16/12/2017

தமிழர் வரலாறு பகுதி - 1...


(ஞாலமுந்திய நிலை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்...

முன்னுரை...

1. ஞாலமுந்திய நிலை..

ஞாலம் என்பது மக்கள் வாழும் உலகமாகிய இம் மாநிலம். 'பூமி' என்னும் வடசொல்லை வேண்டாது வழங்கியதனால், ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றுப் போயிற்று.

தென்சொல்லெனினும் தமிழ்ச் சொல்லெனினும் ஒக்கும்.

ஞாலநிலப்பாகம் இன்றுள்ளவாறு ஐந்து கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொன்றுதொட்டு இருந்ததில்லை.

ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana), அங்காரம் (Angara), பாலதிக்கம் (Baltica), அமசோனியம் (Amazonia) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒருசில தீவுகளாகவும் பகுந்திருந்தது.

காண்டவனம் ஆப்பிரிக்காவையும் கடகத் திருப்பத்திற்குத் (Tropic of Cancer) தெற்கிலுள்ள இந்தியாவையும் ஆத்திரேலியாவையும், அங்காரம் ஆசியாவின் வடகீழ்ப் பெரும்பகுதியையும், பாலதிக்கம் வட அமெரிக்காவின் வடகீழ்ப் பகுதியையும் கிரீன்லாந்து என்னும் பைந்தீவையும் ஐரோப்பாவின் தென்பகுதியையும், அமசோனியம் தென்னமெரிக்காவையும் தம்முட் கொண்டிருந்தன.

அரபிக் கடலும் வங்காளக்குடாக் கடலும் அன்றில்லை.

இந்துமாவாரியின் பெரும் பகுதியும் அத்திலாந்திக்க மாவாரியின் வடபகுதியும் நிலமாயிருந்தன.

நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதி மாவாரியொடு சேர்ந்திருந்தது.

அதனால், பனிமலைத்தொடர் (இமயம்) அன்று கடலுள் மூழ்கியிருந்தது..

2. எழுதீவுகள்...

ஒரு காலத்தில் ஞாலநிலப்பகுதி ஏழு கண்டங்களாகவும் இருந்ததாகத் தெரிகின்றது. அவை ஒன்றினொன்று தீர்ந்திருந்தமை யால் தீவுகள் எனப்பட்டன (தீர்வு-தீவு).

அவை பெருநிலப்பகுதி களாதலால் தீவம் என்றும் சொல்லப்படும் (தீவு-தீவம்).

வடமொழியாளர் தீவம் என்னுந் தென்சொல்லைத் 'த்வீப' என்று திரித்து, இருபுறமும் நீரால் சூழப்பட்டது எனப் பொருட் கரணியங் கூறுவர். தீவு என்பது நாற்புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியே.

ஒவ்வொரு தீவும் நிலைத்திணையால் (தாவரத்தால்) நிறைந்து ஒரு மாபெருஞ் சோலைபோல் தோன்றியதனால், பொழில் எனவும் பட்டது.

நாவலந்தீவு, இறலித் தீவு, இலவந்தீவு, அன்றில்தீவு, குசைத்தீவு, தெங்கந்தீவு, தாமரைத்தீவு என்பன எழுதீவுகள்.

"நாவலந் தீவே இறலித் தீவே
குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே
சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழ்பெருந் தீவும் ஏழ்பொழி லெனப்படும்"

என்பது திவாகரம்.

கிரவுஞ்சம், சான்மலி, புட்கரம் என்பன முறையே, அன்றில், இலவம், தாமரை என்பவற்றின் மொழிபெயர்ப்பான வடசொல்லாம். நாவல் என்பதைச் சம்பு என மொழிபெயர்த்தனர் வடவர்.

அன்றில் என்பது ஒரு பறவை வகை.
தெங்கந்தீவு என்பதையே எழுதீவுகளுள் ஒன்றாகத் திவாகரமும் பிங்கலமும் சூடாமணியும் கூறியிருப்பவும், அதற்குப் பகரமாகத் தேக்கந்தீவு என ஒன்றைக் குறித்ததோடு, அதைப் பிங்கலமென்றுங் காட்டியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி. தெங்கந்தீவு என்பதைத் தேக்கந்தீவு எனத் தவறாகப் பாடங்கொண்டு, அதற்கேற்பச் 'சாகத்வீப' என வடமொழியில் தவறாக மொழி பெயர்த்ததைச் சரிப்படுத்த வேண்டிச் சென்னை யகரமுதலி அவ் வழியை மேற்கொண்டது போலும்..

ஆரியர் குமரிநாட்டுத் தமிழர்க்குக் காலத்தால் மிகமிகப் பிற்பட்டவராதலின், எழுதீவுக் கருத்தைத் தமிழிலக்கியத்தினின்றே கொண்டிருத்தல் வேண்டும்.

தீவு என்னும் பெயர், நாவலந்தீவு ஆப்பிரிக்காவினின்றும் பிரிந்து போன நிலையைக் காட்டும்.

