29/04/2017

சந்திர வழிபாடும்... சூரிய வழிபாடும்...


இந்த உலகில் இரண்டே இரண்டு வழிபாடுகள் மட்டும் தான் உள்ளன. ஒன்று சந்திர வழிபாடு, மற்றொன்று சூரிய வழிபாடு...

வழிபாடு வேறு, கோட்பாடு வேறு. நிறுவனப்படுத்தப்பட்ட கோட்பாடுகள் இன்று பல்வேறு மதங்களாக மக்களின் குருதியை உறிஞ்சி இம்மண்ணில் இயங்கி வருகின்றன..

சூரிய வழிபாடு...

இது கதிரவனின் அயனத்தைப் பின்தொடர்வதைக் குறிக்கும். இவ்வழிபாட்டைச் செய்வோர் முக்கோண வடிவிலான பெரு மேடுகளைக் கட்டி கதிரவனைப் பின் தொடர்வர்.

இவர்களுக்கு தை 1, சித்திரை 1, ஆடி 1, ஐப்பசி 1 ஆகிய தேதிகள் முக்கிய நாட்கள் ஆகும்.

சூரியன் உச்சம் அடையும் வேளையும், நாளும் இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

ஒரு சூரிய நாளில் நண்பகல் நேரத்தில் (12 - 2 ) இவர்கள் கோவில்களின்  நடையைச் சாத்துகின்றனர்.

அதே போல் ஒரு சூரிய ஆண்டில் நிகழும் இரண்டு சூரிய கிரகணங்களின் போதும் கோவில்களின் நடையைச் சாத்துகின்றனர்.

முக்கோண வடிவங்கள், கலசம், தங்கம்,  தெப்பக்குளம் போன்றவை இவர்களின் அடையாளங்கள். ஏழு நாட்களைக் கொண்ட வாரக்கணக்கை இவர்கள் பின் பற்றுகின்றனர்.

கதிரவன் ஒரு இராசிக்குள் நுழையும் நாளை மாதப் பிறப்பாக இவர்கள் கடைப் பிடிக்கின்றனர். சூரியன் உச்சமடையும் நாளை புத்தாண்டுப் பிறப்பாக இவர்கள் அறிவிக்கின்றனர்.

இவர்களின் சூரிய ஆண்டுக்கு 365.25 நாட்கள். இறந்த சூரிய வழிபாடாளர்கள் இறந்த உடலைப் எரிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்...

சந்திர வழிபாடு...

இது சந்திரனின் சுழற்சியைப் பின் தொடர்வதைக் குறிக்கும். இவ்வழிபாட்டைக் கடைப்பிடிப்போர் வெறும் கண்களாலேயே நிலவின்வளர் பிறையையும், தேய்பிறையையும் கண்டு அதற்கேற்ப நிலவைப் பின் தொடர்வர்.

மறைநிலவு நாளும், முழு நிலவு நாளும் இவர்களுக்கு முக்கியமான நாட்கள்.

மொட்டையடித்தல், சேவல்/கிடாய் வெட்டு போன்ற சடங்குகளை இவர்கள் மறைநிலவு நாளில் குலதெய்வக் கோவில்களில் செய்வர்.

சூலம், பிறை போன்றவை இவர்களின் அடையாளமாக உள்ளது. ஏழு என்ற எண்ணை பொதுவாகவே இவர்கள் வெறுக்கின்றனர். அதனால் ஏழுநாள் வாரக்கணக்கு இவர்களிடம் கிடையாது. சூரிய வழிபாடு செய்த அரசானால் இவ்வாரக் கணக்கு பிற்காலத்தில் திணிக்கப் பட்டிருக்கலாம்.

வளர்பிறை மற்றும் தேய்பிறையை மட்டும் பின்பற்றுவர். மறை நிலவு நாளன்று தவறமால் முன்னோருக்கு படையல் வைத்தல் சந்திர வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கம்.

தை மறைநிலவு நாள், ஆடி மறைநிலவு நாள் மற்றும் புரட்டாசி மறைநிலவு நாள் ஆகியவை முன்னோருக்குப் படையல் வைக்க இவர்களுக்கு முக்கியமான நாட்கள்.

தீமிதித்தல், அலகு குத்துதல் போன்ற உடலை வருத்திக் கொள்ளும் வழிபாடுகளை இவர்கள் செய்கின்றனர்.

மேற்கு வானில் மூன்றாம் பிறை தோன்றுவதை வைத்து இவர்கள் மாதப்பிறப்பை உறுதி செய்கின்றனர்.

சந்திர வழிபாட்டின்படி ஒரு சந்திர ஆண்டுக்கு 354 நாட்கள் தான் வரும்.

முக்கியமாக 99.99 % சந்திர வழிபாட்டினர் இறந்த உடலைப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.