07/09/2018

பதிவான ஆவணங்கள் உரிய தேதியில் கிடைக்கவில்லையா? புகார் தெரிவிக்க ஏற்பாடு...


பதிவான ஆவணங்கள் உரிய நேரத்தில் திருப்பித் தரப்படாவிட்டால் புகார் தெரிவிக்க பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி...

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் பதிவு செய்யப்படும் போது அந்த ஆவணத்துக்குத் தேவையான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு உரிய ரசீது சார் பதிவாளரால் கையெழுத்திட்டு, ஆவணத்தினை பதிவுக்குத் தாக்கல் செய்தவர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆவணத்தைத் தாக்கல் செய்தவர் அல்லது ஆவணத்தைத் திரும்பப் பெற அதிகாரம் பெற்றவர் ஆவணத்தைத் திரும்பப் பெற நேரில் சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். ஏற்கெனவே அளிக்கப்பட்ட ரசீதை ஆவணத்தைத் திரும்பப் பெறும் போது அளிக்க வேண்டும். அப்போது, ஆவணத்தைத் தாக்கல் செய்தவர் அல்லது திரும்பப் பெற அதிகாரம் பெற்றவரின் விரல் ரேகை பெறப்படும். ஆவணப் பதிவின் போது பெறப்பட்ட விரல் ரேகை, மென்பொருளால் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இது சரிபார்க்கப்பட்ட பிறகே, ஆவணம் உரிய நபருக்கு திரும்ப அளிக்கப்படும்.

புகார் தெரிவிக்கலாம்: ஆவணம் திரும்ப வழங்கப்படும் நாள், நேரம் ஆகியன ஆவணப் பதிவின்போது வழங்கப்படும் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நாளில் சம்பந்தப்பட்ட நபர் சார் பதிவாளர் அலுவலகம் வந்து அசல் ஆவணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அசல் ஆவணத்தை ரசீதில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் திரும்ப வழங்காவிட்டால் 1800 102 5174 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

உரிய நாளில் ஆவணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து திரும்பப் பெறப்படாத நிலையில், அந்த ஆவணத்துக்கு பாதுகாப்புக் கட்டணம், ஆவணம் திரும்ப வழங்கும் போது வசூலிக்கப்படும் என குமரகுருபரன் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.