29/04/2017

கற்கள் நகரும் அதிசயம் – மரணப் பள்ளத்தாக்கின் மர்மம்...


நம்ப முடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம் பவேண்டிய சில நம்பிக்கைகளை நம்ப மறுக்கச் செய்யும் போது அவை ஒரு நாள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் பல விடயங்களில் ஒன்றாய் மாறியதே இந்த மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்..

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘Death Valley National Park’ என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட ‘டிம்பிஸா’ எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும்.

டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு ‘கலிபோர்னியா தங்க நெருக்கடி’ காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் ‘Death Valley’ எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏனெனில் கலிபோனியா தங்க நெருக்கடி நேரத்தின் போது இந்த பள்ளத்தாக்கு வழியாக அமெரிக்கர்கள் அல்லாத குழுவொன்று கடந்து சென்றிருக்கிறது. அப்போது பயணித்தவர்களில் ஒருவர் இப்பகுதியில் வைத்து உயிரிழந்ததைத் தொடர்ந்து கனிய வள ஆய்வாளர்களால் Death Valley எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து 1850ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் குறித்த மரணப் பள்ளத்தாக்கில் ஆய்வுகள் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் பல சுரங்க ஆராய்ச்சிகள் மூலமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி 1933ஆம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஹுவரினால் 2 மில்லியன் ஏக்கர் பிரதேசமும் தேசிய ஞாபக சின்னமாக மாற்றப்பட்டது. மேலும் 1994ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் ஏக்கர் பிரதேசம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதுவே அமெரிக்கா 4ஆவது பெரிய தேசிய பூங்காவாகும்.

தற்போது இப்பிரதேசத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி டிம்பிஸா பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 1940ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட வாழ்விடங்களில் தண்ணீர் மற்றும் தொலைபேசி வசதிகளுடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சுற்றுப்பிரயாணிகளும் அங்கு சென்று வருகின்றனர். இதுவே இப்பிரதேசத்தின் மிகச் சுருக்கமான வரலாறு.

சரி, இதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது? நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா? அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்கில் இதுதான் நடைபெறுகிறது என ஆய்வாளர்களால் கூட அறிய முடியாத அளவிற்கு மர்மங்கள் அடங்கியிருப்பதே நிஜம்.

குறித்த மரணப் பள்ளத்தாக்கு பாலைவனத்திற்கும் மலைகளுக்கும் இடையில் காணப்படுகிறது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லாத அளவிற்கு பாலைவானத்தினைப் போன்று காட்சி தருகின்றது. ஆனாலும் கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராச்சியாளர்கள்.

இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. 1948 லேயே இத்தகவல் வெளியாகியதும் ஏன்? எப்படி? என்ற எண்ணிலடங்கா கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் படையெடுக்க அங்கு ஆரம்பித்தனர். 1972 – 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் கல் தனது நகர்வைத் தொடர்ந்ததே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் நகர்ந்தபாடில்லையாம். நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

இங்குள்ள கற்கள் மூன்று வருடங்களில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறது. இதனை நன்கு உணர முடிகிறது. ஏனெனில் அக்கற்கள் பணிக்கும் பாதையை கல்லின் சுவடுகளினூடாக தெளிவாகின்றது. கற்களின் பயணம் சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணிக் ஆரம்பித்து சமாந்தரமாக அப்பிரதேசத்தை சுற்றி வருகிறது.

இதேபோல சில சமயங்களில் தனியாக ஒவ்வொரு திசையிலும் பயணிக்கும். இதன்போது பின்னோக்கிய நகர்வினையும் சில சந்தர்ப்பங்களில் காணலாம். ஆனால் அதற்கான காரணத்தை மட்டும் கண்டு பிடிக்க முடியாதுள்ளது. ஆனால் அவை நகர்ந்துள்ள விதம், பயணித்த பாதை மட்டும் தெளிவாக இருக்கிறது. இந்த மரணப் பள்ளத்தாக்கின் அருகே மலைத் தொடர் ஒன்று உள்ளது. இம் மலையிலிருந்து உடைந்து விழும் கற்களே இந்த மரணப் பள்ளத்தாக்கு முழுவதிலும் நடமாடுகிறது. இக் கற்கள் சுமார் 10 ஆயிரம் அடி நகர்கின்றது. சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகரும்.

வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. பாரம் குறைந்த மிகச் சிறிய கல் ஆண்டொன்றுக்கு இரண்டரை அங்குலம் நகரும் அதே சமயம் 36 கிலோ கிராம் நிறையுள்ள பெரிய கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்குமான தொடர்புகள் எதுவும் இல்லை என்பதையே இவை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் இப்பகுதியில் கோடைகாலத்தில் சாதாரணமாக 49 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படும். இங்கு அதிகூடிய வெப்பநிலையாக 1913 ஜுலை மாதம் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது. வரட்சியான காலத்தில் இப்பிரதேசத்தில் வெடிப்புகள் விழுந்து அவ்விடங்களில் ஐஸ் படர்ந்திருக்கும்.

கோடை தவிர்ந்த காலங்களில் ஒரு சில வகையான உயிரினங்கள் தோன்றி மறைகிறது. ஆனால் தொடர்ச்சியாக இங்கு வாழும் உயிரினங்கள் என எதுவுமில்லை.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என்ன? கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களி மண் தட்டா காரணம்? என குழப்பம் இன்னும் தீரவில்லை. ஒரு வேளை காற்றினால் என்றால்? அதுவும் இல்லையாம் ஏனெனில் அங்கு கடும் காற்று வீசுவதில்லை. எனவே அதற்கும் சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க அங்கு அமானுஷ்ய சக்தி, ஆவி, பேய் என மரணப் பள்ளத்தாக்கு என்ற பெயருக்கு ஏற்றவாறு புரளிகளுக்கு மட்டும் குறைவில்லையாம்.

ஆனால் அங்கு சுற்றுலா சென்றவர்களோ சுற்றுலாவுக்கு சிறந்த இடம் என மெச்சிக்கொள்கிறார்கள். இருந்தாலும் மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது கூடவே கற்களும் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.