28/04/2017

பிரதமரையும் விசாரிக்கலாம்.. லோக்பால் சட்டத்தை உடனே அமல்படுத்துக.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு...


லோக்பால் சட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்பை, மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.

விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, லோக்பால் மசோதாவை தற்போதைய சூழ்நிலையில் அமல்படுத்த சாத்தியம் இல்லை என்றும், அடுத்து நடைபெறும் கூட்டத்தொடரில் லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசின் விளக்கத்தை அடுத்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், லோக்பால் விவகாரத்தில் உச்சநீதிமன்றமத்தின் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச் இன்று உத்தரவிட்டது.

லோக்பால் நியமனம் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நிலைப்பாட்டில் நியாயம் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. நியமனத்தை தாமதப்படுத்த அரசு முன்வைத்த காரணங்களையும் நீதிமன்றம் நிராகரித்தது.

16வது லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை. இதை காரணமாக வைத்து லோக்பால் நியமனம் தாமதமாகி விட்டது என்று மத்திய அரசு கூறிய வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், லோக் சபா சபாநாயகர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுதான் லோக்பால் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும், அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது விதிமுறை என்பதால் தற்போது லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் என யாரும் இல்லை என்பதை காரணமாக காட்டி மத்திய அரசு லோக்பால் அமைப்பதை தள்ளிப்போட்டு வந்தது.

ஆனால், 16-வது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லையென்றாலும் பிரதமரின் தலைமையிலான உயர் மட்ட குழு இன்னும் லோக்பால் அமைப்பை தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக இன்று தெரிவித்துள்ளது. லோக்பால் சட்டம் அதன் தற்போதைய வடிவத்தில் செயல்படக்கூடியது தான் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.