18/08/2018

மேலைநாடுகளில் வீட்டுப் பிரசவங்கள் எவ்வாறு நிகழ்கின்றன? - சிவநங்கை...


திருப்பூரில் வீட்டுப் பிரசவத்தில் மரணம்  என்பதை மருத்துவம், கல்வி, உணவு ஆகியவற்றில் ஒரு தனி மனிதருக்கு உள்ள, தன் விருப்ப உரிமைக்கு எதிராக இன்றைய நவீனவாதிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போற்றி வழிபடும் அலோபதி, மேலை நாடுகளில் எப்படிக் கையாளப்படுகிறது?

மரபா அல்லது நவீனத் தொழில்நுட்பமா? என்னும் தேர்வுக்கு உள்ளே அடி எடுத்து வைப்பதற்கு முன், மக்களின் மன நிலை எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும்? இதில் மாற வேண்டியது என்ன? என்பதை மட்டுமே கொஞ்சம் நிதானமாக இங்கே பார்க்கலாம்.
நான் அமெரிக்காவில் வசித்தபோது, அங்குள்ள மக்கள் மருத்துவத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பார்த்து வியப்படைந்தேன்.

கரு உறுதியான பிறகு அவர்கள் எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. மருத்துவரை உடனே சந்திக்க வேண்டுமென்றும் சத்துப் பற்றாக்குறையைப் பற்றியும் பதட்டப்படவுமில்லை. அடிப்படைச் சோதனையை மட்டும் ஆரம்ப காலத்தில் செய்துகொள்கிறார்கள். ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் மெதுவாக மேலும் சில அளவீடுகளைச் சோதனை செய்து கண்காணிக்க ஆரம்பிக்கிறார்கள். அங்கே பெரும்பாலும் சுகப் பிரசவமே ஊக்குவிக்கப்படுகிறது. அங்கும் சிசேரியன் பிறப்புகள் உண்டு. ஆனால் அற்பக் காரணங்களுக்காகவல்ல.

எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டுப் பிரசவங்களும் அங்கே உண்டு. வீட்டுப் பிரசவமா அல்லது மருத்துவமனையா என்பது முற்றும் முழுதாக சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட தேர்வு மட்டுமே. அதில் எந்த அதிகாரமும் அரசாங்க ஆணையும் குறுக்கிட முடியாது. அப்படி வீட்டுப் பிரசவம்தான் வேண்டும் என்று ஒருவர் தேர்ந்தெடுத்துவிட்டால் அரசாங்கத்திடமிருந்தும் மருத்துவமனையிலிருந்தும் அதற்கான முழு ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைக்கும்.

ஒருவர் வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தைப் பதிவு செய்துவிட்டால், மருத்துவமனையிலிருந்து பிரசவத்துக்கு உதவ ஒரு செவிலியை ஒதுக்குவார்கள். Midwife என்று அவர்களை அழைப்பார்கள். அவர் வீட்டுக்கு வந்து, உடனிருந்து பிரசவம் பார்த்துவிட்டு, பிரசவத்துக்குப் பிறகு செய்ய வேண்டிய சில அடிப்படைகளைச் செய்துவிட்டுச் செல்வார். ‘பிறப்பு சான்றிதழ் கொடுக்க முடியாது’ என்று எந்த அதிகார மட்டமும் சொல்ல முடியாது, ‘இது முறையற்ற செயல்’ என்று எந்தச் சட்டமும் அவர் மீது பாய முடியாது. அப்படி

ஒரு வேளை பிரசவத்தின்போது ஏதேனும் சிக்கல் வந்துவிட்டால் தயக்கமின்றி எந்தச் சூழலிலும் அவர் மருத்துவமனையின் உதவியை நாடலாம். ”உங்களை யார் வீட்டில் பிரசவம் பார்க்கச் சொன்னது” என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கேட்கவும் மாட்டார்கள்.

