24/03/2018

திருச்சியில் பாடத்தை கவனிக்காமல் இருந்த மாணவியை தலைமை ஆசிரியர் ஒருவர் மாட்டு ஊசியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


திருச்சி மாவட்டம் ஆலம்பட்டியை சேர்ந்தவர் ஜோசப். இவருக்கு 9 வயதில் தீனா மேரி என்ற பெண் இருக்கிறார். தீனா மேரி ஆலம்பட்டி அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ, பாடம் நடத்தி கொண்டிருந்ததாகவும், அதனை தீனா மேரி கவனிக்காமல் தனது வகுப்புத் தோழிகளுடன் கையில் மாட்டு ஊசியை வைத்து விளையாடி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ, மாணவி வைத்திருந்த மாட்டு ஊசியை பறித்து அதனை தீனா மேரியின் முதுகில் பலமாக குத்தியுள்ளார். இதனால் மாணவியின் முதுகு வீங்கி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

நாகர்கோவிலில் மாணவன் சட்டையை கழற்ற சொல்லி பள்ளி நிர்வாகி கொடுமைப்படுத்திய சில தினங்களில் திருச்சியில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர தொடர மாணவர்கள் தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகி ஆசிரியர்களை தாக்குவதாகவும், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் கல்வி ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.