29/04/2017

தமிழகமே எதிர்பார்த்த மாயாண்டி குடும்பத்தார் ஒன்று சேரவில்லை... ஓபிஎஸ் அணி இன்று அறிவிப்பு...


அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினகரனின் கொட்டத்தை அடக்குவதற்காக அதிமுகவின் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் பேச தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இதை எடப்பாடி அணியினர் வரவேற்றனர், இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுக சிதறுண்டது. அத்துடன் தமிழக அரசை கவிழ்க்க தினகரன் சதி செய்வதாகவும் கூறப்பட்டது.

எனினும் எடப்பாடி அணியினர் முதலில் முனைப்பு காட்டினர். பின்னர் அடுத்தடுத்து ஓபிஎஸ் அணியினரை சீண்டி பார்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனால் கடுப்பான ஓபிஎஸ் அணியினர் வந்தால் வாங்க, இல்லையெனில் போங்க. அதற்காக எங்கள் மீது மூன்றாம் தர அரசியல்வாதிகளை போல் கருத்துகளை முன்வைக்க வேண்டாம் என்று கூறினர்.

இதுபோன்று இரு அணிகளும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்ததால் அதிமுக இணைவது சற்று கேள்விக்குறியாகவே இருந்தது.

பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேரும், கே.பி. முனுசாமி தலைமையில் 7 பேரும் நியமிக்கப்பட்டனர். இருந்தும் நல்ல நாள், அஷ்டமி, நவமி, முதல்வர் டெல்லி பயணம் என்று பேச்சுவார்த்தை தள்ளிக் கொண்டே போனது.

இந்நிலையில் தினகரன், சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் 30 பேரை கட்சியிலிருந்து துரத்த வேண்டும் என்றும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியினர் கறார் கோரிக்கை விடுத்தனர். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டவுடன் கட்சி அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் படங்கள், பேனர்கள் அகற்றப்பட்டது.

இதனால் ஓபிஎஸ் அணியினர் குளிர்ந்து போனதாலும், பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்து போனதாலும் அமாவாசை நாளன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல் கிடைத்தது.

ஆளாக்கு மாறுப்பட்ட கருத்துகளை தெரிவித்ததால் குழப்பம் நிலவியது. இதனால் எடப்பாடி அணியினர் யாரும் கருத்துகளை வெளியிடக் கூடாது என்றும் அதிகாரபூர்வ நிர்வாகி ஒருவர் மட்டும் கருத்துகளை கூற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நாம் இத்தனை முறை வலியுறுத்தியும் தினகரனும், சசிகலாவும் கட்சியிலிருந்து இன்னும் நீக்கப்பட்டாததால் ஓபிஎஸ் அதிருப்தி அடைந்தார். மேலும் நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ செம்மலை, எடப்பாடி அணியுடன் இணைய வேண்டாம் என்று நிர்வாகிகள் கூறியுள்ளதாகவும், எனினும் இதுகுறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.

சசிகலா, தினகரனை நீக்க பலமுறை கோரியும் அவர்கள் மௌனம் காத்து வருவதால் பெரும்பாலான ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி அணியினருடன் இணைய வேண்டாம் என்று கருத்து தெரிவித்து வருவதாக தெரிகிறது. ஓபிஎஸ் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில் தொண்டர்களின் விருப்பப்படி அந்த கோஷ்டியுடன் இணைய வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.

எனவே அதிமுக இணைப்பு கிடையாது என்று ஓ.பன்னீர் செல்வம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார் என்று தெரிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.