இந்த உரிமையும் மரபின் மீதான மரியாதையும் இன்றும் பெரும்பாலான நாடுகளில் பாதுகாக்கப்படுகிறது. சரி. ஒரு midwife மருத்துவமனையிலிருந்து உதவி செய்வதற்கு வருகிறார் என்பதற்காக அவர் ஒன்றும் மருத்துவமனையின் மொத்த உபகரணங்களையும் கையில் கொண்டுவந்து உங்களுக்கு வீட்டிலேயே மருத்துவமனையின் வசதிகளைச் செய்துகொடுப்பார் என்று பொருளல்ல. பிரசவத்துக்குத் தேவையான அடிப்படை உபகரணங்கள் மட்டுமே வைத்திருப்பார். நம் மரபில் பிரசவம் பார்த்த மருத்துவச்சிகள் போலத்தான். அவர்களின் அனுபவமும், அறிவும் மட்டுமே அங்கே பிரசவத்துக்கு வழிகாட்டல். அவ்வளவே.

பிரிட்டனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள மூன்று இடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (You can give birth at home, in a unit run by midwives (a midwifery unit or birth centre) or in hospital).
1.      வீடு
2.      Midwife நடத்தும் கூடம்
3.      மருத்துவமனை
அதற்கான சுட்டி:
https://www.nhs.uk/conditions/pregnancy-and-baby/where-can-i-give-birth/

மரபை கண்மூடித்தனமாக எதிர்க்கும் பகுத்தறிவுவாதிகள் இதைப் படித்தால் நல்லது.

நவீன அறிவியல் தோன்றி வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில்தான் அனைத்துத் துறைகளிலும் இன்றும் மரபு பேணப்படுகிறது. அங்குதான் வீட்டுப்பிரசவங்கள் அதிகம் நடக்கின்றன.

கர்ப்ப காலத்தின்போதும், பிரசவத்தின் போதும், குழந்தை வளர்ப்பின்போதும் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக அவற்றைச் செய்வதுதான் நம் மரபில் நமக்கு இருந்த பழக்கமும் மன நிலையும். இன்றைக்கும் மேற்கத்திய நாடுகளில் அம்மாதிரியான மன நிலையைத்தான் அதிகம் காண முடியும்.

வீட்டுப் பிரசவங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைப் பற்றியல்ல இங்கே நான் சொல்ல வருவது. வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையைப் பற்றியும், வீட்டுப் பிரசவம்தான் இயல்பு என்பதை புரிந்துகொள்ளும் திறந்த மனதைப் பற்றியும்தான்.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது?
கரு உறுதியானவுடன் பல சோதனைகள், இரத்தப் பரிசோதனைகள், சத்து மாத்திரைகள் என்று நிரப்பி விடுகிறார்கள். மெல்ல மெல்ல மக்களும் மருத்துவர்களும் இணைந்து பயத்தைக் கட்டியமைத்துக் கொள்கிறார்கள். இது கடினமான காரியம் என்ற பயம் தாய்க்கு உருவாகிவிட்டால் அதன் பிறகு அந்தப் பயம் ஒன்றே பல மோசமான விளைவுகளுக்கு மூலதனமாகி விடுகிறது.

இதற்கு மருத்துவர்கள் மட்டும் காரணம் இல்லை. மக்களும்தான். சொல்லப் போனால் மக்கள்தான் முதல் காரணம்.

வெளிநாட்டில் (UK) இருக்கும் என் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ”குழந்தை பெற்றுக்கொள்வதில் சுகப்பிரசவத்தை மறுக்கும் இடத்துக்கு கிட்டத்தட்ட மக்களே பல நேரங்களில் மெதுவாக நகர்த்திக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். எல்லா நேரங்களிலும் மருத்துவர்களை மட்டுமே காரணம் சொல்ல முடியவில்லை. மக்களின் பதட்டம் குறைந்து நிதானம் வர வேண்டும். அதுதான் நாம் அடைய வேண்டிய முதல் தீர்வு” என்று பேசிக்கொண்டிருந்தோம்.

