03/02/2018

பைந்தமிழ்ச் சித்தர் பா.வே. மாணிக்க நாயகர் பிறந்த நாள் 2.2.1871...


தமிழ்நாட்டில் தமிழ்ப்பல்கலைக் கழகம் நிறுவப்படவேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் ஒரு கட்டிடப் பொறியாளர் என்பது பலரையும் வியக்க வைக்கும். புகைப்படம் எடுத்தல், ஓவியம் வரைதல், தோட்டக் கலை,  குதிரையேற்றம், தையற்கலை, மோட்டார் வண்டி பழுது பார்த்தல் ஆகியவற்றில் பல்கலை வித்தகராக ஒருவர் திகழ்ந்தார். அவர் வேறு யாருமல்ல, தமிழறிஞர் என்று போற்றப்படும் பா.வே. மாணிக்க நாயக்கர் ஆவார்.

இவர் சேலம் மாவட்டம் பாகல்பட்டி என்னும் சிற்றூரில் 1871-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள்  2-ஆம் நாள் பாகல்பட்டி சமீன் குடும்பத்தைச் சேர்ந்த வேங்கடசாமி் - முத்தம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

இவருக்குப் பெற்றோர் மாணிக்கம் என்று பெயரிட்டனர். பிற்காலத்தில் இவர் பா.வே.மாணிக்க நாயக்கர் என்று அழைக்கப்பட்டார். " பா" என்பது பாகல்பட்டி ஊர் பெயரையும்,  " வே" என்பது தந்தை பெயரையும் குறிக்கும். இவரின் பெயருக்கு பின்னால் இருக்கும் "நாயக்கர்" என்ற பட்டம் சாதியை குறிப்பது அல்ல. இவரின் தாய்மொழி தமிழ். இவரின் முன்னோர்கள் விசயநகரப் பேரரசின் படைப்பிரிவில்  பணியாற்றி வந்ததால், பெயருக்குப் பின்னால்  "நாயக்கர்" எனும் பின்னொட்டை பயன்படுத்தி வந்தனர். இவரும் முன்னோர் மரபை பின்பற்றி பெயருக்கு பின்னால் " நாயக்கர்" என்று சேர்த்து கொண்டார். நாயகர்- என்ற தமிழ்ச் சொல்லே நாயக் , நாயக்கர், என்று பிறமொழிகளில் வந்தது. நாயகர் சொல்லுக்கு தலைவர் என்று பொருள். இனி அவரை கட்டுரையில் 'மாணிக்க நாயகர்' என்றே அழைப்போம்.

பாகல்பட்டியில் உள்ள ஒரு திண்ணைப் பள்ளியில் மணலில் எழுதிப் பழகி வந்தார் மாணிக்கம். அப்போது சோதிடன் ஒருவன் பன்னிரண்டு வயது வரை குழந்தையை வெளியில் அனுப்பினால் உயிருக்கு ஆபத்து என்று கூறிடவே, இதனை நம்பிய பெற்றோர் வீட்டிலேயே மாணிக்கத்திற்கு கல்வி புகட்டி வந்தனர்.

பதிமூன்றாம் வயதில் சேலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மாணிக்கம் சேர்க்கப்பட்டார். அந்த இளம்வயதில் தமிழில் கவிபாடும் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னர் சேலம் கல்லூரியில் எப்ஃஏ முடித்துவிட்டு, 1886இல் சென்னை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். இவரின் குடும்பம் ஜமீன் குடும்பம் என்ற போதிலும், வறுமையில் வாடியது. அப்போது மாணிக்கத்தின் கல்வி கற்கும் திறனை உணர்ந்த இரா.முனுசாமி நாயுடு என்பவர் இவரின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

பொறியியல் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணக்கராக தேர்ச்சி பெற்றார். கல்லூரி நிர்வாகம் இவருக்குத் தங்கம் பதக்கம் அணிவித்து கெளரவித்தது. 1896ஆம் ஆண்டில் இவருக்கு
பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்தது. பொறியியல் பணியில் இவர் சிறந்து விளங்கியதால் அடுத்தடுத்து பதவி உயர்வுகள் தரப்பட்டன. உதவிப் பொறியாளர், செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் என்று பதவி உயர்வு பெற்ற இவர் சேலம், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, குண்டூர், பெஜவாடா, வால்டேர் ஆகிய ஊர்களில் பணியாற்றினார்.

சேலம் மாவட்டம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேட்டூர் அணை இடத் தெரிவிலும், சென்னை பூண்டி நீர்த் தேக்கத் திட்டத்திலும் இவரின் பங்கு முதன்மையானது.

