21/03/2018

உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு...


கி.பி ஏழாம் நூற்றாண்டில் வடக்கே ஆர்ய வர்த்தம் நிலைப்பெற்ற அதே காலக் கட்டத்தில் தெற்கிலேயும் சைவ வைணவ சமயங்களின் வாயிலாக ஆரிய வேள்வி நெறிகள் வளரத் தொடங்கின.

சமணம் மற்றும் புத்த சமயங்களை தனித்து எதிர்க்க திராணி இல்லாது வலுவிழந்திருந்த வேத நெறிக் கருத்துக்கள், சைவம் மற்றும் வைணவ சமயங்களின் வளர்ச்சியோடு இலைமறைக் காயாய் மீண்டும் வளர ஆரம்பித்தன. சைவ வைணவக் கருத்துக்களுடன் வேள்வி நெறிக் கருத்துக்கள் இணைக்கப்பட்டன. இணைத்தே பரப்பவும் பட்டன. வேத நெறிக் கருத்துக்கள் இருந்தமையால் வடக்கேயும் இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தமிழில் தோன்றிய இலக்கியங்கள் சமசுகிருதத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு வடக்கேயும் பரப்பப் படுகின்றன.

வெகு விரைவில் சைவ வைணவக் கொள்கைகள் வேறு... ஆரிய
வேள்விக் கொள்கைகள் வேறு என்ற நிலை மறைந்து இரண்டுக் கொள்கைகளும் ஒன்றே என்ற நிலை தோன்றலாயிற்று.இந்நிலையில் தமிழர்கள் பின் தள்ளப்படுகின்றனர்... ஆரியர்கள் செல்வாக்கினைப் பெற ஆரம்பிக்கின்றனர்.

"மேன்மையான நிலைக்கு வந்தாயிற்று...நல்லது!!! ஆனால் இந்த நிலை நிரந்தரமல்ல. இப்பொழுதே சில கேள்விகள் நம்முடைய கொள்கைகளைப் பற்றி எழுகின்றன. எனவே நம் நிலை எப்பொழுது வேண்டும் என்றாலும் மாறலாம்... ஆனால் மாறக் கூடாது. நாம் உயர்ந்தவர்கள். உயர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி..!" என்று ஆரியர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த வழி அவர்களின் கண்ணுக்குப் புலனாகின்றது.

'பிறவி சுழற்சிக் கொள்கை - செய்யும் செயலினைப் பொறுத்தே பிறவிகள்' என்ற புத்த சமணத் தத்துவமே அந்த வழி.

என்ன புத்த சமணத் தத்துவமா?... அச்சமயங்கள் தான் தங்கள் செல்வாக்கினை இழந்து விட்டனவே... பின் எவ்வாறு அவற்றின் கொள்கைகள் இவர்களுக்கு உதவி இருக்க கூடும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்பக் கூடும்.

உண்மைதான்... புத்தமும் சமணமும் தங்களின் செல்வாக்கினை இழந்து தான் இருந்தன. ஆனால் அவற்றின் மறுப்பிறவிக் கொள்கை மட்டும் மக்களிடம் அதன் செல்வாக்கினை இழக்காது நின்று இருந்தது. கடவுள் இல்லை என்ற நிலை கடந்து கடவுள் இருக்கின்றார் என்ற நிலை வந்தும் மக்கள் மறு பிறவிகளில் நம்பிக்கையினை கொண்டு தான் இருந்தனர்.

அந்த நம்பிக்கை தான் ஆரியர்களுக்கு அவர்கள் தேடிய வழியாய் அமைந்தது. அவ்வழியினை அமைத்துத் தந்தவர் தாம் ஆதி சங்கரர்.

"நாம் உயர்ந்தவர்கள்... ஆனால் எதனால் நீங்கள் உயர்ந்தவர்கள் என்றுக் கேட்டால் என்ன சொல்வது... அறிவு, பண்பு, வீரம் மற்றும் பொருள் போன்றக் காரணிகளால் நாம் உயர்ந்தவர் என்றுக் கூறினால் அவற்றில் நம்மைக் காட்டிலும் சிறந்தவர்கள் இருக்கின்றனர்... அப்பொழுது அவர்களும் உயர்ந்தவர்கள் ஆவார்கள்... நம்முடைய மேன்மை அப்பொழுது கேள்விக்குறி ஆக்கப்படும்... ஆனால் நம்முடைய மேன்மை கேள்விகளுக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்க வேண்டும்.அதற்கு மேன்மை நம் பிறப்பில் இருக்க வேண்டும். நான் பிறப்பால் உயர்ந்தவன்... நீ உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றால் என் இனத்தில் பிறந்து இருக்க வேண்டும்...இல்லையெனில் மன்னித்துக் கொள் நீ என்னை விடத் தாழ்ந்தவன் தான்...! ஆம்.. இது தான் சரி... நம் மேன்மையை யாரும் கேள்விக் கேட்காதிருக்க இது தான் சரியான வழி" என்றவாறே 'பிறவிச் சுழற்சிக் கொள்கையினை' தங்களின் தேவைகேற்ப மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார். மாற்றிக் கொள்ள ஆரம்பித்தக் காலாம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு.

