08/11/2018

வறுமையில் உலகில் 33சதவீத மக்கள் இந்தியர்கள்...


வறுமை என்பது உணவு, நீர், உறையுள், கழிவுநீக்க ஏற்பாடுகள், நலம், கல்வி, தகவல் போன்ற அடிப்படைத் தேவைகளை நிலையாக அணுக முடியாத கையறுநிலையைக் குறிக்கிறது. ஒருவர் நாளுக்கு அ$ 1.25 கீழ் வாழ்ந்தால் அது தீவிர வறுமை என்று உலக வங்கி வரையறை செய்கிறது.

தற்போதைய நவீன யுகத்தில் வளர்ச்சியின் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதால் வறுமை பற்றிய புரிதலும் மாறியுள்ளது. எனவே பசியின்மையை மட்டும் வைத்து வறுமையை அளவிட முடியாது. உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், போதிய சுகாதார வசதிகள், ஊட்டச் சத்துகள், வருமானம், கல்வி போன்ற தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை தான் வறுமை எனப்படுகிறது. உலக வங்கி குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடைய முடியாத திறனற்ற நிலை தான் வறுமை என்கிறது. இந்தியாவில் வறுமை என்பது இன்று நேற்று உருவானதல்ல. சங்க காலந்தொட்டு இவ்வறுமை நம் சமூகத்தைத் தொடர்ந்து துரத்தி வருகிறது. தமிழ்ப் புலவர்கள் பலர் வானம்பாடிகளாகத் திகழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வளமானதாக இல்லை. வறுமையைத் தொலைக்க வள்ளல்களைத் தேடி அலைந்த புலவர்கள் ஏராளம். அறம் பாடிய அவ்வையார் கூட கொடிது கொடிது வறுமை கொடிது என உரக்கச் சொன்னார்.

உலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.150-க்கும் கீழ் உள்ளது. அதே போல 14 சதவீதம் பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.75-க்கும் குறைவாக உள்ளது. இவர்களால் எப்படிக் குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எனவே தான் உலகில் நிகழும் மரணங்களில் அதிகம் வறுமையால் ஏற்படுகிறது. உலகில் சுமார் 87 கோடிப் பேர் போதிய உணவின்றியும் 100 கோடிப் பேர் சுத்தமான குடிநீரின்றியும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய புள்ளி விபரங்களின் படி உலகில் ஏறத்தாழ 170 கோடிப் பேர் வறுமையிலிருப்பதாகவும் அதில் பாதிப் பேர் தெற்காசியாவிலும் கால்வாசிப் பேர் ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கின்றது. தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் இருந்தாலும் இந்தியாவின் தலையெழுத்தே வறுமைதான். உலக வங்கி அறிக்கைப் படி இந்தியாவில் கிராமப்புறங்களில் வறுமையின் அளவு 25 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 14 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டு மொத்தமாக 22 சதவீத மக்கள் இந்தியாவில் இன்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவின் வறுமைக்கு சாதியமைப்பு, சமூக அமைப்பு, பொருளாதாரக் கொள்கைகள், ஊழல் மற்றும் லஞ்சம், சுயநல அரசியல் என எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் 80 சதவீத ஏழைகள் கிராமங்களில் வாழும் நம் நாட்டில் வறுமை உயர்வதற்கான சில அடிப்படைக் காரணங்களான பாரம்பரியத் தொழிலான விவசாயம் அழியும் சூழ்நிலை. புதிய நிரந்தர வேலைவாய்ப்புகளைக் கணிசமான அளவில் உருவாக்க இயலாமை. வளர்ச்சியின் பயன்கள் உண்மைப் பயனாளிகளைச் சென்றடையாமை. அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்திக்குத் தேவையான உழைப்பில் பற்றாக்குறை. அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு, வருமான ஏற்றத்தாழ்வுகள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இயல்பாகவே இருக்கும் வறுமை நிலை வேறு. பேராசையால் உண்டாகும் வறுமை என்பது வேறு. இந்தியா இந்த இரண்டிலும் சிக்கித் தவிக்கிறது. ஆகவே தான் ஆப்பிரிக்காவில் உள்ள 26 வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சுமார் 42 கோடியே 10 லட்சம் பேர் இம்மாநிலங்களில் வறுமை நிலையில் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கிறது.

இன்று சுமார் ஐந்து பேரில் ஒருவர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள். இது 2010 இல் 1.2 பில்லியன் மக்கள் ஆகும். இந்தியாவில் சுமார் 33% பேர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள். 69% பேர் அ$ 2 கீழேயே வாழ்கின்றார்கள்.

தனிமனிதன் தொடங்கி அரசாங்கம் வரை எல்லாருமே சுயநலத்தால் ஆட்டிப்படைக்கப்படும்போது வறுமை வறுத்தெடுப்பதில் ஆச்சரியமே இல்லை! உதாரணத்திற்கு, வளமான நாடுகளின் அரசாங்கங்கள் உலகத்திலுள்ள வறுமையைப் போக்க அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால், தங்களுக்கு வாக்களித்திருப்பவர்களைத் திருப்தி செய்ய வேண்டும் என்றே நினைக்கின்றன. எனவே, பணக்கார நாடுகள் தங்கள் நாடுகளில் பயிர்களை விற்க ஏழை நாட்டு விவசாயிகளைத் தடை செய்கின்றன. அப்போதுதான், தங்கள் நாட்டு விவசாயிகளால் வியாபாரம் செய்ய முடியும் என நினைக்கின்றன. அதோடு, தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு ஏராளமாக மானியம் வழங்குகின்றன; இதனால், ஏழை நாட்டு விவசாயிகளுடைய பயிர்களைவிட இவர்களுடைய பயிர்கள் சீக்கிரமாக விற்பனை ஆகின்றன.

இன்றைய சூழ்நிலையில் வறியவர்களின் மூளைச் செயற்பாடுகளை பெரும்பாலும் பணக்கஷ்டங்கள் பற்றிய கவலைகளும் அழுத்தங்களும் ஆக்கிரமித்து விடுகின்றன. புத்திசாலித்தனமான முடிவுகளுக்கு மூளைச் செயற்பாடுகளில் கொஞ்சம்தான் வாய்ப்பு கிடைக்கிறது.

அவர்கள் மீண்டும் மீண்டும் வறுமையை நோக்கி தள்ளப்படுகிறார்கள். ஏழைகளை ஏழைகளாகவே வைத்துக்கொள்ள இந்த உலக கட்டமைப்பு வழிவகுக்கறது.

வறுமைக்குக் காரணம் : சுயநலமே உருவாக இருக்கும் மனிதர்களே. ஆம், மக்களும் சரி அரசாங்கமும் சரி, தங்கள் நலனிலேயே குறியாய் இருக்கிறார்கள். 

வறுமை இல்லா தமிழகம் உருவாகுமானால் அதுவே உண்மையான மக்களாட்சி. எனவே வறுமை ஒழித்து வளம் பெருக்கிட சூளுரைப்போம்.

தமிழர் ஆய்வுக் கூடம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.