3. நாவலந்தீவின் முந்நிலைகள்...

1. பனிமலையும் வடஇந்தியாவும் இல்லாத இந்தியப் பகுதி, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத்தொடு அல்லது பழம் பாண்டிநாட்டொடு கூடியது.

2. பனிமலையொடு கூடிய இந்தியாவும் பழம் பாண்டிநாடும்.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி."
(சிலப்.11:19.22)

என்று சிலப்பதிகாரம் கூறுவதால், பழம் பாண்டிநாடு முழுமையும் இருந்த காலத்தில் பனிமலையும் இருந்தமை அறியப்படும்.

3. பழம் பாண்டிநாடு இல்லாத இந்தியா.
நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார்"
(மணிமே. 25:12).

4. குமரிக்கண்டம் (Lemuria)...

மறைந்த குமரிக்கண்டம் (Lost Lemuria) என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்குந் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதியிலுள்ள நிலப்பகுதியிலே நெடுந்தொலைவு சென்று பின் தென்மேற்காகத் திரும்பி 'மடகாசுக்கர்' என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது.

அம் மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் பெருமலை ஒன்றுமிருந்ததாகத் தெரியவில்லை.

இந்த மலையானது தென்கிழக்கு முதல் வடமேற்குவரை செல்லுகின்ற இமயமலையைப் போல வடமேற்குத் தொடங்கித் தென்கிழக்கிற் செல்லுகின்ற ஒரு பெரு மலைத்தொடராக இருந்திருப்பதாகத் தெரிகின்றது" (சிலப் : 8:1) என்று பேரா.கா. சுப்பிரமணியப்பிள்ளை வரைந்திருப்பதனின்று, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தென்வடலாக நீண்டிருந்ததென்றும், அதன் மேற்குப்பகுதி நெடுகலும் ஒரு பெருமலைத்தொடர் தொடர்ந்திருந்ததென்றும் அறியப்படும்.

"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி"
(புறம். 9)

என்று நெட்டிமையாரும்,

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும்"
(சிலப்.11:19-20)

என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், குமரிக்கண்டமும், அதன் தென்கோடியின் மேலைப்பகுதியிலிருந்த குமரிமலைத் தொடரும், அதனின்று பாய்ந்தோடிய பஃறுளியாறும் கட்டுச் செய்திகளல்ல வென்றும் உண்மையாயிருந்தவை யென்றும் அறியலாம்.

"தொடியோள் பௌவமும்" ( தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியம், சை.சி. நூ.ப.க. பதிப்பு) என்னும் சிலப்பதிகாரத் தொடரின் உரையில், "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலைநாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும்" என்று அடியார்க்குநல்லார் குமரிக்கண்டப் பகுதியாகிய பழம் பாண்டி நாட்டைப் பகுத்துக் கூறியிருப்பதும், கட்டுச்செய்தியா யிருக்க முடியாது.

"காலமுறைப்பட்ட உண்மைகளைக் கொண்டு, இற்றை மலையத் தீவுக் கூட்டம் முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேசு கூறியுள்ள முதன்மையான சான்று சிறப்பாக உவகையூட்டத்தக்கது.

பொருநையோ (Borneo), சாலி (Java), சுமதுரா(Sumatra) என்னும் பெருந்தீவுகளைக் கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால் ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.

ஒருகால், சற்று முந்திக் கூறிய குமரிக் (Lemuria) கண்டத்தோடும் அது இணைக்கப்பட்டிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிசு, மொலுக்காசு, புதுக்கினியா, சாலோமோன் தீவுகள் முதலியவற்றைக் கொண்ட கீழைப் பிரிவாகிய ஆத்திரேலிய-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் ஆத்திரேலியாவுடன் நேரே இணைக்கப் பட்டிருந்தது."

"செடிகொடிகளிலும் உயிரிகளிலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிக நெருங்கிய ஒப்புமைகளைக்கொண்டு, திருவாளர் ஓல்டுகாம் ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்ததென்று முடிபு செய்கின்றார்."

"இந்தியர்க்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்து மாபெரிய பப்பரப்புளி அல்லது யானைப்புளி அல்லது மேனாட்டு (சீமை)ப்புளி (Baobab) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்தியத் தீவக்குறையின் (Peninsula) தென்கோடியில், அயல்நாட்டு வணிகம் நிகழ்ந்து வந்த சில துறைமுகங்களில், அதாவது குமரிமுனை யருகிலுள்ள

கோட்டாற்றிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கையிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னுங் காணப்படுகின்றன.

குமரிக்கண்ட நால்நிலைகள்...

1. ஆப்பிரிக்காவொடும், ஆத்திரேலியாவொடும் கூடிய பழம் பாண்டிநாடு.

2. ஆப்பிரிக்கா நீங்கிய பழம்பாண்டிநாடு.

3. ஆத்திரேலியாவும் நீங்கிய பழம்பாண்டிநாடு.

4. சிறிது சிறிதாய்க் குறைந்துவந்தபழம் பாண்டிநாடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.