12/11/2017

8 ஆண்டில் இல்லாத அளவு சரிவு ஜிஎஸ்டி, சட்ட கெடுபிடியால் ஜொலிப்பை இழந்தது தங்கம் : உலக தங்க கவுன்சில் தகவல்..


ஜிஎஸ்டி மற்றும் பண மோசடி தடுப்பு சட்ட கெடுபிடி விதிகளால், இந்தியாவில் தங்கத்தின் தேவை கடந்த 8 ஆண்டில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலக அளவில் தங்கம் நுகர்வில் சீனாவை அடுத்து 2வது இடத்தில் உள்ளது இந்தியா. தொடர்ந்து இந்த இடத்தை தக்க வைத்துள்ளதற்கு, இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகமே காரணம். இதை குறைக்க தங்க பத்திரங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இருப்பினும் மக்கள் ஆபரணம் வாங்குவது குறையவில்லை.

கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்கம் செய்த அன்று ஒரே இரவில் நகைகள் விற்று தீர்ந்தன. அதன்பிறகு படிப்படியாக தேவை குறைய தொடங்கியது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது..

கடந்த ஜூலையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இதன் காரணமாக தங்க விற்பனை பாதிக்கப்பட்டது.

அதாவது முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தை விட தேவை 24 சதவீதம் சரிந்து 145.9 டன்களாக மட்டுமே இருந்தது.

இதுபோல் பண மோசடி தடுப்பு சட்ட விதிகளின்படி வாடிக்கையாளர் பான் உள்ளிட்ட சான்றுகளை சமர்ப்பிப்பதும் கட்டாயமானது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்த்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் சராசரி தேவை இந்தியாவில் 845 டன். இது கடந்த 2016ம் ஆண்டில் 666.1 டன்களாக இருந்தது. தேவை சரிந்து வருவதால் நடப்பு ஆண்டில் இந்த தேவை இன்னும் குறைந்து 650 டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் தீபாவளி பண்டிகையுடன், திருமண சீசன் துவங்கியுள்ளதால் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.