23/07/2018

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி?


சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வி.கே.தஹில் ரமணியை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜிக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக விஜய கமலேஷ் தஹில் ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது வி.கே.தஹில்ரமணி மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி. தற்போது, மும்பை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இடம் காலியாக உள்ளதால் அந்த பொறுப்பையும் வி.கே.தஹில் ரமணி வகித்து வருகிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 1958-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தஹில் ரமணி பிறந்தார். 1982-ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து, மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் சிறந்து விளங்கிய இவர்,
அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றிய காலகட்டத்தில், மும்பை கே.சி.சட்டக் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

பின்னர் 1990-ஆம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றத்தில் உதவி அரசு வழக்குரைஞராகவும் , கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராகவும் பதவி வகித்துள்ளார். மேல்முறையீட்டு வழக்குகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற இவர், கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சுமார் 17 ஆண்டுகள் நீதிபதியாக அனுபவம் பெற்ற வி.கே.தஹில்ரமணியை, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்த அறிவிப்பை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.