26/10/2018

சில சிகிச்சை முறைகள்...


தமிழ் மருத்துவ முறைப்படி இருபாலருக்குமுரிய சிகிச்சை முறைகள்...

மனிதகணம் எனப்படும் மானிட மருத்துவம்.

தேவகணம் எனப்படும் தெய்வ மருத்துவம்.

ராட்சச கணம் எனப்படும் நிசாசர மருத்துவம். 

என இவை முப்பெரும் பிரிவாகக் கூறினாலும், அவற்றின் உட்பிரிவுகளாக வேறு சிலவற்றையும் கூறலாம்.

பொதுவாக வேர்பாரு, தழைபாரு, மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரு என்பதற்கிணங்க மூலிகை மருந்துகளால் தீராப் பிணிகளை -பற்ப செந்தூரங்களினாலும், இவ்விரு முறைகளால் நீங்காப் பிணிகளை அறுவை, அக்கினி,காரம் இவற்றைக் கொண்டு நீக்க வேண்டுமெனவும் அறியவும்.

மானிட மருத்துவம்: இது தாவரங்களினாலான குடிநீர், சூரணம்,மணப்பாகு, இளகம், மாத்திரை, சுரசம், பிட்டு, வடகம், போன்றவற்றால் சிகிச்சை செய்வதாகும்.

தேவ மருத்துவம்: சகல பிணிகளும் இயற்கை, செயற்கை காரணங்களினாலும், சில துர் தேவதைகளினாலும் - சில பூர்வ சென்ம தீவினைகளினாலும் ஏற்படுகிறது.

குட்டம், சுவாசகாசம், சயம் போன்ற கொடிய பிணிகள், முற்பிறவியின் பயனோடு இணைந்தும், பிறவி இலக்கினம் - நட்சத்திரம் இவற்றின் அடிப்படையிலும் ஏற்படுவதாகும்.

இத்தகைய நோய்களுக்கு மருந்துகள் மட்டுமின்றி, தேவதைக் குற்ற நீக்க முறைகளும் தேவைப்படும்.

எனவே இது, பூர்வ கருமானு சாரத்தையே காரணமாகக் கொண்டு - தாது சீவ இனங்களாகிய இரசம், கெந்தி, பாடாணம், உப்பு, உலோகம், முத்து,  பவளம் போன்றவைகளினாலான பற்பம், செந்தூரம், சுண்ணம்,கட்டு, களங்கு, குளிகை, திராவகம், செயநீர் போன்ற உயர்ந்த மருந்துகளால் சிகிச்சை செய்வதாகும்.

இராட்சச மருத்துவம்: இது கத்தி, கத்திரி,  குறடு, சலாக்கை, போன்ற கருவிகளைக் கொண்டு அறுவை, கீறல், சுட்டிகை, குருதி வாங்கல், கொம்பு கட்டல், அட்டைவிடல், போன்ற முறைகளில் சதையை அறுத்து செய்யும் சத்திர சிகிச்சையாகும்.

இதை ஏன் பதிவு செய்கிறேன் என்றால் நமது குருமார்களாகிய சித்தர்கள் முப்பது பிரிவுகளாக பிரித்து மருத்து முறைகளை வகுத்துள்ளார்கள்.

உலகில் உள்ள  அனைத்து மருத்துவ முறைகளும் சித்தாவிலிருந்து பிரதியெடுக்கப்பட்டவை என்பதற்கே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.