27/10/2021

சித்தராவது எப்படி - 35...

 


குண்டலினி சக்தி பயணம் - பாகம் பதினொன்று...

குண்டலினி சக்தி என்ன செய்கிறது ?

மூலதாரத்தில் ஒடுங்கி சுருண்டு கிடக்கின்ற அந்த சக்திதான், குண்டலினி சக்தி என ஏற்கனவே பார்த்தோம்.. அந்த குண்டலினி சக்தி விழித்து எழவும், ஓங்கி எழவும், செய்ய என்ன சூழ்நிலை இருந்தால் நடக்கும் என்பதை பல யோக ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளாமையால் அந்த குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப, படாத பாடு பட்டு இருக்கின்ற தேக சக்தியையும் விரையம் ஆகி, முடிவில் சோர்வும் தளர்வும் அடைகிறார்கள்..

ஏதோ மன கற்பனையில் சில நிழல் அனுபவங்களை பெற்று அற்ப சந்தோசம் அடைகிறார்கள்.. அந்த அனுபவங்கள் இம்மி அளவும் பயன் படவில்லை என்பது மிகுந்த காலம் கடந்தே உணர வேண்டி இருக்கிறது.. அதற்குள் தேகம் தளர்ந்து சீர் குழைந்து விடுகிறது..

குண்டலினி சக்தி எழுவதற்கும் ஓங்குவதற்கும் தடையாய் இருப்பது ஆதிக்க எண்ணங்களின் அழுத்தமே..

அந்த அழுத்தத்தில் குண்டலினி சக்தி ஒடுக்கத்திற்கே போகிறது..

சற்று விழிப்பு நிலையில் கோபம் பேராசை போன்ற எண்ண ஆதிக்கங்கள் தலை தூக்கும் போது சுவாசத்தின் மூச்சின் அழுத்தத்தை அடி வயிற்றில் உணரலாம்..

பொதுவாக பெரும் பான்மை நேரங்களில் நாம் அப்படியான அழுத்தத்தில் சதா காலமும் இருப்பதால் நாம் அடையாளம் தெரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கும்..

சுவாச ஒழுங்கின் சமயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறும் போது, பழைய அனுபவத்திலேயே இருந்த மனம் அந்த வித்தியாசத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது..

அதனால் சுவாச ஒழுங்கிலே கிடைக்கின்ற ஒரு இலகு தன்மையை கலைக்க மனம் சதா காலமும் விரும்புகிறது..

மனதை அடக்கிய விழிப்பு நிலையால் மேலும் மேலும் சுவாச ஒழுங்கு செய்யும் போது குண்டலினி சக்தி எழ தொடங்கி பிரபஞ்ச சக்தியை பெற தொடங்குகிறது..

இப்படி பெறப் படும் சக்திதான் அன்பு என அழைக்கப் படுகிறது..

இதில் அ என்பது அண்ட சக்தி என்றும், பு என்பது புடம் வைக்கப் பட்ட அதாவது பக்குவமாய் பதுங்கிய, புவி சக்தி என்றும், 'ன்' என்பது முடிவான இணைப்பு என்றும் குறிக்கும்...

அன்பு கொள் என தத்துவம் பேசுவதில் ஒரு பயனும் இல்லை.. அன்பு என்ற சக்தி இல்லாமல் அன்பு கொள்ள முடியாது..

எத்தனை சாஸ்திரங்களும் போதனைகளும் நெறிகளும் போதித்தாலும் அதனை செயல் படுத்த குண்டலினி எழுச்சியும், அந்த எழுச்சியால் கிரகிக்கப் படும் பிரபஞ்ச ஆற்றலும் சேர்ந்த அன்பு என்ற அற்புத சக்தி இல்லையேல் ஒன்றும் பயன் பெறாது...

சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் மனமற்ற நிலையான தோன்றா நிலையில் எண்ண ஆதிக்கங்களால் ஏற்படும் அழுத்தம் அகற்றப் படும் போது, குண்டலினி எழதொடங்குகிறது.. எழுந்த குண்டலினி ஒன்றே பிரபஞ்ச சக்தியை வாங்க தகுதி உடையது..

