30/11/2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் கூடுதல் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி...


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு 2019 மே 5ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்விற்கு இப்போதே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

வரும் நவம்பர் 30ம் தேதியுடன் (நாளை) இதற்கான கால அவகாசம் முடிகிறது. ஆனால் குறைந்த கால அவகாசமே கொடுக்கப்பட்ட காரணத்தால், பல மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கப்பட முடியாமல் போனது. முக்கியமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழக மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது.

இதையடுத்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க கோரியும், நீட் தேர்விற்கான வயது வரம்பை அதிகரிக்க கோரியும் பல மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் ஒன்றாக விசாரிக்கப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டிசம்பர் 7ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

நாளையுடன் நீட் தேர்வு விண்ணப்பத்தை அனுப்ப அவகாசம் முடிகிற நிலையில் மாணவர்களுக்கு இந்த உத்தரவு மகிழ்ச்சி அளித்துள்ளது. முக்கியமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழக மாணவர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.

மேலும் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையிலும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி இடஒதுக்கீடு இல்லாதவர்களும் 30 வயது வரை நீட் தேர்வு எழுதலாம்.

முன்பு இடஒதுக்கீடு உள்ளவர்கள் மட்டுமே 30 வயது வரை நீட் எழுத முடியும். இடஒதுக்கீடு இல்லாதவர்கள் 25 வயது வரை நீட் எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக மாணவர்களின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய வயது வரம்பை அளித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.