15/12/2018

பிரபஞ்சம்...


இந்த பிரபஞ்சம் மிகவும் விசித்திரமானது. அழகானது. மர்மங்கள் நிறைந்தது. அனைத்து அதிசயங்களையும் தன்னுள் அடக்கியது. ஆனால் அதேசமயம் மிகவும் எளிமையானது, இயல்பானது...

அதன் எளிமையையும் இயல்பையும் நீங்கள் சரியாக உள்வாங்கி உணர்ந்து விட்டீர்கள் என்றால் உங்களைப்போன்ற வாழப்பிறந்தவர் இந்த பூமியில் இல்லை. நீங்களே இந்த உலகத்தை அனுபவிக்க பிறந்தவர், ரசிக்கப்பிறந்தவர், கொண்டாட பிறந்தவர் என்பதை உணர்ந்து விடுவீர்கள்.

இங்கு அழகான ரோஜாவுடன் சேர்ந்து தான் முள்ளும் இருக்கிறது. சேற்றில் தான் செந்தாமரையும் இருக்கிறது. இதை ரசிக்க வேண்டும் என்றால் அப்படியே ரசிக்கலாம் ஆனால் அதை கையாளவேண்டும் என்றால் அல்லது மலரை பறிக்க வேண்டும் என்றால் முள்ளை விலக்கி வைக்க உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். கையில் முள் படாமல் ரோஜாவை பறிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

உங்களை நோக்கி வரும் சூழ்நிலைகளும், வாய்ப்புகளும், வாழ்க்கையும் இதுபோன்றதே. அதில் நன்மை தீமைகள் அனைத்தும் கலந்தே இருக்கும் நான் அப்படியே சூழ்நிலையை ஏற்றுக்கொள்வேன் என்றால் நீங்கள் கஷ்டப்படுவதை தடுக்க யாராலும் முடியாது. இதுவும் ஒருவகை ஆனவமே.

சூழ்நிலையை பிரித்து கையாள தெரிந்திருக்க வேண்டும். தேவையானால் சூழ்நிலையை எதிர்த்து போராட தெரிந்து இருக்க வேண்டும். அவசியமெனில் சூழ்நிலையையே மாற்றவும் தெரிந்து இருக்க வேண்டும். தேவையில்லையெனில் அந்த சூழ்நிலையில் இருந்து விலகவும் தெரிந்து இருக்க வேண்டும். மாற்றவே முடியாது எனில் அப்படியே ஆனந்தமாக ஏற்றுக்கொள்ளவும் தெரிய வேண்டும்.

இந்த உலகத்தில் ரசனைக்கும், ஆனந்தத்திற்கும், இன்பத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் என்றுமே பஞ்சம் இருந்ததே இல்லை. உங்களால் அனுபவித்து தீர்க்க முடியாத அளவிற்கு இங்கு அனைத்து இன்பங்களும் கொட்டி கிடக்கின்றன. அவற்றை அனுபவிக்க தெரியாமல் நீங்கள் கஷ்டத்திலோ துக்கத்திலோ துயரத்திலோ புலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சூழ்நிலையை கையாள தெரியாத சூழ்நிலை கைதியாகி இருக்கிறீர்கள் என்று பொருள்.

சூழ்நிலை கைதியாக வாழ்பவன் ஆன்மிகவாதியாக இருக்க முடியாது. வாழ்வில் உள்ள அனைத்து இன்பங்களையும் மிச்சம் வைக்காமல் அனுபவித்து கொண்டாட பிறந்தவனே ஆன்மிகவாதி. வாழ்வு என்ன கேட்கிறதோ அதை அப்படியே கொடுப்பது இல்லை ஆன்மிகம். அந்த வாழ்வையே தனக்கானதாக மாற்றி கொண்டாடி மகிழ்வது ஆன்மிகம்.

இந்த உலகவாழ்வு தேனீக்கள் சூழ்ந்து இருக்கும் தேனைப்போன்றது. உங்களுக்கு தெளிவு என்ற நெருப்பை வைத்து தேனீக்களை கையாள தெரிந்தால் நீங்கள் வாழ்க்கை என்னும் தேனை உண்டு பரவசத்தில் ஆழ்வதை யாரும் தடுக்க முடியாது.

இவனே ஆன்மிகவாதி தனிமையையும் தியானத்தில் கொண்டாடுகிறான். வாழ்வை தனக்கேற்ற துணையுடன் கொண்டாடுகிறான். இயற்கையையும் கொண்டாடுகிறான். மரணத்தையும் ஆனந்தமாக வரவேற்கிறான். இவனுக்கு வாழ்வில் கஷ்டம் என்பது என்னவென்றே தெரியாது. வாழ்வை தொலைப்பது ஆன்மிகமாகாது. வாழ்வை வாழ்ந்து தீர்ப்பதே ஆன்மிகமாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.