12/10/2018

பிராணயாமம் - (அட்டாங்க யோகம்)...


பிராணயாமம்...

ஐவருக்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.  -- 564

பஞ்சேந்திரிய சக்திகளாகிய ஐந்து வர்ணங்களையுடைய ஒளிகளுக்கு நாயகனாகவும், அவைகளிருக்குமிடத்திற்கு முதலாகவுமுடைய மூலாக்கினியான தான் அதிகமாகப் பிரகாசிக்கப் பிடித்து ஏறும் குதிரையாகிய பிரணவம் ஒன்று உண்டு.  அது சத்தியமான ஞான சாதனையை யுடையவர்களுகுப் பிடி கொடுக்கும்.  மற்றவர்களாகிய பொய்யருக்குப் பிடிகொடாமல் போய் குதித்துத் தள்ளிவிடும்.

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை.
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந்தானே.  -- 565

ஆரியனாகிய அக்கினியானது மிகவும் நல்லது.  சூரியன் சந்திரன் என்னும் இரண்டு குதிரைகள் இருக்கின்றன (அவைகளை) பிரகாசிக்கச் செய்துப் பிடித்துக் கொள்ளும் உபாயத்தை அரியவர்கள் கிடையாது.  கூர்மையான அறிவையுடைய நாதனாகிய குருவின் அருளைப்பெற்றால் சேர்த்துப் பிடிக்க வசப்பட்டுவிடும்.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

திசைகளோடு கூடிய உலகமானது அடங்கியிருக்கும் பிரணவத்தினிடத்திலிருந்து சூரிய கலையைப் பதினாறு மாத்திரை யளவாக மேலேற்றுதல் பூரகம்.

வாமபாகத்திலுள்ள சந்திர கலையை முப்பத்திரண்டு மாத்திரையாக கல்ல வைத்தல் ரேசகம்.

பிரணவத்தின் நடுவீட்டில் சூரிய சந்திர கலைகளை அறுபத்திநாலு மாத்திரையளவு அசைவற்று நிறுத்தல் கும்பகம் ஆகும்.

பூரகம்:  பூரிப்பை அதாவது கலை (ஒளி) விரிவை செய்வது.

ரேசகம்: சூரிய கலையோடு, சந்திர கலையை ரேசிக்க அல்லது கலக்கும்படி செய்தல்.

கும்பகம்: பிரணவமாகிய கும்பத்தின் அகம்மென்னும் நடு வீட்டில் இரண்டு கலைகளையும் (சூரிய ஒளி, சந்திர ஒளி) சேர்த்தல்.

பிராணன் வேறு, பிராணனின் அசைவினால் ஏற்படும் வாயுவேறு.  வாசி என்பதைப் பாமரர்கள் மூக்கில் வரும் கழிவு பதார்த்தமாகிய வாயுவென்று உரை செய்வது அடாது.  அப்படி உரை செய்வதினாலே யோகமானது பாமரர்களால் அருவருக்கப்படுகிறது.

இம்மந்திரத்துக்கு மேற்கோளாக முன் ஔவையார் செய்த குரலின் சிவயோக நிலையில் முன்னமேரேசி முயலுபின் பூரகம் பின்னது கும்பம்பிடி.

முதலில் இரேசகதைச் செய்து பிறகு பூரகத்தைச் செய்து கடைசியில் கும்பத்தைச் செய்ய வேண்டுமென்பது கருத்து.

உலகத்தார்  நினைத்துக் கொண்டிருக்கும் கழிவு பதார்த்தமாகிய உஸ்வாச நிஸ்வாசத்தை இந்த முறையில் ஏலாதென்பதைக் கவனிக்கவும்.

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே -- 577

பன்னிரண்டு கலையுள்ள சூரியனுக்கு பகலும், இரவும் இருக்கிறது.  அந்த சூரியனைப் பக்குவஞ் செய்யும் சாதகன் அறியவில்லையே.  அறிந்தபின் சூரியனுக்கு இரவும் பகலும் அற்றுவிடும்.

விளக்கம்:  பிராயணாயாமமாவது சத்தியம்சமாகிய பிராணனையும், சிவ அம்சமாகிய அபானனையும் பிரணவத்தின் மத்தியிலுள்ள விஷ்ணு ஸ்தானத்தில் சேர்த்து மேலெழுப்ப வொட்டாமல் தடுத்தலாகும்.