1912ஆம் ஆண்டு மாணிக்க நாயகர் திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது வடநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது, அவரின் நண்பரும், உறவினருமான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் அவர்களை உடன் அழைத்துச் சென்றார்.  அப்போது  தில்லியில்  ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் ஓவியத்தில் சிறந்து விளங்கிய வெ.இராமலிங்கனார் அவர்கள் மன்னரின் உருவப்படத்தை வரைந்து தந்ததோடு, தங்கப் பதக்கமும் பெற்றார். இதற்கு மாணிக்க நாயகரே முழுக் காரணம்.

1913இல் மாணிக்க நாயகர் சட்டக் கல்வி பயில இங்கிலாந்து சென்றார். அத்தோடு, அங்குள்ள தொழில் நுட்பப் பள்ளியில் காரை கட்டிட வேலை குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.  அதில் கட்டுமான பணிக்கு உதவும் 500 
கூட்டுக் கணக்குகளை ஒரே நொடியில் கண்டறியும் 'கால்குலோகிராப்'
( calculograph) கணக்கு முறையை அறிவித்தார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

மாணிக்க நாயகர் தமது பணியின் இடையே கிடைத்த ஓய்வு நேரங்களிலும், நீண்ட கால விடுப்பு காலங்களிலும் தமிழுக்கு  ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. மாணிக்க நாயகர் அவர்கள் மறைமலையடிகள் முன்னெடுத்த தனித்தமிழ் இயக்கக் கொள்கையில் பற்றுறுதியோடு விளங்கினார். மறைமலை அடிகள் இவரை தம் நாட்குறிப்பில், "இவர் ஓர் தனித்திறமார் பேரரறிஞர் (மேதை)" என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, மொழியியல், அறிவியல் தமிழ்ச் சொற்கள், கணக்கியல் ஆகிய துறைகளில் தமது ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார்.

தொன்மையும், தெய்வத்தன்மையும் கொண்ட மொழி தமிழே என்றும், தமிழால் உலக மொழிகளை எழுதவும் முடியும், எழுதிப் படிக்கவும் முடியும். உலகில் தோன்றிய அனைத்துக் கலைகளையும்  தமிழில் எழுதவோ, எழுதி அறியவோ முடியும் என்பதே மாணிக்க நாயகர் வந்தடைந்த முடிவாகும்.

1917இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்தியக் கழகத்தின ஆண்டு விழாவில் தமிழ் எழுத்துகளின் அமைப்பு முறைகளை விளக்கும் " தமிழ் எழுத்துகளின் நுண்மை விளக்கம்" ( The Tamil Alphabet its Mystic Aspect )எனும் தலைப்பில் உரையாற்றினார். இதில் உயிர் எழுத்துகளான பன்னிரெண்டு எழுத்துகளில் குறில் எழுத்தான 'ஒ'  எழுத்து சிறப்பானது என்றும், அதுவே எல்லா எழுத்துகளுக்கும் மூல எழுத்தும் என்றார்.  இதற்கு திருமூலரின்  "ஒமென்னும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஒமெனும்" என்று தொடங்கும் திருமந்திரப் பாடலை சான்று காட்டினார்.  தமிழ் எழுத்துகளில் தாம் கண்ட மறை பொருள் கொள்கை நிலைப்பாட்டை யாவரும் ஏற்க வேண்டும் என்று அறுதியிட்டு கூறவில்லை என்பதையும் தெளிவு படுத்தினார்.

மேலும், அவர் தமிழ் எழுத்துகளை ஒலியியல் (phonetics) என்றும், வடிவியல் (Form) என்றும் வகைப்படுத்தினார். ஒலி உச்சரிப்பை படித்தவர்கள்  தவறாகவும், கல்வி பயிலாத மக்கள் சரியாகவும் பயன்படுத்துவதாக கூறியதோடு, சென்னை பல்கலைக் கழகத் தமிழ் அகராதியில் தமிழ் உச்சரிப்பை ஆங்கில எழுத்துகளில் அச்சிட்டு இருப்பதை கண்டித்துப் பேசினார்.

எடுத்துக் காட்டாக, F, S - என்ற இரண்டு எழுத்திற்கு ஒலியையும், வடிவத்தையும் உருவாக்க இயலும். இதனை ஃபோர் - Four, ஃபவ்- Five என்றும், ஃசிக்ஃச் -Six, ஃசெவன் - Seven என்றும் எழுதுவதன் மூலம் வேறு அயல்மொழி எழுத்து வடிவங்களையும், ஒலிகளையும் தமிழில் கொண்டு வர முடியும் என்றார்.

"அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி" என்ற தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.

மாணிக்க நாயகர் தாம் நிகழ்த்திய சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். அதில் முதன்மையாக மூன்று கட்டுரைகளை குறிப்பிடலாம். இக்கட்டுரைகள் அக் கால மெய்யியல் அறிஞர்களிடமும், மொழியியல் அறிஞர்களிடமும் பெருந்தாக்கத்தை உண்டாக்கின. முதலிரண்டும் மெய்யியல் தொடர்பானது. அடுத்தது தமிழ் ஒலி இலக்கணம் பற்றியது. அது பின்வருமாறு:

1. The Tamil Alphabet and it's Mystic
2. The Evolution of Intellect in Co- ordination with God
3. Tamil Phonetics

2.10.1920இல் சேலம் நகராட்சி கல்லூரி மண்டபத்தில் "தமிழகம்" எனும் தலைப்பில் "இலெமூரியக் கண்டம்" குறித்த மாணிக்க நாயகரின் உரை அறிவியல் நோக்கோடு இருந்தது.

 மண்ணுலகம் தொடக்கத்தில் நெருப்பு உருண்டையாக இருந்ததென்றும், பின்னர் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியே முதலில் குளிர்ந்ததென்றும், அந்த குளிர்ந்த பகுதியில்தான் தமிழகம் அமைந்திருந்ததாகவும், அதன் தெற்கில் இருந்த பெயரே இலெமூரியா என்றும் குறிப்பிட்டு விட்டு, அது எப்படி கடலில் மூழ்கியது என்பதை பின்வருமாறு விளக்குகிறார்;

"ஆஸ்திரேலியா ஒரு விந்தையான நாடு. உலகின் மற்ற நிலப்பகுதியில் இருந்து அது முற்றிலும் மாறுபட்டது. இங்குள்ள தாவரங்கள், விணைப்பறவை, சுவர்க்கப் பறவை, ஏமு, கங்காரு முதலிய விலங்குகள் வேறெங்கும் காணப்படாதவை.

"ஆகவே ஆஸ்திரேலியா தொடக்கத்தில் நமது நில உலகத்துடன் சார்பு பெற்றிராத ஒரு நில உருண்டை என்பதே. இது ஒரு விண் வீழ் மீன் ( வானிலிருந்து விழுந்த பெரிய எரிகல்) இது இருவகை இயக்த்துடன் (1) தன்னைத்தானே பூமி சுற்றுதல், (2) கதிரவனன சுற்றி வருதல், கூடிய உலகின் மீது வீழ்ந்த போதுதான் இலெமூரியா கடலில் மூழ்கியது. அப்போதுதான், சிந்து கங்கைச் சமவெளி, இமயமலை, மத்திய ஆசியா முதலிய நிலப்பகுதிகள் வெளிக் கிளம்பின."

ஆஸ்திரேலியா விண்ணிலிருந்து தென்கடலில் விழுந்த ஒரு அயல்கோள் என்பதே அவரின் கருத்தாகும். மேலும், இலெமூரியா கடல் கொள்ளப்பட்ட போது அங்கு வாழ்ந்த மக்கள் வடதிசை நோக்கிச் சென்றதாக தமது உரையில் குறிப்பிடுகிறார். தற்போது இலெமூரியக் கண்டம் பற்றி விரிவான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் 90 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்க நாயகர் கூறியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

1923இல் ஆண்டு மு.இராகவையங்கார் எழுதிய "தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி" நூலினை மதுரை தமிழ்ச்சங்கம்  வெளியிட்டது.  இந்த நூலினைப் படித்த மாணிக்க நாயகருக்கு பல்வேறு ஐயங்கள் எழுந்தன. இவர் தாம் பணியாற்றி வந்த பெர்காம்பூரில் (ஒடிசா) இருந்து நான்கு கடிங்கள் எழுதினார். இவற்றுக்கு  மு.இராகவையங்கார் இரண்டு கடிதங்கள் வாயிலாக வினா வகையில்  பதில் எழுதினார்.  இந்த வினா தொடர்பாக நா.மு.வேங்கட சாமி நாட்டாரும் மாணிக்க நாயகருக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார்.

