16/12/2017

தமிழர் வரலாறு பகுதி - 3...


(நாகரிக மாந்தன் பிறந்தகம்) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்..

6. நாகரிக மாந்தன் பிறந்தகம்...

மாந்தன் நாகரிக நிலைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு. மலையும் மலைசார்ந்த இடமுங் குறிஞ்சி; காடும் காடுசார்ந்த இடமும் முல்லை; நாடும் நாடுசார்ந்த இடமும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். இவை ஆங்காங்குச் சிறப்பாகப் பூக்கும் பூ அல்லது வளரும் மரம்பற்றிப் பெயர் பெற்றன.

இயற்கை அல்லது அநாகரிக மாந்தன் விலங்கு பறவைகளை வேட்டையாடி வாழ்வதற்கேற்ற இடம் குறிஞ்சி; அதற்கடுத்த படியாக, ஆடுமாடுகளைச் சிறப்பாக வளர்த்து வாழ்வதற்கு ஏற்ற இடம் முல்லை; அதற்கடுத்த படியாக, பயிர்த்தொழிலைச் சிறப்பாகச் செய்து வாழ்வதற்கு ஏற்ற இடம் மருதம்; அதற்கடுத்த படியாக, மரக்கலங்களைச் செய்து கடல் வாணிகத்தை நடத்துவதற்கு ஏற்ற இடம் நெய்தல்.

இந் நால் நிலங்களும் மாந்தன் நாகரிக வளர்ச்சிக் கேற்றவாறு அடுத்தடுத் திருந்தது அல்லது இருப்பது குமரிநாடும் அதனொடு இணைந்திருந்த இற்றைத் தமிழகமுமே.

இற்றைத் தமிழ்நாட்டிற் போன்றே பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டிலும் மேல்கோடியிலேயே பெருமலைத்தொடரிருந்தது.

அதனால், நிலம் மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்தது. இந் நிலைமைபற்றியே, குடதிசை மேல் (மேற்கு) என்றும், குணதிசை கீழ் (கிழக்கு) என்றும் பெயர் பெற்றன.

ஒருவன் மேற்றிசையினின்று கீழ்த்திசை வரின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்நிலமும் முறையே அடுத்தடுத்திருக்கக் காண்பான். இந் நிலைமையைப் பிற நாடுகளிற் காண்டல் அரிது.

வெள்ளம் பள்ளத்தையே நாடுமாதலால், தமிழ்நாட்டில் பொருநையும் (தாம்பிரபரணியும்), வைகையும், காவிரியும் போலும் ஒரு பேரியாறு தோன்றும் மலையகத்தினின்று, ஒருவன் அவ்வாற்றுவழியே தொடர்ந்து வருவானாயின், நிலம் வரவரத் தாழ்ந்திருப்பதையும், குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலுமாக முறையே மாறுவதையுங் காண்பான்.

முதற்கால மாந்தன் இயற்கை யுணவையும் இயற்கை நீர்நிலையையுமே சார்ந்திருந்ததனாலும், மரஞ்செடிகொடி யடர்ந்த அடவியை யூடறுத்துச் செல்லும் ஆறுதவிர வேறு வழி அவனுக்கின்மையாலும், குறிஞ்சியினின்று நெய்தல்வரை பெரும்பாலும் ஆற்றோரமாகவே இடம்பெயர்ந்து வந்ததாகத் தெரிகின்றது. ஆறு என்னுஞ் சொல்லுக்கு வழியென்னும் பொருள் தோன்றியதும் இங்குக் கவனிக்கத் தக்கது.

7. தமிழன் பிறந்தகம்...

தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால், தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப்போன குமரிநாடே. அதற்குச் சான்றுகள்..

1. தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிடமொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென்மொழி வடக்கிற் செல்லச் செல்ல ஆரியப் பாங்கில் வலித்தும் உருத்தெரியாது திரிந்தும் சிதைந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கில் வரவர மெல்லோசை கொண்டும் திருந்தியும் விரிந்தும் இலக்கிய முற்றும் செறிந்தும் இருத்தலும்.

2. நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிடமொழி யின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென்சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேர் அல்லது வேர்ப்பொரு ளிருத்தலும்.

3. தென்மொழிக் குடும்பத்து இற்றை நாற்பெரு மொழிகளும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே வழங்குதலும்,   அவற்றுள் முழுத் தூய்மையுள்ள தமிழ் அந் நாட்டின் தென்கோடியிலிருத்தலும்.

4. தமிழ்நாட்டுள்ளும் தெற்கே செல்லச்செல்லத் தமிழ் திருந்தியும் சொல்வளம் மிக்கும் ஒலியெளிமையுற்றும் இருத்தலும், திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக்குண்மையும்.

5. வடநாட்டு முன்வட (பிராகிருத) மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வன்மெய்களின்றிப் பதினெண் மெய்களே தமிழிலிருத்தலும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனை யடுத்துள்ள தீவுகளிலும் வழங்குதலும்.

6. தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழான பின் ஏற்பட்ட தலைக்கழகம் குமரிக்கண்டத் தென்கோடிப் பஃறுளி யாற்றங் கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும், அக் கண்டம் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே முழுகிப் போனமையும்.

7. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்தமையும், தென் என்னும் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.

8. பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிமமும் (காரன்னமும்), ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத் தீவில் இன்றுமிருத்தல்.

9. வாணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) வகைகளுந்தவிர, மற்றெல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகை களுமாகிய முதற் பொருளும், இன்றும் தென்னாட்டிற்கு இயற்கையாக வுரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல்.

10. தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்), தென்மொழி, தென்னவன் ( பாண்டியன்), தென்கலை என்னும் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கிவந்துள்ளமை.

11. தென்வடல், தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றவன், தென்பல்லிவடபல்லி (தலையணிகள்) முதலிய வழக்குகளில் தென்திசை முற்குறிக்கப் பெறுதல்.

12. கடைக்கழகக் காலத்தமிழர் தம் இறந்த முன்னோரைத் தென் புலத்தார் எனக் குறித்தமையும், கூற்றுவன் தென்றி சைக்கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் எனப் பெயர்  பெற்றிருத்தலும்.

13. தென்மொழி வளர்ச்சியின் முந்துநிலைகளையெல்லாம் தமிழே காட்டிநிற்றல்.

14. கோதுமை, வாற்கோதுமை, உறைபனி, பனிக்கட்டி முதலிய குளிர்நாட்டுப் பொருள்கள் பண்டைத் தமிழிலக்கியத்திற் சொல்லப்படாமையும், தமிழர்க்கு வந்தேறிக் கருத் தின்மையும்.

15. கடைக்கழகப் புலவர் நாற்பத்தொன்பதின்மராயும் இடைக் கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மராயும் இருக்க, தலைக் கழகப் புலவர் மட்டும் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மரா யிருந்தமை.
குறிப்பு: தலைக்கழகப் பாண்டியநாடு தெற்கே ஈராயிரங் கல் தொலைவு நீண்டு பரந்திருந்ததனால், அதற்கேற்பப் புலவர் தொகையும் மிக்கிருந்ததென அறிக.

16. தமிழ்ஞாலத்தின் நடுவிடமாக, நடவரசன் தில்லை மன்று குமரி நாட்டுப் பாண்டியனால் அமைக்கப் பெற்றமை.
குறிப்பு: தில்லைமன்று வடபாற் பனிமலைக்கும் தென்பாற் குமரிமலைக்கும் நடுவிடையே அமைந்ததனாலேயே, பேருலகத்தின் நெஞ்சத்தாவை நிகர்த்ததாயிற்று.

இதன் விளக்கத்தை என் தமிழர் மதம் என்னும் நூலுட் காண்க..

தில்லைக்கு வடக்கிற் பனிமலையளவு தொலைவிலேயே தெற்கிற் குமரிமலையும் இருந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.