26/12/2018

திருப்பதியில் தேங்கியுள்ள 52 டன் வெளிநாட்டு நாணயங்களை மாற்ற முடியாமல் தேவஸ்தானம் திணறல்...


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் பிரதான உண்டியலில் ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்கள், தங்கம், வெள்ளிப்பொருட்கள், செல்போன் உள்பட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்திய ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கோவிலுக்குப் பின் பக்கமுள்ள, ‘‘பரகாமணி சேவா குலு’’ அறையில் உடனுக்குடன் எண்ணப்படுகின்றன.

இந்தியா மற்றும் வெளிநாட்டு சில்லரை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை மூட்டைகளில் கட்டி, வாகனங்களில் திருமலையில் இருந்து திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு, இந்திய சில்லரை நாணயங்கள் எண்ணப்படுகின்றன. வெளிநாட்டு சில்லரை நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் எண்ணப்படாமல் தேங்கி கிடக்கின்றன. அந்த நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் கோணிப்பைகளில் மூட்டை மூட்டைகளாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

தேங்கி கிடக்கும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை மாற்ற, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. மொத்த வெளிநாட்டுப் பணத்தில் 52 டன் நாணயங்களாகவே உள்ளன. அதில் மலேசிய நாட்டு சில்லரை நாணயம் மட்டும் 40 டன்னும், இதர வெளிநாட்டு நாணயங்கள் 12 டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

2003-ம் ஆண்டு எடை கணக்கில் கொடுத்து, வெளிநாட்டுப் பணத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வெளிநாட்டுப் பணத்தை மூட்டைகளில் கட்டி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வெளிநாட்டுப் பணம் எடை குறைவாக மூட்டைகளில் கட்டி அனுப்பப்பட்டதாக புகார்கள் எழுந்ததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதைத்தொடர்ந்து 2012-ம் ஆண்டு இ.டெண்டர் மூலமாக மலேசிய நாட்டு நாணயங்கள், பணத்தை மட்டும் இந்திய ரூபாயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடைமுறையும் பயனளிக்கவில்லை. பின்னர் ஒரு தனியார் வங்கி மூலம் வெளிநாட்டுப் பணத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. திணறுகிறது தேவஸ்தானம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.