28/04/2017

கொட்டப்படும் மனித உறுப்புகள். குப்பைத் தொட்டியாக மாறும் தமிழகம். தொல்லையில் எல்லை மக்கள் - நக்கீரன் செய்தி...


அதிர்ந்து போய்க் கிடக்கிறார்கள் நெல்லை மாவட்டத்தின் கேரள பார்டரை ஒட்டிய தமிழக எல்லைப்புற கிராம மக்கள். காரணம், அண்டை மாநிலமான கேரளவாசிகளால் துன்பத்தையும் துயரத்தையும் அனுபவிக்கிறார்கள்.

இங்கு மட்டுமல்ல, டெல்லியிலும், நாதியற்றுப் போனவன் தான் தமிழன். 40 நாட்களுக்கும் மேல் டெல்லியில் போராடும், தமிழக விவசாயிகள், போராட்டத்தின் எல்லை வரை சென்று நிர்வாணப் போராட்டம் நடத்தியும் அது இந்தி வெண் பைஜாமா வாலாக்களின் கண்களை உறுத்தியதாகக் கூடத் தெரியவில்லை என்பது ஆணித்தரமான முன்னுதாரணம்.

நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் வரும், அய்யாபுரம் குளம் தொடங்கி மேற்கே கேரள பார்டர் வரையிலான புளியரை வரை 15 கி.மீ. தொலைவு நீண்டு கிடக்கிறது பார்டர் ஏரியா. எல்லைப் புறத்தின் இருபக்கங்களிலும் தமிழக, கேரள மாநிலங்களின் சுங்கச் சோதனை, வணிகவரி, போலீஸ் செக் போஸ்ட்கள் உள்ளன. இத்தனை கண்காணிப்பையும் தாண்டித்தான், மாநிலம் தாண்டிய அத்தகைய கொடூரம் தமிழர்கள் மீது திணிக்கப்படுகிற அவலம் அண்மைக்காலமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பகீர் சம்பவம் அய்யாபுரம் குளத்திலிருந்து ஆரம்பிக்கிறது. நீண்ட குளத்தின் கரைப் பக்கம் மூட்டை மூட்டையாகப் பிளாஸ்டிக் சாக்குகள் பரவலாக வீசப்பட்டுக்கிடக்கின்றன. அவற்றின் உள்ளே பாலீதீன் கவர்களால் பேக் செய்யப்பட்ட கழிவுகளைக் கொண்ட பேக்கிங்குகள். அவை அத்தனையும் கெமிக்கல்கள். வெயிலின் தாக்கம், தட்ப வெட்ப சூழல் காரணமாக அந்தப் பேக்கிங்குகளிலுள்ளவைகளில் காய்ந்து போன ஜவ்வு போன்ற பாகங்கங்கள். வெளியே வந்து விடாதபடி நீட்டாக மருத்துவ முறையிலான பேக்கிங் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

சர்வ ஜாக்கிரதையாகப் பேக்கிங் செய்யப்பட்ட அவைகளில் தங்களையும் மறந்து மருத்துவ அடையாளங்களை விட்டிருந்தார்கள். விடவில்லை நாம். அவைகளைக் கிளறியதில். LECHE ENTERG, GORDO. ALTEZA, என்ற மெடிக்கல் அட்டைக் குறிப்புகளுமிருந்ததைக் காணமுடிந்தது. வறட்சிகாரணமாக தண்ணீரில்லாத ஆள் நடமாட்டமில்லாத பெரியகுளத்தின் கண்மாயின் இரு புறங்களிலும் இப்படிக் கடாசப்பட்ட கழிவு மூட்டைகள் விரவிக்கிடந்தன. அண்டை மாநிலமாக கேரளாவின் உள் மாவட்டங்களிலிருக்கும் தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் மூலமாக அறுத்தெழுக்கப்படும் மனித சதைகள், மனித உறுப்புகளின் கழிவுகள் தான் இவைகள். அங்குள்ள மருத்துவமனைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு உறுப்புகளடங்கிய பேக்கிங்குகள் தான் இவைகள் என்று சொல்லி நம்மை அதிரவைத்தனர் அந்தப் பகுதியினர்.