நம் ஊரில், பிரசவத்தின்போது குழந்தையை வெளித்தள்ளும்போது மலம், சிறுநீர் ஆகியவையும் கூடவே வெளிவரும் என்பதை விரும்பாமல் பிரசவத்துக்கு முன்பு தாய்க்கு எனிமா கொடுத்து வயிற்றை சுத்தப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இங்கோ பிரசவத்தின் போது எனிமா கூடக் கொடுப்பதில்லை. ”மலம், சிறுநீர்  வந்தாலும் அதை வெளித்தள்ளுங்கள். அதைச் சுத்தப்படுத்துவது எங்கள் வேலை. நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்கிறார்கள். மேலும் பிரசவத்துக்குப் பிறகு பிறப்புறுப்பில் தையல் போடும் பழக்கமும் முடிந்தவரையில் இங்கே இல்லை என்றாள்.

அதே போல ”இங்கு due date என்பது ஒரு கணக்கிற்காக மட்டுமே. நம் ஊரில் due date தாண்டிவிட்டால் எந்தத் தொந்தரவு இல்லாமலிருந்தாலும் சிசேரியன் செய்துவிடுகிறார்கள். ஆனால் இங்கோ due date முடிந்து வாரக்கணக்கில் ஆனாலும் சுகப் பிரசவத்துக்காக காத்திருக்கிறார்கள்.” என்றும் கூறினாள்.

Due date தாண்டிவிட்டால் மக்கள் பதட்டமடைந்து நிறைய கேள்விகள் கேட்டுத் தொந்தரவு தருகிறார்கள் என்பதாக ஒரு மகப்பேறு மருத்துவர் புலம்பியதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த அவசரமும், பதட்டமும், பயமும் மக்களிடம் இருக்கும்போது due date தாண்டியும் எதுவும் செய்யவில்லை என்றால் ஏதேனும் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் மருத்துவரை முழுக் குற்றவாளியாக்கிவிடுகிறார்கள். அந்த மருத்துவர் மிக நியாயமாக நடந்துகொள்ளும் அலோபதி மருத்துவராக இருந்தாலும் அவரால் சமாளிக்க முடிவதில்லை.

இம்மாதிரியான சிக்கல்கள் வணிக நோக்கத்துக்காக சிசேரியன் செய்யும் மருத்துவர்களைக் கேள்வி கேட்கும் உரிமையையும், சுகப் பிரசவம்தான் வேண்டும் நாங்கள் காத்திருக்கிறோம் என்று ஒருவர் அம்மருத்துவரிடம் கேட்கும் சூழலையும் மறுத்துவிடுகின்றன.

”வீட்டுப் பிரசவம்” பற்றி எல்லா நாடுகளிலும் பரிசீலனைகளும் விவாதங்களும் நிறைய இருக்கின்றன. ஆனால் அந்த விவாதங்கள் வீட்டுப் பிரசவங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குருட்டுத்தனமாக வீசப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல. வீட்டுப் பிரசவங்களில் குறைப்பாடுகள் என்ன, அதை எப்படிச் சரி செய்யலாம் என்ற நோக்கில்தான் அவை இருக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அமெரிக்க நாடுகளில் வீட்டுப் பிரசவங்கள் குறைவுதான். அப்படியிருந்தும் அங்கே வீட்டில் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி பெருமைப் பட்டுக்கொள்வதுமில்லை, அதில் சிக்கல்கள் வந்தால் முட்டி மோதிக் குற்றச்சாட்டுக்களை வீசுவதுமில்லை. அதை இயல்பாகச் செய்கிறார்கள். எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை, குழப்பமின்றி மிகப் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் கேள்வியின்றிப் பாதுகாக்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பெற்றுக்கொண்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவரின் இரண்டாவது குழந்தை வீட்டில் பெற்றுக்கொண்டதுதான் என்பதை வேறு எதையோ பேசும்போது இயல்பாகச் சொன்னார். அவ்வளவுதான். அதைப் பற்றிப் பிறகு நான்தான் ஆச்சரியப்பட்டுக் கேள்விகள் கேட்டுக் குடைந்துகொண்டிருந்தேன். அதற்கெல்லாம் அவரிடம் பெரிதாக எந்த பெருமையும் இல்லை. எந்த அலட்டலும் இல்லை. அவர் மருத்துவத்துறையில் இருப்பவர். அவருக்குத் தெரிந்த மேலும் சிலர் அப்படித்தான் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொண்டார்கள் என்றும் சொன்னார்.