பிராணாபானனைத் தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் ஆசாரியன் மூலமாய்த் திருவடிகளைத் தரிசிக்க வேண்டிய தந்திரத்தை அறிந்து பிறகு அதன் மூலமாகச் சூரிய சந்திரர்களைக் கண்டு அவைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் உபாயத்தைச் செய்து அவை சேர்ந்தவுடன் எழும்பும் அக்கினியைக் கண்டு அதை மேலே நோக்கும்படி செய்தால் பிராணாபானனைக் காணக்கூடும்.

திருவடி என்பது எது என்பதை நமது  ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் மெய்ஞான உபதேசம் வாயிலாக எவ்வித ரகசியமுமின்றி உலக மக்கள் அறிய "திருவடி உபதேசம் " வீடியோவாக அளித்துள்ளார் கிளிக் செய்யவும்.

பிராணாபானனைச் சேர்க்கும் தந்திரம்...

பஞ்சேந்திரிய சத்திகளின் ஒளிகளுக்கு மூலகாரணமாக மூலாக்கினியானது அதிகமாய்ப் பிரகாசிக்கப் பிடித்து ஏறும்படியான பிரணவமாகிய குதிரையானது, உண்மையான யோக சாதனையை யுடைவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும்.

சூரியன், சந்திரன் என்னும் இரண்டு குதிரைகளையும் பிரகாசிக்கச் செய்யும் தந்திரத்தைச் செய்தால், அக்கினியின் பிரகாசதத்தைப் காணலாம்.

பட்சியைப் பார்க்கிலும் பறப்பதில் வல்லமையுடைய பிரணவத்தை மேலே கொண்டு போனால் தனக்குத்தானே ஆனந்தத்தைக் கொடுக்கும்.  அபானனை வெளிப்படுத்தி மேல்நோக்காகச் செலுத்தும்.  சோம்பலை ஒழித்துவிடும்.  பிராணனும் மனமும் விட்டுப் பிரியாமலழுந்திப் பிராணனிலுள்ள அசைவு நீங்கினால் பிறப்பு இறப்பு ஒழிந்து விடும்.  இதை விட்டுப் பிராணனுடைய நடையினால் ஏற்படும் பேசும் சத்தம் மாத்திரம் வெளிப்படுவதால் உண்டாகும் அற்பப் பெருமையையடைந்து உலகம் சந்தோஷிக்கின்றது.

திசைகளோடு கூடிய உலகம் அடங்கியிருக்கும் பிரணவத்திலிருந்து பிராணனாகிய சூரியகலையைப் பதினாறு  மாத்திரையளவாக மேலேற்றி மறுபடியும் பிரணவத்தின் மத்திய பாகத்தில் கொண்டு வந்து சேர்ப்பது பூரகமாகும்.

இடது பக்கத்திலுள்ள அபானனாகிய சந்திரகலையை முப்பத்திரண்டு மாத்திரையளவாக சூரியகலையோடு சேர்ப்பது இரேசகமாகும்.

இந்த இரண்டு கலைகளையும் பிரணவத்தின் மத்தியில் சேர்த்து அசைவற்றிருத்தல் கும்பகமாகும்.

பூரகம் பூரிப்பையுடையதாகும். 
இரேசகம் சூரியனோடு இரேசித்தலாகும்.
கும்பகம் பிரணவத்தின் மத்தியில் பிராணாபானனை லயிக்கச் செய்தலாகும். 

பிராணாபான வாயுக்களை இரேசக பூரக கும்பகாதிகளால் வாங்கிப் பிரணவத்தின் மத்தியில் பிரகாசிக்கும் வீட்டில் அடைத்து வைப்பதனால் முதியோனாகினும் இளையோனாய்ப் பளிங்குக் கல்லைப் போலாவான்.  மாத்திரைகள் அப்பியாசிகளுக்கு முதலில் உபயோகமானவை.

