27/10/2021

பிராண சிகிச்சை...

 


இச்சிகிச்சையளிக்கும் முன், சிகிச்சை பெறுபவருக்கு இச்சிகிச்சை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை முதல்  சிகிச்சையின் போது தெரிவித்தல் வேண்டும்.  இதன் பின்னரே அவரின் முழுச் சம்மதத்துடன் இதனைச் செய்தல் வேண்டும்.

சாதாரண வைத்திய முறையில் சில சிகிச்சைகள் அவர்கள் உறவினர் அல்லது அவரது குடும்பத்தாரின் அனுமதியுடன் ஆரம்பிக்கபடுகின்றன. இதற்கு, அத்தனிப்பட்ட மனிதரின் தெளிவான மனச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலே நல்ல முடிவை, நல்ல நிவாரணத்தைப் பெற முடியும். அல்லாது போனால் விழலுக்கு இறைத்த நீர் போல பிரயோசனமற்றதாகும்.

முதலில் இறை சக்தி அல்லது இயற்கை சக்தியில் சிகிச்சை அளிப்பவருக்கு நம்பிக்கை வேண்டும்.  இதனைச் செய்பவர், இது தன் செயல் அல்ல, தான் ஒரு ஊடகம் அல்லது கருவி என்பதை தாமே உணர்ந்து அதனை சிகிச்சை செய்பவருக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும்.

அரியசக்தி ஒன்று பிரபஞ்சத்தில் இருந்து எம்மை இயக்கும்  பிராண சக்தியாக எம்மில் புகுந்து, எம்மூலம் சிகிச்சை பெறுபவரின் உடற்கூறுகளை வெவ்வேறு உடற் கவசங்களினூடாக அடைந்து, ஒரு சீரிய மாற்றத்தை உண்டாக்கி சிகிச்சை பெறுபவரின் உடற் சக்கரங்களில் ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் சீரான ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் ஓர் சீரான பிராண ஓட்டத்தை உண்டாக்கி பிராணா குறைந்த இடத்திற்குத் தேவையான பிராணாவை அளிப்பதன் மூலமும், பிராணா கூடிய பகுதிக்கு தேவையற்ற  பிராணாவை  நீக்குவதன் மூலமும், ஒரு சம நிலையை உருவாக்கி, நோய்களை அந்தப் பகுதிகளில் குணப்படுத்துகின்றது.

இச்சிகிச்சை, அதனைப் பெறுபவரின் முழுச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலும் இதனைப் பெறுபவரின் மனம்  இச்சிகிச்சையின் போது, இந்த அரிய சக்தியிலோ அல்லது இதனைச் செய்பவரின் மேலோ சந்தேகம் கொண்டால் இதனால் பயன் ஏற்படாது.

மேலும் மனதை ஒரு நிலையில் வைத்து அமைதியாக  இச்சிகிச்சையின் தாக்கத்தை உணர்ந்து, அனுபவித்து, அந்த அனுபவத்தை இதனைச் செய்பவரிடம்  தேவையெனில் தெரியப்படுத்துவதோடு நில்லாமல், மனத்தை சுற்றுப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அல்லது முற்றிலும் புறம்பான எண்ணங்களை மனதில் அலைய விட்டு, பிறவிடயங்களில் முக்கிய கண்ணாக இருந்து கொண்டால்  இச்சிகிச்சையினால் பயன் கிட்டாது.

இதனைச் செய்பவருக்கும் அதிருப்தியையும் சோர்வையுமே உண்டாக்கும்.

சிலர்  இச்சிகிச்சையின் தூய உயர் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் இதனை ஒரு மனோ வசியம் அல்லது மாந்த்ரீகம் (மந்திரம்) சம்பந்தமானது என்று தாமும் ஐயம் கொண்டு, பலரையும் தடுமாற வைக்கிறார்கள்.

இது அவர்கள் இது பற்றி சரியான அறிவை, அல்லது தகவல்களைப் பெறாததாலும், அல்லது  இச்சிகிச்சையினால் பலன் கிட்டாத சிலரின் கதைப் பரப்பலாலும் (gossip) ஏற்பட்ட விளைவேயன்றி  இச்சிகிச்சையில் எந்தவித கெட்ட தன்மையும் இல்லை.

ஒரு வைத்தியரிடம் (medical doctor) எவ்வாறு முழுமையாக அவரை நம்பி சிகிச்சை பெறுகிறோமோ, அதே போல்  இச்சிகி்ச்சையில், எம்மை ஆளும் ஒரு இயற்கைச் சக்தியிடமோ அல்லது அத்தகைய ஒரு பரம் பொருளிடமோ மனத்தளவிலாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.

அடுத்து  இச்சிகிச்சையைச் செய்பவரிடமும், முழுமையான நம்பிக்கையை, அவர் அச்சக்தியை வழிப்படுத்தி நம்மில் நன்மையை, தன்னலமற்ற முறையில் இந்த அரிய சக்தியை தம்மூடே கடத்தி அதனைத் தகுந்தவாறு சிகிச்சை செய்பவருக்காக உபயோகப்படுத்துகிறார், என்பதையும் புரிந்து கொண்டு, மனப் பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.  

இறைவன் ஒருவன் இருப்பதை நம்பாமல் இறை வழிபாடு அல்லது கோயில் வழிபாடு செய்வது போல், அல்லது வைத்தியரிடம் நம்பிக்கை வைக்காது அவரிடம் சிகிச்சை பெறுவது போல், அல்லது குருவின் அறிவை ஆற்றலை உணராது, மதிக்காது அவரிடம் பாடமோ, பயிற்சியோ பெறுவது போல் இப்பிராண சிகிச்சையின் போது, நம்பிக்கை வைக்காது சிந்தனையை அலைய விட்டால் பயன் கிடைக்குமா..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.