07/07/2018

சீருடை...


பள்ளி மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வு என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற சமத்துவத்தை போதிக்கும் எளிய ஆயுதம் சீருடை.

அரசே நீங்கள் எந்த வண்ணத்தில் சீருடையை மாற்றினாலும் அதன் படியே மாறிவிட நாங்கள் தயார்.

தரம் என்ற ஒற்றைச் சொல் உங்கள் ஆளும் வர்கத்திற்கு தெரிந்த சொல்லாகத்தான் இருக்க முடியும்.
ஏன் என்றால்...

நீங்கள் யாரும் குழாயடி நீரைக் குடிக்க குடத்தை தூக்கிக் கொண்டு கால் வலிக்க நின்றிருக்க மாட்டீர்கள் - தரமான சுத்தமான புட்டியில் அடைக்கப்பட்ட தூய நீரைத்தான் குடித்திருப்பீர்கள்...

நீங்கள் யாரும் நியாயவிலைக் கடையில் அரிசி வாங்க பொங்கி உண்டிருக்க மாட்டீர்கள் - தரமான பொன்னி, பாஸ்மதியை பொங்கி ருசிக்க  உண்டிருப்பீர்கள்...

நீங்கள் யாரும் அரசு பேருந்தில் குட்டத்தின் நடுவே நசுக்கப்பட்டு பயணித்திருக்க மாட்டீர்கள் - தரமான 20 லட்சத்திற்கும் குறையாத சொகுசு மகிழுந்தில் தான் பயணித்திருப்பீர்கள்..

நீங்கள் யாரும் வயிற்று பசிக்காக ஓடியிருக்க மாட்டீர்கள் - தரமான சத்தான உணவை உண்டு பெருத்த பருத்த வயிற்றை குறைக்க சொகுசு விடுதியில் தங்கி கடல் காற்று வாங்க ஓடியிருப்பீர்கள்...

நீங்கள் யாரும் வரிசையில் நின்று பொது மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க சென்றிருக்க மாட்டீர்கள் - சின்ன தலைவலி என்றாலும் கூட தரமான அ....லோ மருத்துவமனையைத் தேடித் தான் சென்று கொண்டு இருக்கின்றீர்கள்...

நீங்கள் யாரும் கசங்கிய ஆடையை உடுத்துபவர்கள் அல்ல - தரமான மினிஸ்டர் காட்டனை உடுத்தும் மிராசுகள் தானே...

இப்படி தரம்.. தரம்... என்று எல்லாவற்றிலும் தரமானதைத் தேடி அனுபவிக்கும் நீங்கள்.. உங்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த வாக்காளர்கள் தரமான எதுவுமே கிடைக்காமல் தவிக்கும் ஏழையின் அழுகுரல் உங்களின் கேலா செவிக்கு எட்டவில்லையா... அவன் மழலைகள் போடும் சட்டைப் பொத்தான்கள் காரணம் இன்றி அவிழ்ந்து விழும் சத்தம் உங்கள் ஆளும் செவியை  தொடவில்லையா...

தரமான தலைமையே - தரமான ஆட்சியை தரும்.. அத்தரமான ஆட்சியே - மக்களின் தரத்தை உயர்த்தும். அந்த நன்நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் எளியோர்களில் ஒருவன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.