30/07/2020

யார் இந்த பெரியார்?



இந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக ஒரு பிராமணராகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணம்தான் முதலில் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு.

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி எழுதியிருக்கும் நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்.

நான் முதன்முதலில் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் இதுதான்...

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழுக்காகப் பாடுபட்டவர்..

தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டாற்றியவர்..

பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்..

பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்..

இந்த எண்ணத்தின் காரணமாக ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள, கிட்டதட்ட 90 சதவீத புத்தகங்களைப் படித்தேன்.

அது மட்டுமல்லாமல், ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சமகாலத்தோடு வாழ்ந்த ம.பொ. சிவஞானம், ப. ஜீவானந்தம், தெ.பொ. மீனாட்சி சுந்தரம், உ. முத்துராமலிங்கத் தேவர், கி. ஆ. பெ. விசுவநாதம், அண்ணாத்துரை, காமராஜர், பாவாணர் போன்றவர்களெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய புத்தகங்களையும் படித்தேன்.

அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ- அந்த கருத்திற்கு-அந்த எண்ணத்திற்கு முரண்பாடாக ஈ.வே. ராமசாமி நாயக்கர் செயல்பாடும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டேன்.

அடுத்து, தாழ்த்தப்பட்ட சமூகத்துக்காக உழைத்த, ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி விமர்சித்து ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் எழுதலாமா?- இந்த எண்ணமும் சிலருக்குத் தோன்றும். அது இயற்கை.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் உயிருடன் இருக்கும்போது தலித் தலைவர்கள், தலித் எழுத்தாளர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை தாழத்தப்பட்டவர்களுக்கு விரோதி என்ற தன்மையில் சாடி வந்திருக்கின்றனர். இப்பொழுதும் தலித் தலைவர்கள், தலித் எழுத்தாளர்கள் அவரை தாழத்தப்பட்டவர்களுக்கு விரோதி என்ற தன்மையில் சாடி வருகின்றனர்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார் என்று சொல்லும் போது, அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்ல தாழத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எனக்கு உரிமையுண்டு.

அதேபோல ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் தாழ்த்தப்பட்டவர்கள் சமூகக் கொடுமைகளிலிருந்து விடுதலையடைந்தார்கள், சமூகத்தில் முன்னேற்றம் கண்டார்கள் என்று சொல்வார்களேயானால் அது வடிகட்டினப் பொய் என்பதை என்னால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும்.

ஷட்டாவதானம் வைரக்கண் வேலாயுத புலவர், பண்டிதர் அரங்கையதாஸ், பண்டிதர் க. அயோத்திதாஸ், வேம்புலி பண்டிதர், ஏ. பி. பெரியசாமி புலவர், முத்துவீர நாவலர், ராஜேந்திரம் பிள்ளை, திருசிபுரம் பெருமாள், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், ஜான் ரத்தினம் கோலார் ஜி. அப்பாதுரை, புதுவை ரா. கனகலிங்கம், என். சிவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்) டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களெல்லாம் தாழத்தப்பட்டவர்களுக்கு செய்த நன்மைகளில் 1 சதவீதம்கூட ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்ததில்லை என்பதுதான் சரித்திரம் நமக்குக் காட்டுகிறது.

ஆகவே தாழ்த்தப்பட்ட சமூகத்தவனாகிய நான் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப்பற்றி எழுதலாமா என்ற கேள்வி எழும்பினால் அந்தக் கேள்வி வெறுப்பினால் எழுப்பப்பட்ட கேள்வியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்தக் கேள்வியை விட்டுவிட்டு நான் ஆதாரம் இல்லாமல் எழுதியதாக யாராவது கருதினால் அவற்றைச் சுட்டிக் காட்டலாம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள் அவருடைய மறுபக்கத்தை மூடிமறைத்து விட்டார்கள்.

ஆகவே, அவர்கள் மூடிமறைத்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின் கடமையெனக் கருதி இந்தப் பண்யை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று கொண்டுவந்திருக்கிறேன். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் காலத்திலேயே அவரை விமர்சித்த ம. பொ. சிவஞானம், ப. ஜீவானந்தம், தெ. பொ. மீனாட்சி சுந்தரம், உ. முத்துராமலிங்கத் தேவர், கி. ஆ. பெ. விசுவநாதம், அண்ணாதுரை, காமராஜர், பாவாணர் ஆகியோர்களின் எழுத்துக்களை கட்டுரைகளின் நடுவிலும், பின்னிணைப்பாகவும் தந்திருக்கிறேன். இவை எல்லாம் என்னுடைய கருத்துக்களுக்கு ஆதாரம் சேர்ப்பவை.

இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர் கழக மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால் அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும்.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூல் ஒன்று வெளிவர இருக்கிறது என்பதை அறிந்து, ஈ.வே. ராமசாமி நாயக்கரை கடைசிவரை எதிர்த்த ஆன்மீகத் தங்கம் முத்துராமலிங்கத் தேவரின் அடியை ஓற்றி, இந்த புத்தகம் வெளிவர உதவியவர் பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் கே. ஏ. முருகன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக.

நான் இந்த நூல் எழுத எண்ணம் கொண்டதிலிருந்து பல நூல்களை எனக்கு வாங்கித் தந்து பல உதவிகளைச் செய்த எனது நண்பர் திரு. பிரகாஷ் எம். நாயர் அவர்களுக்கும், எனது ஆசான் என்று சொல்லக்கூடியவரும் என்னை ஊக்கப்படுத்தியவருமான திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், மற்றும் எனது நண்பர்கள் ஜி. சுரேஷ்குமார், சி. அரிசங்கர், ஆர். நாகராஜ், எம். மணிகண்டன், ஏ. நெப்போலியன் ஆகியோர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

- ம. வெங்கடேசன்.

(ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் நூலுக்கான முன்னுரை – நூலாசிரியர் ம. வெங்கடேசன் 2004ல் எழுதியது.)

-தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.