இன்று மரபு நோக்கித் திரும்பும் நாம் அனைவரும் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சினை என்பது சுற்றத்தினரின் மாற்றுக் கருத்துகள். மரபு வழியைத் தேர்ந்தெடுத்த நண்பர்கள் சிலர், தன் மனைவிக்குக் கரு உறுதியானவுடன் மருத்துவரைப் பார்க்காவிட்டால் ஏதோ கருணையற்ற செயல் செய்வதாகக் கருதிக்கொண்டு சுற்றத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து அழுத்தம் தருகிறார்கள் என்றும் பயமுறுத்தும் வார்த்தைகளைச் சொல்கிறார்கள் என்றும் சொன்னார்கள்.

இது ஒரு புறமிருக்க மரபு வழியைத் தேர்ந்தெடுப்போர், உடனே எல்லாக் கட்டமைப்புகளையும் உடைத்தெறிந்துவிட்டு கடுமையான பிடிவாதத்துடன் மரபு வழியில்தான் நிற்பேன் என்று நடைமுறைத் தேவைகளைக் கூட பொறுப்பின்றி உதறிவிட்டுச் செல்வது அதே மன நிலையின் மற்றுமொரு பக்கம்.

மன நிலையை மாற்றாமல் எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சிக்கிக்கொண்டு சிதைந்துபோகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நவீன மருத்துவம் என்னும் ஒரு கட்டமைப்பு நம்மைச் சிதைக்கிறது என்று கூச்சலிடுவதில் எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் பதட்டத்தையும், பயத்தையும், பெருமையையும் மூலமாகக் கொண்டு அதைக் கட்டியமைத்தது நாம்தான். நம் மன நிலைதான். நம் மன நிலையிலும், அணுகு முறையிலும், புரிதலிலும் மாற்றத்தை ஏற்படுத்தாமல் நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் மீண்டும் மீண்டும் தவறான கட்டமைப்பைத்தான் உருவாக்குவோம்.

அப்படி மன நிலையில் மாற்றம் வரும்பொது, நிதானம் வரும்போது மரபுதான் இயல்பு என்பது புரியும். அங்கே நவீன மருத்துவம் தேவையே இல்லை என்பது தர்க்கங்கள் இன்றிப் புரியும். அதே சமயம் எப்படி அந்த மரபுக்கான கட்டமைப்பையும் ஒழுங்கையும் மீட்டெடுப்பது என்ற பொறுப்புணர்வும் இணைந்து வரும். பொறுப்பைத் துறந்துவிட்டு பெருமைக்குச் செய்தால் மரபோ, நவீனமோ இரண்டிலும் உங்களுக்கு ஒரே விளைவுதான்.

மரபு வழியைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு கற்றலுக்கான தேவையைக் காட்டிலும் அகற்றலே அதிகம் தேவைப்படுகிறது. அப்படியான மரபு நோக்கிய பயணத்தில் எப்பொழுது, எந்த சிக்கலில் உதவி தேவையென்றாலும் உடனே அகந்தையின்றி ஒரு உதவியை நாடி அதிலிருந்து மீண்டு பயணத்தைத் தொடர முடியும். மெல்ல மெல்ல மரபைக் கட்டியமைக்க முடியும்.

அதற்கான முதல் தேவை விருப்பம் மட்டுமே. விருப்பத்தில், பதட்டமும் அச்சமும் இல்லை. விருப்பத்தில் ஆழ்ந்திருங்கள். உங்களால் எதையும் புரிந்துகொள்ள முடியும். அச்சமின்றி, அருவெறுப்பின்றி கற்றுக்கொள்ள முடியும். விருப்பத்தில் நிலைத்திருங்கள். உங்கள் விருப்பங்கள் மிக எளிதாக நிறைவேற்றப்படும்.

மருந்தில்லாத மரபு வாழ்க்கை என்பது நம் விருப்பம். அதில் நிலைப்போம். அது நமக்கு வழங்கப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.