தொல்காப்பியர் கால மறை என்பது வடமொழி கலவாத தூய தமிழ் மறை என்பதே மாணிக்க நாயகர் எழுப்பிய வினாவின் கருத்தாகும். தொல்காப்பிய காலத்திற்கு முற்பட்டே வடமொழியும், தமிழும் கலந்து வந்துள்ளது என்பதே மு.இராகவையங்கார் தந்த விடையின் கருத்தாகும்.

மாணிக்க நாயகர் எழுதிய கடிதங்களைப் படிப்போருக்கு தொல்காப்பியத்தில் அவருக்கிருந்த ஈடுபாட்டை உணர்த்தும். அதனால்தான் என்னவோ, திரு.வி.க. இவரைப்பற்றி கூறுகிற போது, "தொல்காப்பிய கடலை நாளும் கடைவார்" என்றார்.

மூவரும் எழுதிய எட்டு கடிதங்களையும் தொகுத்து "தமிழ்வகைத் தொடர் - தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் பெயரில் 1924 இல் தமது சொந்தச் செலவில் மாணிக்க நாயகரே நூலாக வெளியிட்டார்.

1927ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டை பால சுப்பிரமணிய பக்தசபை ஆண்டு விழாவில் மாணிக்க நாயகர் "தமிழ் அறிவியல் சொற்கள்" எனும் தலைப்பில் உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு கா.சுப்பிரமணிய பிள்ளை தலைமை தாங்கினார். அக் கூட்டத்தில், " தமிழிலேயே அளவிறந்ந சொற்கள் இருக்கின்றன. தமிழ் இயற்கை மொழி. செயற்கை மொழிகளை இயற்கை மொழிகளோடு சேர்ப்பதால் தமிழ்மொழி தனது இயற்கை வளமிழந்து இறந்து விடும். தமிழ்மொழி்யானது, வடமொழி, ஆங்கில மொழி முதலியவற்றால் கலப்புற்றுக் காணப்படுவது பெரிதும் வருந்தத் தக்கதாகின்றது . இதனை நீக்கவே இச்சொற்பொழிவை ஈண்டு பேச எடுத்துக் கொண்டேன்" என்றார்.

தமிழ் அறிவியல் நூல்களில் வடசொல் கலப்பு கூடவே கூடாது என்றும், அது தெளிந்த நீருடைக் குட்டத்தில் (குளத்தில்) எருமைகளை ஓட்டிக் கலக்கிச் சேறாவதற்கு ஒப்பாகும் என்று அழுத்தந் திருத்தமாக இரண்டு மணிநேரம் பேசினார்.

ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் தமிழ்ச்சொற்களை பயன்படுத்தியதையும், அது உருமாற்றம் பெற்று இவ்வாறாக,
அலகை- ஆலோ, இஞ்சி- ஜிஞ்சர், முருங்கை- மொருங்கி, ஒதிய மரம்- ஒதினா, ஆடாதோடை- ஆடாதோடாவாசிகா, மாங்காய்- மேங்கோ என்று அழைக்கப்பட்டு வருவதையும் எடுத்துக் காட்டினார்.

மாணிக்க நாயகர் எழுதிய பெரும்பாலான  ஆங்கிலக் கட்டுரைகளையும், தமிழ்ச் சொற்பொழிவுகளையும்  சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான 'செந்தமிழ்ச் செல்வி' ஏடு வெளியிட்டது.

இவரது உரைகளை தமிழாக்கம் செய்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்
காழி.சிவ.கண்ணுசாமிப் பிள்ளை,
க.ப.சந்தோசம் ஆகியோர் ஆவார். நீதிக்கட்சி ஆதரவாளராகவும் மாணிக்க நாயகர் விளங்கியதால், அவரின் பல ஆய்வுக் கட்டுரைகளை "ஜஸ்டிஸ்" ஏடு வெளியிட்டது.

மாணிக்க நாயகர் பிராமணீய மத, மூடநம்பிக்கை கருத்துகளை எப்போதும் எதிர்த்துப் பேசுபவர். அது சமய நூல்களில் வெளிப்படும் போதும் எதிர்க்கத் தயங்காதவர். கம்ப இராமாயாணத்தை மிகச் சிறந்த தமிழிலக்கிய நூலாகக் கருதினாலும், அது ஆரியர்களுக்கு ஏற்றம் தரும்  நூலாகவே கருதினார்.

1919ஆம் ஆண்டு குன்னூர் ஆனந்தாஸ்ரமம் மகரிசி சிவத்தியானாந்த சுவாமிகள் வால்மீகி ராமாயணத்தில் இருந்து கம்பன் பிறழ்ந்து நிற்பதை குறிப்பிட்டு கடிதம் எழுதினார். அதுமுதலே இராமயண ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார். வால்மீகியின் நூலில் காட்டும் ஆரிய ஒழுக்கத்திற்கும், கம்பன் காட்டும் மக்கள் ஒழுக்கத்திற்கும் வேறுபாடு இருப்பதை உணர்ந்ததால் கடும் எதிப்பைக் காட்டினார்.