"நீ முற்பிறவியில் செய்த செயலின் காரணமாகத் தான் இப்பிறவி. சென்றப் பிறவியில் பல நன்மைகள் செய்து இருந்தால் பிராமணனாகப் பிறப்பாய்... இல்லையெனில் செய்த பாவத்திற்கேற்ப பிறப்பாய்... சத்திரியனாய்... அல்லது வைசியனாய்... அல்லது சூத்திரனாய். இதுவே இறைவனின் நியதி" என்பதே அந்தக் கருத்து. மக்களை பிறப்பிலேயே பிரிக்கும் இந்தக் கருத்து அப்போதைய அரசியல் சூழ்நிலைகளால் நசுக்கப்படாது வளர்க்கப்படுகின்றது. இறைவன் பெயரினைச் சொல்லி மக்கள் தாழ்த்தப்படுகின்றனர். மக்கள் மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தோன்றிய சைவ வைணவத் தத்துவங்கள் ஆரியர்களால் திசை மாற்றப்படுகின்றன.

ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாக நிலை நிறுத்திக் கொள்ள நல்லதொருக் காலக்கட்டமும் அமைகின்றது. அது வரை இருந்த பல விடயங்களுக்கு அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன.

ஆரியர்களின் சட்ட நூலாக இருந்த மனு தர்மம், மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய சாசுத்திரமாக மாற்றப் படுகின்றது. பிராமணர்கள் என்ற சொல்லுக்கு அர்த்தமும் மாற்றப்பட்டு ஒரு புது பிரிவு உருவாக்கப்படுகின்றது.

சிவனைக் வணங்குபவர் - சைவர்.
பெருமாளை வணங்குபவர் - வைணவர். என்ற இந்த இரு மக்கள் பிரிவுகளுக்குள் புதிதாய், 'பிராமணன்' என்ற சொல்லுக்கு அர்த்தம் மாற்றப்பட்டு ஒரு புதிய பிரிவு உருவாகின்றது.
பிராமணன் - நான் பிரமன்.. அதாவது 'நான் கடவுள் (அகம் பிரமாச்மி)' என்றப் பொருள் கொண்ட பிரிவே அது.

இந்தப் பிரிவுகளுக்கு ஏற்ப புராணக் கதைகளும் மாற்றப்படுகின்றன. இவை அனைத்தினையும் செய்தவர் ஆதி சங்கரர். இந்தக் கொள்கையினை பரப்ப அவர் ஆரம்பித்த மடங்கள் தான் இன்றைய சங்கர மடங்கள்.

இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஆரியர்களுக்கு உதவிய தமிழர்கள் சற்சூத்திரர்கள் எனப்பட்டனர். இவர்களே இன்றைய உயர்சாதியினர்.

இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாது ஆரியர்களை எதிர்த்த தமிழர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர். இன்றைய தாழ்த்தப்பட்டோர் இவர்கள் தாம்.

மற்ற தமிழர்கள் எல்லாம் சூத்திரர்கள் எனப்பட்டனர். இவர்கள் தான் இன்றைய பிற்படுத்தப்பட்டோர்.

மலைக்கு தப்பி ஓடியவர்கள் மலைவாழ் சாதியினராயினர்.

இந்த நிலையில் ஒரு கேள்வி எழலாம்... 'இவர்கள் இவ்வளவு மாற்றங்கள் செய்து இருக்கின்றார்களே... இதனைக் கண்டித்து தமிழகத்தில் ஒருக் கேள்விக் கூட எழவில்லையா' என்று நீங்கள் கேட்கலாம்.