இன்று நேற்றல்ல தொடர்ந்து இந்த அநியாயம் நடத்தப்படுது. சில சமயங்களில் இதிலிருந்து குடலைப் பிடுங்கும் நாற்றம் வீசும் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் நம்மிடம் பரிதாபமாகச் சொல்லிக் கொண்டிருந்த போது நமது போட்டோகிராபர் படமெடுத்தக் கொண்டிருந்தார். அப்போது, மருத்துவக் கழிவுகளைக் கொட்ட வந்த கவர் செய்யப்பட்ட குட்டியானை வாகனம் ஒன்று நம்மைக் கண்டதும் ரவுண்டடித்து விட்டுச் சென்று விட்டது. வீசப்பட்ட மூட்டைகளில், மீது வெட்டப்பட்ட வேலி முட்களைப் போட்டு முடியிருந்ததை நாம் பார்த்த போது, ரத்தச் சதையோடு வீசப்பட்டவைகளை மோப்ப வாசனை காரணமாக நாய்கள் கிளறித் தின்று விடக் கூடாது என்பதற்காக அப்படி வேலி முட்களைப் போட்டிருக்கிறார்கள். அந்தக் கழிவு உறுப்புகளைத்தின்றால் நாய்களுக்கு வெறி ஏறி விடுமே. வெயிலில் காய்ந்து விட்டால் அந்தப் பக்கம் நாய்கள் எட்டிப் பார்க்காது என்பதற்காகத்தான் அப்படி என்றார் அந்த நண்பர். இங்கிருந்து தமிழக எல்லை முடியும், எஸ் பெண்ட்டு கடந்து கோட்டைவாசல் வரையிலான மலைப்புற தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் இது போன்ற கழிவு மூட்டைகள் வீசப்பட்டிருப்பதை நாம் காண முடிந்தது.

கோட்டை வாசல் முடிந்து கேரள எல்லையின் ஆரம்ப புறமே ஜில்லென்று தொடங்குகிறது.

தமிழக கோட்டை வாசல் பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை நாம் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, அந்தப் பகுதியிலுள்ள கண்ணன், முத்து உள்ளிட்டவர்கள் நம்மைச் சூழ்ந்து கொண்டார்கள்.

சார் ஒரு நாள், ரெண்டு நாள் துயரமல்ல. மாசக்கணக்கா இதால நாங்களும் எங்க குடும்பங்களும், மனச் சித்ரவதையை அனுபவிச்சிட்டுவர்றோம். இந்தக் கழிவுக, வாந்தி பேதி குழந்தைகளுக்கு, காய்ச்சல், இருமலக் கௌப்புது தோலரிப்பும் சொரி சிரங்கும் வருதுங்க. பக்கத்திலுள்ள கேரளா நகரங்கள்லிருக்கிற தனியார் மருத்துவமனைகள்ல மனுசங்களுக்கு நடக்கற ஆபரேஷன் உறுப்புக் கழிவுக சதைப் பிண்டங்க, அதோட, கறிக்காக அறுக்கப்பட்ட அழுகிப் போன மாட்டு சதைகளோடு கூடிய எலும்புக, அழுகின மீன்கள், அறுக்கப்பட்ட கோழிக் கடசல்கள், கிரே தன்மை கொண்ட ரசாயனக் கழிவுகள் இப்படி அழுகி கெட்டுச் சீரழிகிற கழிவுப் பொருட்கள மினி லாரியில நிரப்பிக்கிட்ட வர்ற கேரள லாரிக்காரங்க ராவோட ராவா தமிழக எல்லையான எங்க பகுதியின் வழியோரக் கிராமங்க, சாலைகள், குளங்கள்ல கொட்டிட்டுப் போயிடுறாங்க. காலைல பாத்தா அந்த கழிசடைக. நாத்தமெடுத்து வீசும். ஊராட்சில, அரசாங்கத்திட்ட நாங்க எவ்வளவோ சொல்லிப் பாத்தோம். அவங்க திரும்பிப் பாக்கவே யில்ல. என்ன பண்ண. குடும்பங்க இதால நோய் நொடியில கஷ்டப்படுறத எங்களால பொறுக்க முடியல. நாங்களே சேர்ந்து அந்தக் கழிவு மூட்டைகளப் பொதைக்க வேண்டியிருக்கு. குளங்களல கொட்டுனத தீவைச்சு எரிக்க வேண்டியதாயிருக்கு. இந்தக் கழிவுகள நீக்குனாத் தான நாங்க குளத்து தண்ணிய விவசாயத்தக்கும், வீட்டு உபயோகத்துக்கும் புழங்க முடியும் அப்புடியும் கூட இதோட விஷக்கிருமிகளால உடலரிப்பு உண்டாவுது. சித்ரவதைய அனுபவிச்சிட்டிருக்கோம். இங்க கொண்டாந்து கொட்டுறதுக்குத் தமிழ் நாடு போலீசும் உடந்தையாயிருக்கு இதனால எங்க வாழ்வாதாரமே ஆடிட்டிருக்கு. நாங்க பொழைக்கவா யில்ல சாகவா?. தெரியலியே கண்கள் சிவக்க கதறுகிறார்கள். பறவன் பத்துப் பகுதியின் பார்வதி, ராமலட்சுமி, உஷா போன்றவர்கள்.

