10/08/2018

அரசு மீன்வளக் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கக்கூடாது - பாமக அறிக்கை...


தமிழ்நாடு மீன்வளத்துறையில் மீன்வள ஆய்வாளர் பணிக்கான கல்வித் தகுதியை தளர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாகவும், அரசு மீன்வள பல்கலைக்கழக மாணவர்களின் வேலை உரிமையை பறிக்கும் வகையிலும் செய்யப்பட்டுள்ள இம்மாற்றம் கண்டிக்கத்தக்கது.

மீன்வளத் துறையில் உள்ள மீன்வள ஆய்வாளர் பணியிடங்களில் 60% இடங்கள் நேரடியாகப் போட்டித்  தேர்வு மூலமாகவும், மீதமுள்ள 40% இடங்கள் பதவி உயர்வின் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மீன்வள ஆய்வாளர் பணிக்கு இதுவரை இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது மீன்வள அறிவியல் படிப்பு மட்டுமின்றி, விலங்கியல், கடல்சார் உயிரியல், கடலோர மீன்வளர்ப்பியல்,  சிறப்பு விலங்கியல், கடல்சார் பொறியியல், கடலியல் ஆகிய துறைகளில் பட்ட மேற்படிப்பு படித்தவர்களும்  இப்பணிக்கு தகுதிபெற்றவர்கள் என்று ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிட்ட அரசிதழில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கோபால் பெயரில் வெளியாகியுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

மீன்வள ஆய்வாளர் என்பது மிகவும் நுணுக்கமான பணியாகும். மீன்வளத்தை மேம்படுத்துவதற்கான  இந்த பணிக்கு மீன் வளர்ப்பு, மீன்களின் தன்மை குறித்த ஆழமான அறிவு தேவை. இதைக் கருத்தில் கொண்டு தான் நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், பொன்னேரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள மீன்வளக் கல்லூரிகள் ஆகியவற்றில் மட்டும் மீன்வள அறிவியல் படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. வேறு அரசுக் கல்லூரிகளிலோ அல்லது தனியார் கல்லூரிகளிலோ இந்தப் படிப்பு கற்பிக்கப்படவில்லை. தமிழக அரசில் மீன்வள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகிய பணிகள், தனியார் நிறுவனங்களில் உள்ள மீன்வளம் சார்ந்த பணிகள் ஆகியவற்றை மட்டுமே இலக்காகக் கொண்டு இப்படிப்பை நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் பிற அறிவியல் படிப்புகளை படித்தவர்களையும் இப்பணியில் சேர அனுமதித்தால், இதற்காகவே உருவாக்கப்பட்ட மீன்வள அறிவியல் படித்தவர்களின் வேலைவாய்ப்பு பறிபோய்விடும். அவர்களால் வேறு பணிக்கு செல்ல முடியாது என்னும் சூழலில் இருக்கும் வேலைவாய்ப்பையும் பறிப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

அதுமட்டுமின்றி, மீன்வள ஆய்வாளர் பணியை அதற்கான பணியை படித்தவர்களால் மட்டும் தான்  சிறப்பாக செய்ய முடியும். மருத்துவம் படித்த மருத்துவர்கள் செய்ய வேண்டிய பணியை, பிற அறிவியல் படித்த பட்டதாரிகள் செய்தால் மனித உயிர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படுமோ, அதேபோல் தான் மீன்வள அறிவியல் படித்தவர்கள் செய்ய வேண்டிய பணிகளை பிற அறிவியல் பட்டதாரிகள் செய்தால் மீன் வளத்திற்கு  மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். ஒருவேளை மீன் வள ஆய்வாளர் பணிக்கு தேவையான அளவுக்கு மீன்வள அறிவியல் படிப்பு படித்தவர்கள் இல்லாவிட்டால் கூட, அந்தப் பணிக்கு பிற படிப்புகளை படித்தவர்களை அனுமதிப்பது குறித்து சிந்திக்கலாம். ஆனால், மீன்வள அறிவியல் படிப்பு படித்த நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நிலையில், மற்றவர்களை இப்பணிக்கு அனுமதிக்க வேண்டிய தேவை என்ன? அதிலும் குறிப்பாக மீன்வள ஆய்வாளர் பணிக்கு 72 பேரையும், உதவி ஆய்வாளர் பணிக்கு 12 பேரையும் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு உள்நோக்கம் கொண்டது என்பதைத் தவிர வேறல்ல.

மீன்வள ஆய்வாளர் பணிக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மேற்படிப்புகளில் பெரும்பாலானவை தனியார் கல்லூரிகளில் மட்டும் கற்பிக்கப்படுபவையாகும். அத்தகைய தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாகவே இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. முந்தைய திமுக ஆட்சியில் 2007-ஆம்  ஆண்டிலும், 2011-ஆண்டிலும் இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அப்போது எழுந்த எதிர்ப்பு காரணமாக அந்த அறிவிப்புகள் திரும்பப்பெறப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது இப்போது அதே அறிவிப்பை வெளியிட வேண்டிய தேவை என்ன? என்பதே மீண்டும் மீண்டும் எழும் வினா ஆகும்.

தமிழ்நாட்டில் வனச்சரகர், வனவர் பணிக்கு அரசு வனக்கல்லூரியில் வனவியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். 2009-ஆம் ஆண்டிலும், 2014-2015ஆம் ஆண்டிலும் இந்த பணிக்கு பிற படிப்புகளை படித்தவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், மாணவர்களும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அந்த முடிவுகள் திரும்பப் பெறப்பட்டன. வனச்சரகர், வனவர் பணிக்கு வனவியல் படித்த மாணவர்கள் இல்லாத பட்சத்தில் மட்டும் பிற அறிவியல் பட்டதாரிகளை தேர்வு செய்யலாம் என விதிகள் மாற்றப் பட்டன. அதேபோல், இப்போதும் தமிழக அரசு அதன் அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று மீன்வள ஆய்வாளர் பணிக்கு மீன்வள அறிவியல் பட்டம் மட்டுமே தகுதி என்று அறிவிக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.