அண்ட சக்தியும் குண்டலினி சக்தியும் ஆண் சக்தி பெண் சக்தி போலவும், positive negative energy போலவும் செயல் படுகின்றன.. இதனால் அன்பு என்ற செயல் பாடு உருவாகிறது..

சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் வினாடிக்கு வினாடி உருவாகும் தோன்றா நிலையின் காரணமாக, குண்டலினி சக்தியின் எழுச்சியால், பெறப்படும் அண்ட ஆற்றலே நிகழ் நிலை சக்தி எனப்படுகிறது..

இந்த நிகழ்நிலை சக்திதான் சிவநிலை சக்தி எனப் படும்.. அதில் மட்டுமே அன்பு என்ற செயல் பாட்டிற்கான ஆற்றல் தோன்றும்..

அதனால் அன்பே சிவம் என்ற மிக பெரிய உன்னத பிரம்ம இரகசியம் தோன்றியது.. பிரம்மம் என்றால் படைத்தல்.. படைக்கப் பட்ட அனைத்தும், அதன் செயல்பாடுகளும் அன்பால் விளைவதும் நடை பெறுவதுமாகும்..

இப்படி குண்டலினி மேல் எண்ண ஆதிக்கத்தால் ஏற்படும் அழுத்தத்தை நீக்க கூடிய தோன்றா நிலையை தராத எந்த சுவாச பயிற்சியும் வீணே...

ஆனால் தோன்ற நிலையை பற்றி பேசும் யோகிகளே இல்லை போல் தெரிகிறது..

அதனால் தான் குண்டலினி மேல் அழுத்தம் நீங்காத பயிற்சியை செய்து பலன் இல்லாமல் போய் விடுகிறார்கள்...

இந்த சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் முற்றிலும் தோன்ற நிலை உருவாகும் பயிற்சியை நாம் நேரடி பயிற்சியில் கண்டோம்..

அதில் அளவற்ற பிரபஞ்ச ஆற்றல் கிடைக்கப் பெற்ற நிலையில் நாம் சந்திர கலையை இழக்காமல் மதி நிலையிலே நின்றால் மட்டுமே பெற்ற ஆற்றலை பயன் படுத்த முடியும்..

ஆகவே தான் சூரிய கலை எப்படி முக்கியமோ, அவ்வாறே அதனை பயன் படுத்தும் சந்திர கலையும் மிக மிக முக்கியம்..

தன்னை இழந்த மோன நிலையில் சந்திரகலை காணாமல் போய்விட்டால் தோன்றா நிலையில் பெற்ற ஆற்றலால் ஒரு பயனும் இல்லை.. சந்திர கலையும் சூரிய கலையும் இணைந்து செயல் பட்டு இருந்தால் மட்டுமே அன்பு என்ற மகா சக்தி உருவாகும் என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது...

மத வெறித்தனமும், மதத்தில் மிக இறுக்கமான பிடிப்பும், குண்டலினி சக்தியை எழ விடாமல் பண்ணுவதால், அன்பு குறைந்து படைப்பும் குறைந்து அழிவுக்கும், அராஜகத்திற்கும் வழி வகுக்கிறது..

அப்படி பட்டவர்கள் அன்பு செலுத்துவது போல் இருப்பது, நடிப்பின் நிமித்தமாக இருக்கலாம் அல்லது ஒரு காரியத்தை நிறைவேற்ற வியாபார நோக்கத்தோடு இருக்கலாம்.. உள் அன்போடு நிச்சயமாக இருக்காது..

தோன்றா நிலையில் உருவாகும் குண்டலினி எழுச்சியின் விளைவாய் உண்டான அன்பே உலகில் அமைதியை உருவாக்கும்.. அப்படியான மத அமைப்பே நமக்கு தேவை...

இதன் மூலம் கவர்ச்சியற்ற சுவாச ஒழுங்கின் மேன்மை நமக்கு புரியும் என நம்புகிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.