17/07/2018

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி: தாமதமானால் ரூ. 1000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம்...


வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குப் பிறகு அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வருமான வரித் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு...

வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும். மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டுச் சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் ஆகியோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

தாமதக் கட்டணம்: வருமானவரி கணக்கை அதற்குரிய நாளான ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராதக் கட்டணம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமதக் கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்குப் பிறகு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.

மேலும் அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரேயொரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.

நாளை முதல் சிறப்பு கவுன்ட்டர்கள்: வரி செலுத்துவோர் தங்களது வருமானவரி கணக்கை செலுத்துவதற்கு ஏதுவாக, சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் செயல்படும் வருமான வரி அலுவலகத்தில் முன் தயாரிப்பு கவுன்ட்டர்கள் செயல்படும். இந்த கவுன்ட்டர்கள் வரும் திங்கள்கிழமை முதல் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.