இது நீடிப்பதற்கான காரணமென்ன என்ற நம் கேள்விக்கு கோட்டைவாசல் எஸ்.பெண்டு பகுதிவாசிகள் சொல்வது அடிவயிற்றைப் பிசைகிறது. பக்கத்திலிருக்குற கேரளாவின் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் அறுவை சிகிச்சைகள் மூலம் அறுத்தெடுக்கப்படும் மனித உறுப்புக்கழிவுகள் மட்டும் லோடு கணக்கில் சேருகின்றன. அதுபோக அழுகல் மீன், மாட்டுக் கழிவுகள், பிறகழிவுப் பொருட்களை அவர்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்கள் பகுதியில் வீசி விட முடியாது அப்படிச் செய்தால் கிரிமினல் குற்றம். அபராதத்தோடு கூடிய தண்டனையும் உண்டு. சாதாரணமாக அங்கு பிளாஸ்டிக் பொருட்கள், கேரிபேக் வைத்திருந்தால் கூட மூவாயிரம் அபராதம். அதற்குப் பயந்து தான் அந்த மாதிரிக் கழிவுகளை டிஸ்போஸ் செய்வதற்காக ஒரு மருத்துவமனைக்கு ஐந்தாயிரம். பத்தாயிரம் என கழிவைப் பொறுத்து விலை வைத்தும், மற்றவைகளுக்கும் ஆயிரக் கணக்கில், வாங்கிக் கொண்டு கழிவுகளை அள்ளிக் கொண்டு வந்து எங்க கிராமங்கள்ல கொட்டிட்டுப் போயிடுறாங்க. லோடு ஒன்னுக்கு 40, முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பார்க்கும் லாரிக்காரர்கள் இதை ஒரு தொழிலாவே செய்யுறாங்க என்றவர், இத்தனை அதிகப்படியான தொகை எப்படி சாத்தியப்படுகிறது என்று தானே கேட்க வர்றீங்க, என்ற கேள்வியை எழுப்பியபடியே, “கேரளவாசிகளுக்குப் பணம் என்பது பிரச்சினையல்ல அது ஜூ.ஜூ.பி. வெளி நாடுகளிலிருக்கும் இந்தியர்களில் நம்பர் ஒன் இடத்திலிருப்பவர்கள் கேரளவாசிகள். எனவே பணம் என்பது அவர்களுக்குத் தண்ணீர் பட்டபாடு. இதைக் கொண்டே தமிழக செக் போஸ்ட்களை அடித்து விடுவார்கள்.

கோட்டை வாசலின் கேரள ஆரம்ப எல்லைப் புறத்தில் கேரள போலீஸ் செக் போஸ்ட் இருக்கும்போது அதைப் போன்றே நம் தமிழக போலீஸ் செக் போஸ்ட்டும் இருக்க வேண்டும். ஆனா தமிழக – கேரள பிரிவினையான 1956க்குப் பிறகிருந்தே தமிழக போலீஸ் செக் போஸ்ட் 5 கி.மீ. கீ.ழக்கே தள்ளியுள்ளது. அது தான் கேரள வாசிகளுக்கு வசதியாகிவிட்டது. இதனால் இடைப்பட்ட 5 கி.மீ. தொலைவிலிருக்கும். புறவன்பத்து எஸ் பெண்ட், ஸ்ரீமூலப்பேரி பகுதியிலிருக்கும் 300 தமிழ குடும்பங்களான நாங்க தான் துன்பத்தையும், இம்சையையும் அனுபவிச்சுக்கிட்டு அடிமைப்பட்டுக் கிடக்கோம். கழிவுகளைக் கொட்டவர்ற லாரிக்காரங்க 500க்கு ரெண்டாயிரத்த வீசிடுறதால தமிழக செக் போஸ்ட் போலீஸ் அவங்களுக்கு வாசல அகலமாத் தொறந்து வுட்டுர்றாங்க. உடந்தையாச் செயல்படுதாக. ஆனா நாங்க எங்களுக்கான கழிப்பறை கட்ட, கட்டுமானப் பொருளக் கூடக் கொண்டு வரமுடியல. அதுக்கு எஸ்.பி.ஆபீஸ்ல ஆர்டர்வாங்கிட்டு வான்னு சொல்றாங்க. சொந்த நாட்லயே சுதந்திரமில்லாமக் காயடிக்கடிக்கப்பட்ட அடிமையா சீரழியுறோம்யா. இலங்கைல தமிழர்க அனுபவிச்ச கொடுமய விட மேலான கொடுமய அனுபவிக்கோம். அரசியல்வாதிக எங்கள ஏமாத்திப் பொழைக்காக. விடிவு பொறக்காதா உடல் பதறச் சொன்னார்கள்.

மாவட்ட ஆட்சியரான மு.கருணாகரனைத் தொடர்பு கொண்ட நாம், இவைகளை முன்வைத்த போது, அக்கரையுடன் கேட்டவர். உடனே நடவடிக்கை எடுக்கிறேன் என்றார் ஆதரவான குரலில்.

ஒரு சில ஆயிரங்களுக்காக கடமையைச் செய்ய வேண்டிய காவலர்களே எமனுக்கு வெற்றிலைப் பாக்கு வைக்கிறார்கள்.

தமிழகம் குப்பைத் தொட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.