பார்வையை உபயோகப் படுத்துவதிலேயே எல்லா யோக தந்திரங்களும் அடங்கி இருக்கின்றன.  பார்வையைச் சூரியகலையினிடத்தில் நிறுத்தி, இடகலையினால் பூரகத்தைச் செய்ய, சூரியகலையானது அதிகப் பிரகாசத்தை அடையும்.  சங்குத்தொனி உண்டாகிற வரையில் சூரிய கலையைப் பார்வையோடு செலுத்திப் பூரகஞ் செய்ய வேண்டியது.

பிராணாபானன்களையும் பார்வையையும் மேல் ஏற்றுவதும் இறக்குவதுமாகிய வழியை அறிந்து கொள்பவர்கள் கிடையாது.  அறிந்து கொண்ட யோகிகளிடத்தில் எமனுக்கு வேலை கிடையாது.  பிரணவத்திற்கு மேல் பாகத்திலும், கீழ்பாகத்திலும், கலைகள் எழும்புவரை பூரித்து, லக்ஷ்மீகரம் பொருந்திய உந்திக்கமலத்தில், சூரிய கலைகள் ஆகிய இவைகள் சேரும்படி செய்தால் மாயையாகிய இருள் நீங்கப்பெற்று சிவத்தின் அருளை உடனே அடையலாம்.

பிங்கலையினால் சூரிய கலைகளைச் சந்திர கலைகளில் சேர்த்துப் பரவிமேலெழும்பும்படி பதினாறு மாத்திரை அளவு பூரிக்க வேண்டியது.  இடகலையினால் சந்திர கலைகளைச் சூரிய கலைகளில் கலக்கும்படி முப்பத்திரண்டு மாத்திரை அளவு இரேசிக்க வேண்டியது.  பிறகு இரு கலைகளும் பிரணவ பீடமாகிய உந்திக் கமலத்தில் சேரும்படி அறுபத்தினாலு மாத்திரை அளவாகக் கும்பிக்க வேண்டியது.

இவ்விதமாக எல்லாத் கலைகளும் சேர்ந்த உந்திக் கமலமானது கலைக் குறைவை அடையாதபடி சந்திரனால் அதிகமாக இரேசிக்க இடா, பிங்கலா, சுழிமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, அலம்புடை, புருடன், குரு, சங்கினி ஆகிய இந்த தசவித நாடிகளும் கனத்தை அடைந்துவிடும்.  அப்போது பிராணாபான வாயுக்கள் பிரணவ உச்சிக்குச் சென்று  பரிசுத்தமாகும்.  இதனால் தேகம் சிவந்த நிறத்தை யடைவதோடு சிவம் தேகத்தை விட்டுப் பிரியாது.  மேலும் ஐந்து இந்திரிய சத்திகளும் நக்ஷத்திர கலைகளுஞ் சேர்ந்து ஆக ஒன்பது கலைகளாகிய சத்திகளும் (நவசக்தி) பிரணவமாகிய வீட்டை ஏற்படுத்தி அதில் வகிப்பதற்காக ஓடிவரும்.  மறுபடியும் திரும்பிவிடும்.

இப்படி பலதடவைகளில் ஓடிவருவதும் திரும்பிப் போவதுமாயிருக்கும் சமயத்தில் பார்வையைத் தந்திரமாக மேல் நோக்கினால் எல்லாம் ஒன்று சேரும்.  அப்போது பன்னிரண்டு அங்குள அளவிற்குமேல் சென்று சாதகன் எட்டு அங்குல நீளத்தில்தன் பார்வையின் தந்திரத்தால் துண்டித்துப் பிரித்து விட்டால் அந்த நாளு விரற்கடை நீளமுள்ள கலைகள் ஒன்று சேர்ந்து பஞ்சாக்ஷர சொரூபமாக விளங்கி நிற்கும்.

இந்தப் பிராணாயாம அப்பியாசத்தினால் சூரிய சந்திர அக்கினிகளையும் பிரணவத்தையும் தரிசித்துப் பிரணவத்தின் மத்தியிலுள்ள உந்திக் கமலத்தையும் திறந்து விடலாம்.

உந்திக்கமலமே மௌன பீடமாகவும், நாபிக் கமலமாகவும், இருதய குகையாகவுமிருந்து திறக்கப்பட்டவுடனே ஞானச் செல்வங்கள் வெளிப்பட்டு விடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.