கேள்விகள் எழத்தான் செய்தன... மாற்றுக் கருத்துக்களும் வரத் தான் செய்தன. அந்த கேள்விகளை எழுப்பியவர்களுள் முக்கியமானவர்கள் நம் சித்தர்கள். அதனாலையே அவர்களை பஞ்சமர்கள் என்று ஆரியர்கள் கூறினர். ஆனால் தமிழகத்தில் அன்று சமசுகிருதம் ஆட்சி மொழியாக இருந்தமையால் (பல்லவர் ஆட்சி காலம்) தமிழ் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. மேலும் அரசியல் செல்வாக்கினால் இந்தக் கருத்துக்கள் மக்களிடையே சென்றடையாது மறைக்கப்பட்டன. சில நூல்கள் அழிக்கப்பட்டன... சில கருத்துக்கள் மாற்றப்பட்டன. இப்படிப்பட்ட காரணிகளால் பல கருத்துக்கள் மக்களிடையே சேராது மறைக்கப்பட்டன.

ஒரு வேளை பல்லவர்களின் ஆட்சியே தமிழகத்தில் தொடர்ந்திருக்கும் என்றால் அந்தக் கருத்துக்கள் இன்று நமக்கு கிட்டாமலே போயிருக்கக் கூடும். ஆனால் தமிழகத்தின் பொற்காலமும் வருகின்றது சோழனின் வாயிலாக... இராசஇராச சோழனின் வாயிலாக!!!

தமிழின் அனைத்து இலக்கியங்களும் சமசுகிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சமசுகிருதம் வளர்க்கப்பட்டுக் கொண்டு இருந்தக் காலக் கட்டத்தில், இராச இராச சோழனால் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு தமிழ் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது. கோவில்களில் தமிழர்கள் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். தமிழிலேயே இறைவனை வணங்குகின்றனர். தமிழ் பாடல்களே இசைக்கப் படுகின்றன. சித்தர் பாடல்கள் தொகுக்கப்படுகின்றன. சைவ வைணவ இலக்கியங்கள் முழுவதுமாக இயன்ற வரை தொகுக்கப்படுகின்றன. ஆரியர்களின் செல்வாக்கு தமிழகத்தில் குறைய ஆரம்பிக்கின்றது. தமிழ் மேன்மை அடைய ஆரம்பிக்கின்றது.

ஆனால் முழுமையான மேன்மை தமிழ் அடையவில்லை.ஏனெனில் சைவ வைணவ இலக்கியங்களைத் தொகுக்கும் பணியில் ஆரியர்களும் இருந்தனர.

பன்னிரு திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி ஒரு ஆரியர். எனவே தான் சம்பந்தரைப் பற்றி ஆறு பிரபந்தங்கள் பாடிய அவர் அப்பரைப் பற்றி ஒன்றே ஒன்றினை மட்டும் பாடி உள்ளார்.

அதேப் போல் 63 நாயன்மார்களைப் பற்றி பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் நூலில் பெறும் பகுதியை வேள்வி நெறிக் கருத்துக்களை வளர்த்த சம்பந்தருக்கே ஒதுக்கி உள்ளார்.

இது போன்ற செயல்களால் தமிழ் என்ன தான் வளர முயற்சித்தாலும் அதனுடன் இணைந்து இலைமறைக்காயாக வேள்வி நெறிக் கொள்கையும் ஆரியமும் வளர்ந்து கொண்டே வந்தன. முழுமையான வெற்றி கிட்டவில்லை என்றாலும் சோழனின் இந்த முயற்சிகள் காரணமாகத் தான் இன்று தமிழ் இன்னும் தனித் தன்மையுடன் இருக்கின்றது. இல்லையெனில் என்றோ சமசுகிருதத்தில் இருந்து தான் தமிழ் தோன்றியது என்ற கருத்தினை மறுப்பதற்கு நமக்கு விடயமே கிட்டாது போயிருக்க கூடும். ஆரியத்தினை எதிர்த்து உண்மையான நெறிகளைக் கூறிய சித்தர்களின் பாடல்களும் கிட்டாமலே போயிருக்க கூடும்.

என்ன ஆரியர்களை சித்தர்கள் எதிர்த்தார்களா?... வேள்வி நெறிகளையும் அவர்கள் எதிர்த்தார்களா என்று கேள்விக் கேட்கின்றீர்களா... அப்படி என்றால் திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்றையும் சிவவாக்கியரின் பாடல் ஒன்றையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அடுத்தப் பதிவில் அவற்றினை பார்ப்போம்... அதனுடனே குகை இடிக்கலகம், கோவிலில் சமசுகிருத அர்ச்சனை போன்றவற்றினைப் பற்றியும் பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.