாகி செல்வதற்கு முன்பாக, தனக்கு நெருக்கமான ஊழியர்களை அழைத்து பிரமாண்ட கறிவிருந்துக்கு தாசில்தார் தாமஸ் பயாஸ் அருள் ஏற்பாடு செய்தார்..! தாலுகா அலுவலக ஊழியர்களிடம் தலா 500 ரூபாய் வீதம் வசூல் செய்து கறிவிருந்து நடத்தப்பட்டதாகவும், கறிவிருந்து முடிந்ததும், அதில் சாப்பிட்ட அத்தனை ஊழியர்களும் தாசில்தார் தாமஸ் பயாஸ் அருளிற்கு பரிசு பொருட்கள் வழங்கினர். குறிப்பாக கிராம உதவியாளர்கள் பலர் தங்க நாணயங்களையும், தங்க மோதிரங்களையும் பரிசாக வழங்கியதாக கூறப்பட்டது. செங்கல் சூளை அதிபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்தும் தங்க மோதிரங்களை பரிசாக பெற்றதாக தகவல் வெளியானது.

ஒரு அரசு ஊழியர், அலுவலகத்தில் வைத்து பெறும் அனைத்து பரிசு பொருட்களும் கையூட்டாகவே கருதப்படும் என்ற விதி உள்ள நிலையில், எதைபற்றியும் கவலைப்படாமல் அலுவலகத்தை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தங்க காசுகளையும், தங்க மோதிரங்களையும், எலெக்ட்ரானிக் பரிசு பொருட்களையும் வாங்கி குவித்துள்ளார் தாசில்தார் தாமஸ் பயாஸ் அருள்..! என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அவரது ஆடம்பரத்தால் திங்கட்கிழமை ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தின் பணிகள் முற்றிலும் முடங்கின. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இந்த தகவல் மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

தாசில்தார் தாமஸ் பயாஸ் அருளின் வசூல் கறிவிருந்து குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தர உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சிதலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். அதேபோல மணல் திருட்டுக்கு துணைபோகும் விளாத்திகுளம் தாசில்தார் லெனின் மீதும் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா என்ற பெயரில் விருந்து நடப்பது வழக்கமான ஒன்று என்று தமிழ் நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கம் அறிக்கை மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் பணி செய்கிறோம் என்பதை மறந்து, பணி நேரத்தில் அலுவலகத்தை பூட்டி விருந்து வைத்து விழா கொண்டாடிய தாசில்தாரின் பணி நீட்டிப்பை ரத்து செய்வதோடு, விருந்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.