1931இல் சென்னை பல்லாவரம் பொதுநிலைக் கழகத்தில் மறைமலையடிகள் முன்னிலையில் "கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்" என்ற தலைப்பில் மாணிக்க நாயகர் உரை நிகழ்த்தினார். அது பின்னர் நூலாகவும் வெளி வந்தது.

பெரியாரும், அண்ணாவும் கம்பராமாயணத்தை எதிர்ப்பதற்கு முன்பே எதிர்த்தவர் மாணிக்க நாயகர். பெரியாரும் கூட  இவரிடமிருந்தே இராமாயண எதிர்ப்பை கற்றுக் கொண்டார்.  மாணிக்க நாயகரும் பெரியாரின் நெருங்கிய நண்பர்கள். ஈரோட்டில் வெ.இராமலிங்கனாரும், பெரியாரும் மாணிக்க நாயகரை சந்தித்து உரையாடுவது வழக்கம். அப்போது மாணிக்க நாயகர்  ராவணனை உயர்த்திப் பிடித்து "ராவாயாணம்" பேசுவதை பெரியார் ஆர்வத்தோடு கேட்டதாக வெ. இராமலிங்கனார் தாம் எழுதிய 'என்கதை' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மாணிக்க நாயகர் இறக்கும்வரை தமிழுக்கு உழைப்பதை நிறுத்திக் கொள்ள வில்லை. 1931ஆம் ஆண்டு திசம்பரில்  சென்னை திருமயிலை சன்மார்க்க சகோதரத்துவ சங்க விழாவில் "மொழி முதற் தமிழர் கடவுட் கொள்கை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்த இருந்தார். அவர்உடல்நலம் குன்றி வரமுடியாமல் போனதால் மகன் குணா மாணிக்கம் உரையைப் படித்தார்.

மொழி முதல் தமிழர் தமது கடவுள் கொள்கையை ஏடுகளில் எழுதவில்லை என்றும்,  தமிழ்மொழி அமைப்பிலே கடவுள் கொள்கை இருப்பதாகவும், கல்லிலோ, மண்ணிலோ தமிழர் வழிபாடு நடத்தவில்லை என்றும், தொல் காப்பியம் கூறுகின்ற  கொடிநிலை, கந்தழி, வள்ளி இந்த மூன்றிலும் இறைவன் உருவமற்று அருவமாக இருப்பதாகவும் உரையில் வாசிக்கப்பட்டது. இதிலிருந்து இறுதிக் காலத்தில் அவரின் பழைய உருவ வழிபாட்டு நம்பிக்கையிலிருந்து விடுபட்டதைக் காணலாம்.

தம் வாழ்வின் இறுதிக்காலத்தில்  மாணிக்க நாயகர் சென்னையில் உள்ள தமது மாளிகையில்தான் ஓய்வெடுத்து வந்தார்.  ஒருநாள் தமது சிற்றுந்தை பழுதுபார்க்கும் போது அதன் எஞ்சின் சூட்டினால் காலில் புண் ஏற்பட்டது. சர்க்கரையும், குருதி அழுத்தமும் கூடிய நிலையில் புண் ஆறாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தமது அறுபதாம் வயதில் 25.12.1931 அன்று காலமானார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்தில் எழுதப்பட்ட கடைசி வாக்கியம் பின்வருமாறு:

"மண்ணில் மறைந்தாலும் மாணிக்கம் தன்னொளி குன்றாது
காற்றில் கலந்தாலும் கவின்மலர் தன் மணம் மாறாது"

மாணிக்க நாயகரின் தமிழ்த் தொண்டினை தலைவணங்கிப் போற்றுவோம்.

நன்றி:

1. பா.வே. மாணிக்க நாயக்கர்
- பா.அன்பரசு.

2. என்கதை - நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை.

3. தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்
- குன்றக்குடி பெரியபெருமாள்.

4. தனித்தமிழ் இயக்கப் புரவலர் பா.வே.மாணிக்க நாயக்கர்
-க.திருநாவுக்கரசு.
தனித்தமிழியக்க நூற்றாண்டு விழா
மலரில் எழுதியது (2016).

கட்டுரை வந்த இதழ்
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
சனவரி 16-31 (2018)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.